டைட்டில்ஸ் போட்டு முடிந்ததும், படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே விக்ரம்பிரபுவும், ப்ரியா ஆனந்த்தும் ஒரு ‘பப்’பில் சந்தித்துக் கொள்கிறார்கள். அடுத்த கணம் விக்ரம் பிரபு காதல் வயப்படுகிறார். அதனால் விக்ரம், ட்ரம்ஸ் சிவமணியின் ட்ரம்ஸ் வாசிப்பு நிரம்பிய ராக் வகைப் பாடலை கிடார் எடுத்துப் பாடி,
ஹீரோயினின் செல் நம்பரை வாங்குகிறார். உடனே அடுத்த காட்சியில் இரண்டாவதாக இருவரும் இன்னொரு ‘பப்’பில் ‘டேட்டிங்’குக்காக ‘மீட்டிங்’ பண்ணுகிறார்கள். குடல்நிறையக் குடித்து ‘மப்’பத்தாமல்(?!) தன் வீட்டுக்குப் போய் மீண்டும் குடிக்க விக்ரமைக் கூப்பிடுகிறார்
(இன்னா கலாச்சாரம்.. இன்னா கலாச்சாரம்..) பணக்கார மங்கை ப்ரியா ஆனந்த்.
நடு இரவில் ப்ரியாவின் அபார்ட்மெண்ட்டுக்குப் போகும் விக்ரம்பிரபு அங்கே அடுத்த ரவுண்ட் பார்ட்டியைத் தொடர்ந்து நடுவில் பாத்ரூம் போய்விட்டு வந்தால்… ப்ரியாவை யாரோ இருவர் கடத்தித் தூக்கிச் செல்கிறார்கள். அவர்களை விக்ரம் தடுக்க அவர்கள் துப்பாக்கியைத் தூக்கி விரட்ட விக்ரம் உயிர்பிழைக்க தப்பித்து ஓடுகிறார். அப்புறம் நடுராத்திரியில் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போக அங்கிருந்து விக்ரமை ‘விதி’படம் முடியும் வரைக்கும் விரட்டிக்கொண்டேயிருக்கிறது.
ஹீரோவும் ஹீரோயினும் ஏன் படம் முழுவதும் விரட்டப்படுகிறார்கள் என்பதை நான் சொல்லிவிட்டால் முதல் முக்கால்மணி நேரத்தில் செல்லும் பரபரப்பான வினாடிகளை நீங்கள் இழந்துவிடக்கூடும் என்பதால் அதைச் சொல்லாமல் விடுகிறேன். ‘எனிமி ஆப் த ஸ்டேட்ஸ்’ என்கிற ஆங்கிலப் படம் பார்த்திருந்தீர்களெனில் இந்த அரிமா ‘எனிமி ஆப் இண்டியா’ என்று சொல்லாமல் சொல்லிவிடுவீர்கள். ஆனால் அப்படியே ஜெராக்ஸ் எடுக்காமல் போட்டோஷாப் செய்து சில சின்ன சின்ன லோக்கல் புத்திசாலித்தனங்கள் கலந்து விறுவிறுப்பாய் கொண்டுபோயிருப்பதால் ஆடியன்ஸ் இந்தத் துரத்தலை ரசிக்கவே செய்கிறார்கள்.
விக்ரம் பிரபுவும், ப்ரியா ஆனந்த்தும் கொடுத்த சராசரி நாயகன், நாயகி வேலையை சராசரியாகச் செய்திருக்கிறார்கள். ஏட்டையாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் சின்ன வேடமென்றாலும் கச்சிதம். அவரும், வி.பிரபுவும் வரும் ஜீப் ரோட்டில் கவிழும் வரை கதை எக்ஸ்பிரஸ் வேகம்தான். அதற்குப் பின் கதையின் லாஜிக்கில் இருக்கும் ஆயிரத்து முன்னூறு ஓட்டைகளை ரசிகர்கள் கவனிக்காமல் விட்டால்தான் படம் மனதில் நிற்கும். வில்லனின் அடியாளாக வரும் அருள்தாஸ் பரவாயில்லை. சக்ரவர்த்தி வில்லனாக வருகிறார். நல்ல வில்லன்.
ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளரான ஆனந்த சங்கர் இயக்குனராகியிருக்கும் முதல் படம். துரத்திப் பிடிக்கும் கண்ணாமூச்சி வகை த்ரில்லர். படம் பூராவும் பரபரப்பாக ஹீரோவும் ஹீரோயினும் ஓடி, ஆடியன்ஸை தியேட்டரை விட்டு ஓடிவிடாமல் உட்காரவைத்து விடுகிறார்கள். டிரம்ஸ் மணியின் பின்னணியில் டிரம்ஸ் வாசித்துக்கொண்டேயிருக்கிறார். படம் துரத்தல் வகைப் படமென்பதால் அது வித்தியாசமாகத் தெரியவில்லை. அவர் நல்ல பின்னணி இசையமைப்பாளரா என்பது அடுத்து வரும் படங்களில் தெரியும். R. D.ராஜசேகரின் ஒளிப்பதிவும் புவன் ஸ்ரீனிவாசின் எடிட்டிங்கும் படத்தின் முக்கியமான பலமாக இருக்கின்றன.
படத்திற்கு ஏன் அரிமா நம்பி என்று பெயர் வைத்தார்கள் என்பது தான் எனக்கு இன்னும் புரியவேயில்லை.. யாராவது சொல்லுங்களேன்… ப்ளீஸ்.