60 வது பிறந்தநாளை ஒட்டி, கமலைப்பற்றி இனி புதுசாக என்ன எழுதிவிடப்போகிறோம். அதனால் முகநூலில் யாராவது ஓரளவு உருப்படியாக எழுதியதை எடுத்துப் பகிர்வோமே என்று அதிகாலையிலிருந்து ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை அதாவது ஐ மீன் திரு. ஞானி அவர்களின் இந்தப்பதிவுதான் கண்ணில் பட்டது.
கமல்ஹாசனும் நானும்.
கமல்ஹாசனும் நானும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள். நான் ஜனவரி. அவர் நவம்பர். எழுபதுகளின் மத்தியில் அவர் பாலசந்தர் படங்களின் சின்னச் சின்ன பாத்திரங்களின் வழியே என் தலைமுறையின் கவனத்தைக் கவர்ந்தவர். கமல்ஹாசன் இடத்தைத் தான் பிடித்துவிடப் போவதாக நம்பிய ஒரு நண்பன் எனக்கு அப்போது இருந்தான். அவருடன் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அவனுக்குக் கிட்டியது. கமல் போல மூக்கும் முழியுமாக சிவப்பாக இருந்தால் தானும் நடிகராகிவிடலாம் என்று பலரும் தவறாக நம்பியிருந்த காலம் அது. (இன்றும் தன் தோற்ற அடிப்படையிலேயே தன நடிகராகிவிடலாம் என்று தவறாக நம்பும் இளைஞர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.) கமல் நடிகராக மட்டுமல்லாமல், நல்ல வாசிப்புப் பழக்கம் உள்ளவராகவும் அப்போதே அறியப்பட்டிருந்தார். எழுபதுகளில் ஹிந்தியிலும் மலையாளத்திலும் வங்காளத்திலும் வீசிய கலைப்பட அலை, கொஞ்சமேனும் தமிழ்ப் பக்கமும் வீசுவதென்றால் அது கமல் போன்ற ஒருவரால் மட்டுமே சாத்தியம் என்ற எதிர்பார்ப்பை அப்போது அவர் ஏற்படுத்தியிருந்தார். ஆனால் குழப்பமான படங்களிலும் ஃபார்முலாபடங்களிலுமே அப்போதும் நடித்துக் கொண்டிருந்தார்.
1982ல் நான் கமல்ஹாசனை முதலில் சந்தித்தேன். நண்பர் எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜு அறிமுகப்படுத்தினார். மந்தவெளியில் முக்தா கல்யாண மண்டபத்தில் படப்பிடிப்பில் இருந்தார். சில தினங்கள் கழித்து ஆழ்வார்பேட்டை வீட்டில் சந்தித்து ஒன்றரை மணி நேரம் உரையாடியது தீம்தரிகிட இதழில் நேர்காணலாக வெளியானது. (என் ‘கேள்விகள்’ தொகுப்பில் காணலாம்.) அதன்பின்னர் அடுத்த 32 வருடங்களில் அவரை மொத்தமாக நான்கைந்து முறை பார்த்திருப்பேன். மத நல்லிணக்கத்துக்காக என்.ராம் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில் இருவரும் பேசினோம். திரும்பவும் 2003ல் தீம்தரிகிட இதழில் சினிமாவுக்குப் போன சிற்றிதழாளு என்ற தலைப்பில் அவர் எழுத்தாளர்களை சினிமாவுக்கு அழைப்பது பற்றியும் அன்பே சிவம் படம் பற்றியும் பொதுப் புத்திக்கு உடன்படாத ஒரு விமர்சனக் கட்டுரையை எழுதியிருந்தேன். அதில் நான் சொன்ன கருத்துகளை அவர் ஏற்பதாக பின்னர் தீராநதி பேட்டியில் சொல்லியிருந்தார். சில வருடங்கள் முன்னர் அவர் நடித்த மன்மதன் அம்பு படத் துவக்கவிழாவுக்கு அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் என் மகன் மனுஷ் நந்தன் என்பதால் சென்றிருந்தபோது பார்த்தேன். பேசவில்லை. கை குலுக்கியதோடு சரி. சென்ற வருடம் என் மகனின் திருமண வரவேற்பு அழைப்பைத் தர ஏ.வி.எம் ஸ்டூடியோவில் விஸ்வரூபம்-2 படப்பிடிப்பின்போது சென்று சந்தித்தேன். அந்த சில நிமிடங்களிலும் இலக்கியம் பற்றிப் பேசினார். அன்போடு ஒரு இளநீர் கொடுத்தார். என் உடல்நிலையில் நான் அதைக் குடிக்கக் கூடாது என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அன்றிரவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். ஓராண்டுக்குப் பின் அண்மையில் பி.ஏ.கிருஷ்ணன் நூல் வெளியிட்டு விழா நிகழ்வில் சந்தித்தேன். என் உடல்நிலை பற்றி விசாரித்தார்.
எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆருக்குப் பிறகு, கமல் மட்டும்தான் சினிமாவின் எல்லா துறைகளிலும் ஆர்வம் காட்டிக் கற்றுக் கொள்ள முற்பட்ட ஒரே நடிகர். புதிய தொழில்நுட்பத்தைக் கண்டு எப்போதும் பயப்படாமல் அதைத் தன்வசப்படுத்த தீவிரமாக இயங்கும் மனநிலையுடையவர். ஒரு நல்ல நடிகன் உடலைப் பேணுவது போலவே மனதையும் பேணுவதற்கு வாசிப்பும் பல கலை ரசனையும் தேவை என்பதை இளம் நடிகர்களுக்கு வழிகாட்டியாக உணர்த்துபவர். ஹாலிவுட் சினிமா, கமர்ஷியல் சினிமா, ஹீரோயிசம், நவீன தொழில்நுட்பத்தின் கவர்ச்சி எல்லாம் அவர் மீது செலுத்தும் தாக்கத்தால், அவருக்குள் இருக்கும் கலைஞன், படைப்பாளி எப்போதும் கீழே தள்ளப்பட்டுவிடுகிறான். கடந்த ஓராண்டாகவே அவரது பேட்டிகளில், பேச்சுகளில் முதன்முறையாக தனக்கு வயதானதை உணர்ந்துவிட்ட மனநிலை பிரதிபலிப்பதைப் பார்க்கிறேன். வரும் ஆண்டுகளில் அவர் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு, இளம் திறமையாளர்களை நடிக்க வைத்து, கதை வசனம், இயக்கத்தில் மட்டும் கவனம் குவித்தால், இதுவரை எட்டாத பாய்ச்சல்களை அவரும் தமிழ் சினிமாவும் சேர்ந்தே எட்டிவிடமுடியும்.விடலை ஹீரோவிலிருந்து உத்தம வில்லனாக மாறுவதில் திருப்தி அடையக் கூடாது. நல்ல உடல்நிலையும் படைப்பாற்றலும் வரும் ஆண்டுகளில் பெருகிட என் பிறந்த நாள் வாழ்த்துகள்.
நன்றி;