நம்ம ஊரில் ரஜினி-கமல், விஜய்-அஜித், சிம்பு-ஆர்யா என்றுதான் ரசிகர்களிடையே பிரச்சினை கிளம்பி, ஒன்றுமில்லாத விஷயத்துக்கு ஆளாளுக்கு அடித்துக்கொள்வார்கள். ஆள்வைத்தும் அடிப்பார்கள். தெலுங்கில் சமந்தாவின் ரசிகர்களுக்கும், மகேஷ்பாபுவின் ரசிகர்களுக்குமிடையே சண்டையாம்.
‘நேனோக்கெடெய்ன்’ (அப்படின்னா?..) என்கிற தெலுங்குப்பட போஸ்டரில் ஹீரோ மகேஷ்பாபு பீச்சில் நடந்துவர, அவர் பின்னாலேயே படத்தின் ஹீரோயின் கிருத்தி சனோன் கைகளையும் கால்களையும் தரையில் ஊன்றி நாலுகால்களில் நடந்துவருவது போன்ற காட்சியை வைத்திருந்தார்களாம். உடனே இது பெண்களை நாலுகால் பிராணியாக இழிவுபடுத்தும் விஷயம். (அதானே! வழக்கமா ஆம்பளைங்க தானே பிடிச்ச பொண்ணுக்காக ‘இப்படி’ லோலோன்னு அலைவாங்க?!) என்று போராட்டம் நடத்தக் கிளம்பிவிட்டார்கள் பெண்கள் அமைப்பினர்.
இதைப் பற்றி சமந்தாவிடம் ஒரு வார்த்தை கேட்க அவரும், அவர் காதலர் சித்தார்த்தும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார்களாம். உடனே ஆரம்பித்துவிட்டது இருதரப்பு ரசிகர்களுக்குமிடையே சண்டை. “அஞ்சான் படபோஸ்டரில் கவர்ச்சியாக பீச்சில் படுத்திருக்கும் சமந்தாவின் காலை சூர்யா வருடுவது போல இருக்கிறதே.. இதுமட்டும் பெண்களுக்கு பெருமை சேர்க்கிறதா?” என்று மகேஷ்பாபுவின் ரசிகர்கள் கேட்கிறார்களாம்.