பாலிவுட் வரை சென்று வெற்றிப் படம் இயக்கிவிட்ட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தனது சினிமா வாழ்வின் அஸ்திவாரமே தனது தந்தையால் போடப்பட்டது என்று மறைந்த தனது தந்தையைப் பற்றி நினைவுகூர்கிறார்.
பள்ளிக்கூட நாட்களிலேயே சினிமா ஆசை கொண்டிருந்த அவரை ஊக்கப்படுத்தியது அவரது தந்தை தான். பின்பு சென்னைக்கு வாய்ப்புக்கள் தேடி வந்தபோது ஊரிலிருந்து செலவுக்கு பணம் அனுப்பி பார்த்துக்கொண்டார் அவரது தந்தை. ஆனால் முருகதாஸின் முதல் படமான தீனா வருவதற்கு முன்பே அவர் தந்தை இறந்துவிட்டார்.
“அவர் இறப்பதற்கு முன் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருந்தபோது மரணப்படுக்கையில் இருந்த அவரின் உடல்நிலையைப் பற்றி ஒரு டாக்டரும் நர்ஸூம் சேர்ந்து கிண்டலடித்துக் கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட பொறுப்பில்லாத தன்மையால் என் மனதில் அன்று பட்ட வலியைத் தான் ரமணா படத்தில் பதிவு செய்தேன்.
அவருடைய இறப்புச் சான்றிதழைப் பெற லஞ்சம் கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன். ‘அப்போ மெதுவா வரும் வாங்கிக்கோ’ என்று சொல்லிவிட்டார்கள். ஒரு மாதம் கழித்து தான் சான்றிதழ் கிடைத்தது. இதுபோன்று என் வாழ்வில் என்னால் எதிர்த்து நிற்கமுடியாத விஷயங்களால் ஏற்பட்ட கோபத்தைத் தான் எனது ஹீரோக்கள் மூலமாக நான் வெளிப்படுத்துகிறேன்.” என்கிறார் முருகதாஸ்.