கிறிஸ்துமஸ் அன்று ரிலீசாகி, 3வது வாரத்தை நோக்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது, பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படம். அதில் முக்கிய பாத்திரம் ஏற்றிருக்கும் ‘தினகரன்’ தேவராஜ், தனது சொந்த ஊரைச்சுற்றியுள்ள தியேட்டர்களுக்கு விசிட் அடித்து, அந்த அனுபவத்தைப் பகிர்கிறார்.
’கடந்த டிசம்பர் 27ம் தேதி அன்று காட்பாடி ஆஸ்கார் தியேட்டர், விருதம்பட்டு விஷ்ணு தியேட்டர், வேலூர் அலங்கார் தியேட்டருக்கு சென்றிருந்த நான், அங்கு ‘கயல்’ படத்தை ரசிகர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்று கேட்டறிந்தேன்.
நான் எதிர்பார்க்கவே இல்லை, படத்தில் நான் ஹீரோயின் ஆனந்தியிடம் பேசிய ”நாசமா போ” என்ற டயலாக் இவ்வளவு பிரபலமாகும் என்று.
இடைவேளை நேரத்தில் தியேட்டரில் என்னைப் பார்த்த பொதுமக்களும், ரசிகர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபோது, ”இதற்குத்தானே ஆசைப்பட்டாய் தேவராஜ்…” என்று ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. 47 வயதில், எனது 34வது படத்தில்தான் ரசிகர்கள் மத்தியில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த ஜனவரி 3ம் தேதி அன்று மீண்டும் காட்பாடி ஆஸ்கார் தியேட்டர், வேலூர் அலங்கார் தியேட்டர், குடியாத்தம் கங்கா தியேட்டர், ஆம்பூர் சாய் சக்தி தியேட்டருக்கு சென்றிருந்தேன்.
ரசிகர்கள் என்னைப் பார்த்து விசிலடித்து ஆரவாரம் செய்து, ”டேய்… ‘நாசமா போ’ வில்லன் வந்துருக்கான்டா” என்று கத்தியபடி என்னை வரவேற்றார்கள். பிறகு செல்ஃபி, செல்போன் போட்டோ, டிஜிட்டல் கேமரா போட்டோ என, என்னைக் கட்டிப்பிடித்து போட்டோ எடுத்துக்கொண்ட ரசிகர்கள், அளவற்ற அன்பு மழை பொழிந்தார்கள்.