கராத்தே பயிற்சியாளரான அர்ஜுன், மனைவி அபிராமி மகள் ப்ரீத்திமுகுந்தன் ஆகியோருக்கும் அந்தப் பயிற்சி கொடுத்து வைத்திருக்கிறார்.அதோடு அநியாயங்களைத் தட்டிக்கேட்க வேண்டும் என்று சொல்லியும் வளர்க்கிறார்.ஒருகட்டத்தில் பணபலமும் அதிகார பலமும் கொண்டவர்களோடு மோதவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.அது என்ன? அதன் முடிவென்ன? என்பதை பரபரப்பான திரைக்கதை மூலம் சொல்ல முயன்றிருக்கிறது பிளாஸ்ட் திரைப்படம்.

அர்ஜூன் என்ன செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனும்போது அவர் கராத்தேமாஸ்டர் என்றும் சொல்லிவிட்டால் கேட்கவா வேண்டும்? சண்டைக்காட்சிகளில் வேகம் குறையாமல் அடித்திருக்கிறார்.சற்றும் எதிர்பாராத மிகப்பெரிய சிக்கலில் சிக்குகிற நேரத்திலும் அதைக் கையாளும் காட்சிகளில் அர்ஜுனின் அனுபவ நடிப்பு கைகொடுத்திருக்கிறது.நன்றாக நடித்திருக்கிறார்.

அர்ஜுனின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமிக்குள் இப்படியும் ஒருவர் இருக்கிறாரா? என்று வியக்குமளவுக்கு சண்டைகள் செய்திருக்கிறார்.கண்களை அகலவிரித்து வழக்கமான நடிப்பின் மூலமும் கவனம் ஈர்க்கிறார்.

இந்தத் தம்பதியினரின் மகளாக நடித்திருக்கும் ப்ரீத்திமுகுந்தனுக்கு இதுபோல் இன்னொரு படம் அமையுமா? என்பது ஐயமே.காதல்பாடல்கள்,கவர்ச்சிக்காட்சிகள் கொண்ட கதாபாத்திரங்கள் நிறைய கிடைக்கலாம்.தப்பை தட்டிக்கேட்கும் அதுவும் அதிரடியாக அடி உதை என்று இறங்குகிற வேடம் அமைந்திருக்கிறது.அதை மிகவும் இரசித்து ருசித்து நடித்திருக்கிறார்.அது இரசிகர்களை ஈர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது.

ஜான் கொக்கன்,அர்ஜுன் சிதம்பரம், பவன் ஆகிய மூவருக்கும் எதிர்மறை வேடங்கள்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரம்.அதைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

பாலாஹாசன்,வினோத்சாகர் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தாழ்வில்லை.

விவேக்பிரசன்னாவின் கதாபாத்திரமும் அதில் அவருடைய நடிப்பும் சிறப்பு.

ஒளிப்பதிவு செய்திருக்கும் அருண்ராதாகிருஷ்ணன்,பல சவாலான சூழல்களை எதிர்கொண்டிருப்பது தெரிகிறது.அவற்றை அநாயசமாக எதிர்கொண்டு காட்சிகளை நிறைவாக்கியிருக்கிறார்.

ரவிபஸ்ரூர் இசையில்,இது தெறிக்கவைக்கும் சண்டைப்படம் என்பது மேலும் நிருபணமாகியுள்ளது.

சண்டைப்பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ்பிரபு இந்தப்படத்தின் இன்னொரு நாயகன் என்று சொல்லலாம்.அந்த அளவுக்குச் சிரத்தையாக உழைத்து அர்ஜூன் சண்டையை மட்டுமின்றி அபிராமி மற்றும் பிரித்திமுகுந்தன் செய்யும் சண்டைகளை இரசித்துப் பார்க்க வைத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் சுபாஷ் கே.ராஜ்,வழக்கமான கதை என்று சொல்லிவிடக்கூடிய ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதில் பெண்களின் பங்களிப்பை முதன்மைப்படுத்தியிருப்பதன் மூலம் மாறுபட்ட கதை என்று சொல்ல வைத்திருக்கிறார்.எதிர்மறை நாயகர்களுக்குக் கூடுதல் காட்சிகள் வைத்திருப்பது நல்ல திரைக்கதை உத்தி.பெண்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் விதமான காட்சிகள் கூடுதல் பலம்.

– கதிரோன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.