சிங்கப்பூர் தேசத்தை நிறுவிய, லீ குவான் யூ மரணத்துக்கு நாம் தமிழர் கட்சி இரங்கல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:
‘சிங்கப்பூரின் தந்தை’ எனப் போற்றப்படும் லீ குவான் யூ அவர்களின் மரணச் செய்தி பிற மனிதர்களை நேசிக்கும் மனிதநேய மாந்தர்கள் ஒவ்வொருவரின் இதயத்தையும் இடியாகத் தாக்கி இருக்கிறது. உலக நாடுகளுக்கே முன்மாதிரி தலைவனாக விளங்கிய லீ குவான் யூ தமிழர்களின் மனங்களிலும் நீக்கமற இடம் பிடித்தவர். தமிழைச் சொந்த மொழியாகக் கொண்ட தமிழர் நிலத்திலேயே தமிழ் ஆட்சிமொழியாக அறிவிக்கப்படாத நிலையில், சிங்கப்பூர் தேசத்தில் தமிழை ஆட்சி மொழியாக அறிவித்த பெருமகன் லீ குவான் யூ அவர்கள்.
31 ஆண்டுகளாக சிங்கப்பூரில் ஆகச்சிறந்த ஆட்சி புரிந்த லீ குவான் யூ அவர்கள் தமிழர்களின் நலனுக்கான அத்தனை ஆக்கபூர்வங்களையும் செய்துகாட்டியவர். சிங்கப்பூரில் தமிழை ஆட்சிமொழியாக அறிவித்தபோது மலையாளிகள் எங்கள் மலையாள மொழிக்கும் அத்தகைய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என வற்புறுத்தினார்கள். அதற்கு, ‘சிங்கப்பூர் என்கிற தேசம் அமைய போராடியவர்கள் தமிழர்கள். அதற்கான நன்றிக்கடனாகவே நான் தமிழை ஆட்சி மொழியாக்கி இருக்கிறேன்’ என வெளிப்படையாகச் சொல்லி தமிழர்களின் இதயங்களை ஆட்கொண்டவர் லீ குவான் யூ அவர்கள்.
ஈழப் போராட்டத்திலும் தமிழர்களின் பக்கம் நின்று அமைதிக்கும் தீர்வுக்கும் வலியுறுத்தியவர். ஆங்கிலேய‌ப் பிடியில் இருந்து விடுதலை பெற மட்டும் அல்லாமல், மலேஷியாவிலிருந்து சிங்கப்பூரை தனித்துப் பெறவும் போராடி வெற்றிகண்டவர் லீ குவான் யூ அவர்கள். எவரோடும் தனிப்பட்ட பகைமை பாராட்டாமல் அதே நேரம் நமக்கான உரிமைக்குப் போராடும் நேர்மையையும் சக்தியையும் நிரூபித்து உலகுக்கே முன்னுதாரணமாக விளங்கிய லீ குவான் யூ அவர்களின் மறைவுக்கு உலகத் தமிழர்களின் சார்பாக‌ நாம் தமிழர் கட்சி வீர வணக்கம் செலுத்துகிறது. தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வேறுபாடுகள் கடந்து போராடிய இந்தத் தலைவனை வாழும் காலம் வரை நம் இதயத்தில் தூக்கிச் சுமப்பதே தமிழர்கள் ஒவ்வொருவரும் அவருக்குச் செய்யும் உண்மையான வீர வணக்கமாக இருக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.