veliyilla-patta-review

படத்துக்கு பத்துகோடி ரூபாய் சம்பளம் வாங்கும் தனுஷ் ஒரு வேலையில்லா பட்டதாரி. பி.ஈ. சிவில் இஞ்சினியரிங் படித்துவிட்டு நான்கு வருடங்களாக வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கிறார். அவர் வீட்டிலேயே இருந்தாலும் வெட்டிப் பயல் இல்லை, லட்சியம் உள்ள ஹீரோ. அதாவது தானே முழுப்பொறுப்பில் டிசைன் செய்து ஒரு கட்டிடத்தை கட்டவேண்டும் என்பதே அவருக்கு ஆசை.  அதனால் தனது லட்சியம் நிறைவேறும் வரை வீட்டுக்கு

எடுபிடி வேலைகள் செய்வது, பாவமாக எல்லோரும் திட்டுவதை வாங்கிக் கொண்டு ரசிகர்களின் இரக்கத்தை சம்பாதிப்பது, ப்ரெண்டஸ்களுடன் சேர்ந்து நன்கு சரக்கடித்துவிட்டு இரவில் லேட்டாக வருவது, மொட்டைமாடியில் டப்பாங்குத்து டான்ஸ் ஆடுவது என்று வி.ஐ.பி வேலைகளை செவ்வனே செய்து ஜாலியாக வருகிறார். பக்கத்துவீட்டுக்கு புதிதாக குடிவரும் டாக்டர் அமலா பாலுக்கும் இவருக்குமிடையே மோதல் பின் காதலாகிறது. ‘இதுவரைக்கும் கதை என்னான்னு நீ சொல்லவேயில்லை!’ என்று டென்ஷனாகாதீர்கள் ப்ளீஸ். இதுதான் இன்டர்வெல் வரை கதையே.

இன்டர்வெல்லில் நடக்கும் ஒரு சோகமான விஷயத்துக்குப் பின் தனுஷ்ஷூக்கு ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை கிடைத்து, சேரி மக்களுக்கு அரசு கட்டித்தரவிருக்கும் குடியிருப்பு வீடுகளை கட்டித்தரும் கான்ட்ராக்டை நிறைவேற்றும் பொறுப்பும் கிடைக்கிறது. தனுஷ் வேலை செய்யும் கான்ட்ராக்டைப் பெற முடியாமல்போன வில்லன் தனது கம்பெனியின் மூலம் தனுஷ்ஷை விரட்ட தனுஷ் தனது கம்பெனியையே கேட்காமல் தானே தனியாக பேஸ்புக் வி.ஐ.பிக்கள்(VIP-Velai Illa Pattadhari) மூலம் போராடி சேரிமக்களுக்கு வீடு கட்டித் தருகிறாரா  இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

தனுஷ் ஒரு மாஸ் ஹீரோ அந்தஸ்த்துக்கு உயர்ந்துவிட்டதால் ரஜினி, அஜித், விஜய் போன்ற சூப்பர் ஹீரோக்களுக்கு சொல்லப்படும ‘அண்ணாமலை’ டைப் கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். படமும் மாஸ் ஹீரோ அந்தஸ்த்தை வலுவாக்குவதாகவே அமைந்திருக்கிறது. படத்தின் முக்கிய மற்றும் பலமான பாத்திரம் தனுஷ். தனுஷ் மட்டுமே. இப்படிப்பட்ட சாதாரண மசாலாப் படத்திலும் சிரத்தையெடுத்து நடிப்பை வெளிப்படுத்துகிறார். அம்மாவிடம் கொஞ்சுவது, அமலா பாலிடம் எகிறுவது, அவருக்கும் அப்பா சமுத்திரக்கனிக்குமிடையேயான பாசம், குடித்துவிட்டு பண்ணும் அமர்க்களங்கள் என்று படம் முழுவதும் ஸ்கோர் செய்கிறார். நடுவில் ஒரு இரண்டுநிமிடம் ஒரே டேக்கில் பேசும் வசனமும் கூட உண்டு. அதே போல ஸ்டார்கள் பேசும் ‘நான் யார் தெரியுமா?’ டைப் வசனங்களும் அதிகம். இயக்குனர் வேல்ராஜ் ஸ்டார் மசாலா பார்முலாவை சரியாக வசனம், காட்சியமைப்புக்களில் பயன்படுத்தியிருக்கிறார்; இயக்குனர் பட்டதாரிக்கு இனி நல்ல வேலையுண்டு.

அடுத்து நடிப்பில் நிற்பவர்கள் அப்பாவாக வரும் சமுத்திரக்கனியும், அம்மா சரண்யாவும். முதல்பாதியின் உயிர்ப்பை நிலைநிறுத்துபவர்கள் இவர்கள் மூவரும்தான். பல் டாக்டர் அமலாபால் திருமதி விஜய்யாகிவிட்டதால் தனுஷ்ஷை டீஸன்ட்டாக, குத்துப்பாட்டுகள் எதுவும் இல்லாமல் அழகாக காதலித்துச் செல்கிறார். ‘உன்னைப் பாத்தா அமுல்பேபி மாதிரி இருக்கு’ என்று தனுஷ்ஷே சொல்லும்படியான அமுல்பேபி வில்லன் படத்திற்கு எப்படித் தேவையோ அப்படி உபயோகப்பட்டிருக்கிறார். படத்தின் பிற்பாதியில் வரும் விவேக் லேசாக சிரிக்கவைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் பார்க்கையில் அவர் முகத்தில் வயதான களை அவ்வளவு  தெரிய ஆரம்பித்துவிட்டது.

ஒல்லியாக இருந்தாலும் புரூஸ்லீ போல தன்னை காட்டிக்கொள்கிறார் தனுஷ். பறந்து பறந்து அடியாட்களை ‘பாக்க வழிச்சு சீவி சோடாபுட்டி போட்டிருக்கிறதால என்ன சாதாரண பாயா நினைக்காதீங்க.. நான் கொஞ்சம் பேட் பாய் சார்’ என்றபடி உதைக்கிறார். தனுஷ் ஏற்கும் வேடங்கள் பெரும்பாலும் வாழ்க்கையில் விரக்தியுற்ற, ரவுடி போல் பேசுகிற, ஆனால் உள்ளுக்குள்ளே நல்ல உள்ளம் கொண்ட, பார்க்க சோப்ளாங்கி போலத் தெரிகிற, ஆனால் சண்டையில் பொங்குகிற ஹீரோவாகவே இருக்கின்றன. ‘தான் சாதாரண ஆள்.. ஹீரோ இல்லை..’ என்கிற யதார்த்ததை உணரும் இந்தக்கால இளைஞர்கள் நிறைய பேர் நிஜ வாழ்வில் எடுக்க விரும்பும் அவதாரம் தனுஷ்ஷின் பாத்திரம்தான். படம் பெரிய ஹிட்டாக வாய்ப்பிருக்கிறது.

மசாலாப் படங்களில் இருக்கிற ஆபத்துகளில் ஒன்று அது சாதரண ரசிகனின் பொதுப்புத்தியில்  தவறான தீர்வுகளையும், முன்முடிவுகளையும் பதிய வைப்பது. வி.ஐ.பியில் நாட்டில் நிலவும் வேலையில்லாத இஞ்சினியரிங் பட்டதாரிகள் பற்றி மிக மேம்போக்காக பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 600 இஞ்சினியரிங் கல்லூரிகள் உள்ளன. அதிலிருந்து வருடந்தோறும் சுமார் 6 லட்சம் இஞ்சினியர்கள் உருவாகி வருகிறார்கள். இந்த 600 கல்லூரிகளில் வெறும் 6 கல்லூரிகள் மட்டுமே அரசு நடத்துபவை. இன்னும் நாலைந்து கல்லூரிகள் அரசு-உதவி பெறும் கல்லூரிகள். மீதி 550க்கும் மேற்பட்டவை தனியார் நடத்தும் பொறியியல் கல்லூரிகளே.

தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு வருடத்துக்கு குறைந்தது 50 ஆயிரம் ரூபாயை பீஸாக கட்டும் அப்பாக்களும் அம்மாக்களும் தன் பிள்ளை இஞ்சினியராக வெளிவந்தால் அவனுக்கு வேலை எங்கே கிடைக்கும் என்று யோசித்தார்களா ? இல்லையே! படத்தில் வரும் தனுஷ்ஷின் அப்பாகூட ‘கால் சென்டர் வேலை கிடைத்தாலும் போகவேண்டியதுதானே?’ என்று பையனைக் கேட்கிறார். இவ்விடத்தில் இயக்குனர் தனது நேர்மையை கொஞ்சம் ஒளித்து வைத்துவிட்டு ஐம்பதாயிரம் ரூபாய் தரும் கால்சென்டர் வேலை என்று கூசாமல் புளுகுகிறார்.  பத்தாயிரம் ரூபாய்க்கு பனிரெண்டு மணிநேரத்துக்கு மாங்கு மாங்கென்று கால் சென்டரில் வேலை செய்து சென்னையில் 10க்கு எட்டு ரூமில் பத்துபேராக இருந்து ரூம் வாடகை, உணவு மற்றும் வீட்டுச் செலவுகளை சேமித்து தான் இளைஞர்களும், இளைஞிகளும் வாழ்கிறார்கள் என்ற உண்மையை பார்க்கும் ஆடியன்ஸூம் ஏன் மறந்துபோகிறார்கள் ? இதே தொழிலாளர்கள் 40 வயதுக்கு மேல் போகும் போது எல்லா கம்பெனிகளும் சாப்ட்வேர் உட்பட, அனுபவம் 5 வருடத்துக்கு மேல் தேவையில்லை, இளரத்தம் மட்டுமே வேண்டும் என்று அவர்களைப் புறக்கணித்து இள ரத்தங்களை உறிஞ்சிக் குடிப்பதும் நடக்கிறது.

ஒரு உதாரணம் பாருங்கள். அம்மா அரசு சார்பில் 20 ஆயிரம் கோடியும், ஹியூண்டாய் வெறும் ஆயிரத்து அறுநூறு கோடியும் (அவலும் உமியும் கதை..) போட இரண்டு பேருக்கும் மெமோரண்டம் ஆப் அண்டர்ஸ்டாண்டிங் 2012ல் செய்து அதில் நாற்பதாயிரம் பேருக்கு வேலையும், ஒரு லட்சம் பேருக்கு மறைமுக வேலையும் செய்வதாக தொடக்க விழாவன்று பந்தாவாக அறிவித்தார்கள். இது போக சலுகை விலையில் சல்லிசாக கரண்ட், இடம், ரோடு, தண்ணீர், எட்ஸட்ரா எல்லாம் கொடுப்பார்கள். இதில் இஞ்சினியர்கள் சில ஆயிரமே. மீதி எல்லாம் லேபர்கள், பாலிடெக்னிக்குகள் படித்தவர்களுக்கு. ஆக அரசு சுமார் முப்பதாயிரம் கோடி செலவு செய்து சுமார் ஒரு லட்சம் பேருக்குத் தான் வேலை ரெடிபண்ண முடிகிறது என்று ஆகிறது. அதே முப்பதாயிரம் கோடி

ரூபாயை ஒரு அறுபதாயிரம் இஞ்சினியர்களுக்குப் தலா 50 லட்சம் பிரித்துக் கொடுத்து சுயதொழில் செய்ய உதவியிருந்தால் ஒவ்வொரு இஞ்சினியரும் குறைந்த பட்சம் ஒரு பத்துபேருக்கு வேலை கொடுக்கிறார் என்று வைத்தால் ஆறு லட்சம் பேருக்கு வேலை! அறுபதாயிரம் சிறிய கம்பெனிகள் பிறக்கும். வளரும். இப்போதோ ஒரு ஹியூண்டாய் மட்டும் அவ்வளவையும் விழுங்கிவிட்டது.

இயக்குனரும் சரக்குக்கு சைட் டிஷ் போல வேலையில்லாப் பிரச்சனையை லேசாகப் பேசுகிறார். ஷங்கரின் படங்களில் பெரும்பாலானவை இந்த ரகமே. ஆனால் அவர் எந்தத் தீர்வுக்கும் அலசலுக்கும் ரெடியில்லை. மாறாக மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் வேலை இளைஞர்களுக்கு காத்திருப்பது போலவும், இளைஞர்கள்தான் போகமறுப்பது போலவும் போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறார். அதை ஆடியன்ஸூம் பேசாமல் பார்த்துக்கொண்டு தேமே என்று உட்கார்ந்திருக்கிறார்கள். தனுஷ் புரூஸ்லி போல ஒல்லிப்பிச்சு உடம்பைக் காட்டி எதிரிகளைப் பந்தாடும்போது மட்டும் வாய் கிழிய விசிலடிக்கிறார்கள்.இன்னும் கொஞ்சம் லேட்டஸ்ட்டாக பேஸ்புக் மூலம் வேலையில்லா இளைஞர்களைத் திரட்டி(?!)  தனது எதிரியின் சவாலுக்கு சவால் விடுகிறார் என்று காமெடி பண்ணுகிறார்கள். அதற்கும் ஆடியன்ஸ் கைதட்டல்கள். படம் திரையிட்ட திரையரங்கில் இன்ட்டர்வெல்லில் விற்ற குச்சி ஐஸ் முதல், விளங்காத காப்பி வரை எல்லாமே மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்றதை கேட்காத இந்த இளைஞர் கூட்டம், படம் ஓட ஆரம்பித்த பின் கொஞ்ச நேரத்தில் ஏ.சி.யை நைஸாக ஆப் பண்ணி வியர்வையில் நனையவைத்தாலும் கண்டுகொள்ளாத இதே சோம்பேறி இளைஞர்கள் கூட்டம் தான் பேஸ்புக் மூலம் புரட்சி செய்கிறார்களாம். சரி சரி கற்பனையிலாவது இளைஞர்கள் புரட்சியாளர்களாய் இருக்கட்டுமே.   

தமிழ்நாட்டில் இருக்கும் 600 கலைக் கல்லூரிகள், 500 பாலிடெக்னிக்குகள், 200 மருத்துவ சம்பந்தப்பட்ட கல்லூரிகள், 130 மேனேஜ்மன்ட் படிப்பு கல்லூரிகள், 75 ஆசிரியப் படிப்புக் கல்லூரிகள் அங்கு படித்து வெளிவரும் சுமார் பத்து லட்சம் மாணவர்கள் பற்றி இந்த வி.ஐ.பியில் குறிப்பிடப்படவில்லை என்பதையும் நாம் ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டும்.

படம் பலபத்து கோடிகள் லாபம் ஈட்டும். தனுஷ்ஷூக்கு லாபம், தியேட்டர்காரர்களுக்கு லாபம், தயாரிப்பாளர்களுக்கு லாபம்.  பார்வையாளர்களுக்கு நாமம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.