அப்துல் கலாமின் கனவுகளையே மாபெரும் காவியமாக ‘கொண்டாடிய’ தேசத்தில் லீ குவானின் மறைவுக்கு மட்டும் என்ன குறைச்சல்? ‘சிங்கப்பூரின் சிற்பி’, ‘காந்தி’, ‘சிங்கம்’, ‘மூன்றாம் உலக ஏழை நாட்டை முதல் உலகமே வியக்குமளவு உருமாற்றிய லீயின் சாதனைகள்’ என ஊடகம் முதல் மோடி வரை தினுசு தினுசாக வியந்தோதுகிறார்கள்.

சிங்கப்பூரின் சர்வாதிகாரி லீ குவான் யூ
ஒரு தலைவரின் மறைவு குறித்த வெறும் சம்பிரதாயமான வார்த்தைகள் மட்டுமல்ல இவை. வளர்ச்சி குறித்த ஒரு மாபெரும் மூடநம்பிக்கை மற்றும் வரலாற்றை மறைக்கும் புரட்டல்கள் இவற்றில் உறைந்திருக்கின்றன.

தோராயமாக 55 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் சிங்கப்பூரில் உலகிலேயே அதிக விகிதத்தில் கோடீஸ்வரர்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொரு ஆறு வீடுகளிலும் ஒரு வீட்டை எடுத்துக் கொண்டால் அங்கே அறுபது இலட்சம் ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருக்கும். அவை நிரந்தரச் சொத்து, வணிக முதலீடு, ஆடம்பர பொருட்கள் என்று முதலாளித்துவத்தின் அனைத்தும் தழுவிய சாதனைகளாக இருக்கும்.

இத்தகைய பட்டியலை பார்க்கும் நம்மூர் கோயிந்துகள், “பார் சிங்கப்பூரை, என்ன ஒரு வளர்ச்சி” என்று கம்மர் கட்டை மொய்த்து விட்டு நுழையும் நூற்றி எட்டு ஈக்களுக்காக வாய்களை பிளக்கிறார்கள். இப்படி ஒரு பணக்கார சாதனை சிங்கப்பூருக்கு இருக்குமென்றால் அதன் மறுபக்கம் ஒன்று இருக்க வேண்டுமென்ற பொது அறிவு கூட இக்கோயிந்துகளுக்கு கிடையாது.

ஆம், உலகிலேயே மலைக்கும் மடுவுக்குமான வருமான வேறுபாடுகள் உள்ள முன்னேறிய நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இந்த இடம் ஹாங்காங்கிற்கு கீழேயும், அமெரிக்காவிற்கு மேலேயும் உள்ளது.

கூடவே, குறைவான வருமானம் பெறும் தொழிலாளிகள் அதிகம் இருந்தாலும் அதிக வருமானம் பெறும் குபேரர்கள் குறைவாக இருந்தாலும் கூட ஒட்டு மொத்தமாக தனிநபர் வருமானம், சொத்து மதிப்பு அதிகம் இருக்குமென்பது கூட வளர்ச்சி பிரியர்களுக்கு உறைப்பதில்லை.

உலகிலேயே குறைந்தபட்ச கூலி கொடுக்க வேண்டிய சட்ட பாதுகாப்பு இல்லாத நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இதன் படி ஒரு முதலாளி எப்படி வேண்டுமானாலும் ஊதியத்தை குறைத்து கொடுக்கலாம். அவனை ஏன் என்னவென்று எவரும் கேட்ட முடியாது.

சிங்கப்பூர் டிராகன்
உலகிலேயே குறைந்தபட்ச கூலி கொடுக்க வேண்டிய சட்ட பாதுகாப்பு இல்லாத நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. ஏழைகளின் நாடான் இந்தியாவில் கூட பெயரளவுக்காவது விவசாயம், தொழிற்துறையில் இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று சட்டமுள்ளது. அது தொடர்பாக புகார் கொடுக்க தொழிலாளர் ஆணையம், நீதிமன்றம் கூட இங்குண்டு, அவை முதலாளிகளுக்கு ஆதரவாகவே பல சமயங்களில் செயல்படுகிறது என்றாலும்.

சிங்கப்பூரின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்க கூடிய துறைகளில் ஒன்று சுற்றுலா. சுற்றுலா என்றால் தீனி, விடுதி, கடை போக விபச்சாரமும் உண்டு. இருப்பினும், தற்கால சுற்றுலா மையங்களில் இவை மட்டும் போதாது. முக்கியமாக சூதாட்டம் வேண்டும். அதன்படி உலக மேட்டுக்குடியினரை ஈர்க்க 2005-ம் ஆண்டு சிங்கப்பூரில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கிவிட்டனர். அதன்படி தற்போது இரண்டு சூதாட்ட மையங்கள் சக்கை போடு போடுகின்றன. உலக நாடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சுரண்டல் மற்றும் ஊழல் பணங்களைக் கொண்டு வரும் சுற்றுலா ஆசாமிகள் அதை சிங்கப்பூரின் சூதாட்டத்தில் கடாசி விட்டு திரும்புவார்கள். அதை வைத்து பொருளாதாரத்தை வளர்க்கும் சிங்கப்பூரில் இலஞ்சம் கடுகளவும் இல்லையாம்.

சுற்றுலாவைப் போல சிங்கப்பூர் முதலாளிகளுக்கு வளம் கொடுக்கும் மற்றொரு துறை மருத்துவம். மருத்துவ சுற்றுலாவிற்காக  வருடந்தோறும் 2,00,000 பயணிகள் வந்து தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர். கிராமங்களில் இருந்து அரசு மருத்துவமனைக்கு செல்வதற்குக் கூட பேருந்து கட்டணம் இல்லாமல் தெருவோர சித்த வைத்தியரிடம் பிணி தீர்க்கும் நம் நாட்டில் இருந்து சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெறும் நபர்கள் யார் என்று தெரியுமா?

கடைசியாக தமிழ் நாட்டில் இருந்து சென்றவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கேப்டன் விஜயகாந்த். இருவருக்கும் பிளாக்கில் விற்ற பணம் இருக்கும் போது சிங்கப்பூரின் வளத்திற்கு உரம் போடும் அந்த ரத்தப் பணம் யாருடையது? வருடத்திற்கு 300 கோடி அமெரிக்க டாலரை இலக்காகக் கொண்டு செயல்படும் சிங்கப்பூர் மருத்துவத்தின் ரத்தம் ஏழைநாடுகளைச் சுரண்டுவதிலிருந்தே போகிறது. அதே போல சிங்கப்பூரில் கல்வி நிலையங்களில் மூன்றாம் உலக ஆசிய நாடுகளின் அதிகார வர்க்க மற்றும் முதலாளிகளின் வாரிசுகள் படிக்கிறார்கள். வருடத்திற்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்களாலும் சிங்கப்பூர் ஆதாயம் அடைகிறது.

சிங்கப்பூர் பொருளாதாரத்தில் தீர்மானம் வகிக்கும் ஏற்றுமதி பொருட்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27% பங்கு வகிக்கிறது. அதிலும் மின்னணு பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏழை நாடுகளில் மேட்டுக்குடி குலக்கொழுந்துகள் வீட்டில் பயன்படுத்தும் ஆடம்பர மின்னணு பொருட்களில் சிங்கப்பூரே முதலிடம் வகிக்கிறது. சவுதி ஷேக்குகள் அமெரிக்க, ஐரோப்பிய ஆடம்பர பொருட்களில் உருண்டு திளைப்பது போல, அவர்களவு சுருட்ட முடியாத மூன்றாம் உலக நாடுகளின் ‘ஷேக்குகள்’ சிங்கப்பூரோடு நிறைவடைகிறார்கள்.

ஒரு வகையில் அத்தியாவசிய தேவையோ பயன்பாடோ அற்ற இந்த நுகர்வு பொருட்கள் உண்மையில் வறட்டு கௌரவத்தை நிறைவேற்ற மட்டும் பயன்படுகிறது. அந்தக்கால இந்திய சமஸ்தான மன்னர்கள் தங்கத்தில் கழிப்பறை செய்து மலம் கழிப்பது ஒரு சான்று. அந்த வகையில் இது உண்டு கழித்திருப்போருக்கான பொருட்களை உற்பத்தி செய்யும் துறை என்றும் கூறலாம்.
singapore-dragon2
சிங்கப்பூர்
சிங்கப்பூரை “உலகில் சுலபமாக தொழில் செய்வதற்கு ஏற்ற இடம்”, “உலகின் தலைசிறந்த லாஜிஸ்டிக்ஸ் மையம்” என்று உலக வங்கியே பாராட்டியிருக்கின்றது. உலக வட்டிக்காரன் ஒரு குட்டி நாட்டை பாராட்டுகிறான் என்றால் அது மக்களைப் பொறுத்தவரை நேரெதிராகத்தானே இருக்கும்? உலகின் முன்னணி நிதித்துறை மையம், உலகின் இரண்டாவது பெரிய சூதாட்ட சந்தை, உலகின் முன்னணி எண்ணெய் சுத்திகரிப்பு மையங்களில் ஒன்று போன்ற சிங்கப்பூரின் சாதனை பத்திரங்களையும் உலக வங்கியின் பாராட்டையும் சேர்த்து பார்த்தால் இது தீவாய் இருக்கும் ஒரு ஏழு நட்சத்திர விடுதி என்று புரியும். கையேந்திபவன்களில் காலம் கழிக்கும் நம்மைப் போன்றோர் இந்த நட்சத்திர ஓட்டல்களை கொண்டாட முடியுமா?

அதிலும் சிலபேர் கட்டணக் கழிப்பிடங்களில் உள்ள கறை, அழுக்கு, அசுத்தத்தை தாஜ் கொரமண்டலின் வரவேற்பை மண்டபத்தின் ரெஸ்ட் ரூம்களோடு ஒப்பிடுவது போல சிங்கப்பூரில் எச்சியே துப்புவது இல்லை என்று மெய் வருந்த கூவுகிறார்கள்.

சிங்கப்பூர் ஏன் உலகின் முன்னணி நிதித்துறை மையமாக இருக்கிறது என்று கேட்டால் கலாம் கனவு ஆசாமிகள் என்ன சொல்வார்கள்? சிங்கப்பூர் பயங்கரமாக தொழில் செய்கிறது என்று சமாளிப்பார்கள். உண்மை என்ன?

உலகிலேயே வரியில்லா சொர்க்கமென்று அழைக்கப்படும் சில நாடுகளில் சிங்கப்பூரும் வருகிறது. இங்கே தனிநபர் வருமான வரியும் குறைவு, கார்ப்பரேட் வருமான வரியும் குறைவு. இந்த இரண்டு சலுகைகளும் இருக்கும் நாடுகளில்தான் அநேக குபேரர்கள் தமது சொத்துக்களோடு குடியேறுவார்கள். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சில்லறை வணிக முதலாளி பிரெட் பிளண்டி, மற்றும் ஃபேஸ்புக்கின் நிறுவனர்களில் ஒருவரான எடார்டோ சவரின் ஆகியோர் முறையே 2013 மற்றும் 2012 வருடங்களில் தமது சொந்த சொத்து பத்துக்களுடன் சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டனர். மொரிஷியஸ் நாடும் கூட இத்தகைய வரியில்லாத நாடுகளில் ஒன்று என்பதையும் அங்கிருந்துதான் அநேக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்கின்றன என்பதையும் இங்கே இணைத்து பாருங்கள்.

நிதித்துறை இரகசிய அட்டவணை மற்றும் வரிகளுக்கான நீதி வலைப்பின்னல் போன்ற முதலாளிகளின் தொழில் மதிப்பீட்டு அட்டவணைகளில் சிங்கப்பூர் நல்ல இடத்தை வகிக்கிறது. கேட்பார் கேள்வியின்றி சுரண்டுவதில் தடையில்லாத நாடுகளே இவ்வட்டவணைகளில் இடம்பெற முடியும். இதன் பொருட்டுதான் சிங்கப்பூர் அன்னிய முதலீடு நாடி வரும் காந்தப் புலமாக இருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா முதலான இடங்களிலிருந்து இங்கு சுமார் 7,000 பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

என்ன காரணம்?
நிதி மூலம், ரிஷி மூலம், ஊழல் மூலம், சுருட்டல் மூலம் கேட்கமாட்டார்கள்; வரி மிகக் குறைவு; தொழிலாளர் சட்டம், உரிமைகள் இல்லை; குறைந்தபட்ச கூலி இல்லை; முதலாளிகளுக்கு விழுந்து சேவை செய்யும் அரசு, நீதிமன்றம், அதிகார வர்க்கம்….. வேறு என்ன வேண்டும்? இதை ஏதோ சிங்கப்பூரில் லஞ்சம் இல்லாததால்தான் முதலீடு வருகிறது என்று நினைப்போர் குச்சி ஐஸ் கூட சாப்பிட தகுதி இல்லாதவர்கள் என்றே பாராட்ட முடியும்.

பொருளாதார சுதந்திர அட்டவணையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சிங்கப்பூர் கருத்து சுதந்திர அட்டவணையில் கடைசி இடத்தில் இருக்கிறது. இதுதான் உண்மையான முதலாளித்துவம் என்பதால் நமக்கு இது அதிசயமில்லை. ஆனால், “முதலாளித்துவம் என்றாலே ஜனநாயகம்” என்று வழியும் குச்சி ஜஸ் கோயிந்துகளுக்கு புரிய வைப்பது எப்படி? சிங்கப்பூரில் அரசையோ, இல்லை ஆளும் கட்சியையோ, இல்லை லீ குவானையோ எதிர்த்து ஒரு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் கூட  போட முடியாது. போட்டால் சிறை வாசம் அல்லது நாடு கடத்தப்படுவார்கள்.
singapore-dragon1
சிங்கப்பூர் கார்ட்டூனிஸ்ட் கைது
சிங்கப்பூரில் அரசையோ, இல்லை ஆளும் கட்சியையோ, இல்லை லீ குவானையோ எதிர்த்து ஒரு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் கூட போட முடியாது. போட்டால் சிறை வாசம் அல்லது நாடு கடத்தப்படுவார்கள். 1965-ல் ‘சுதந்திரம்’ அடைவதற்கு முன்னர் சிங்கப்பூர் தீவு என்பது கடல் கடந்து வந்த ஆங்கிலேயர்களின் புகலிட இளைப்பாறும் தலைநகரம். முக்கியமாக இங்கிலாந்தின் கிழக்காசிய பகுதியின் கடற்படை தளம் இத்தீவில் இருந்தது. அதன் பொருட்டே சிங்கப்பூரை, கிழக்கின் “ஜிப்ரால்டர்” என்று அழைத்தார்கள். 1869-ல் சூயஸ் கால்வாய் திறந்த பிறகு ஐரோப்பா – ஆசிய வர்த்தகம் அதிகரித்த பிறகு சிங்கப்பூர் துறைமுகம் ஒரு முக்கியமான, பரபரப்பான துறைமுகமாக மாறியது.

65-ம் ஆண்டில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்த பிறகு மேற்கண்ட துறைமுக காரணம் மற்றும் அதற்கு முன் கண்ட முதலாளித்துவ சேவைத் தளம் காரணமாகவே சிங்கப்பூர் மேற்குலகின் கௌரவமான இடத்தை  பிடித்தது. அதாவது பெரும்பான்மை மக்களை சுரண்டி சிறுபான்மை முதலாளிகளும் அவர்களது கூட்டமும் வாழும் சீமான்களது வாழ்க்கையே சிங்கப்பூரின் சாதனை. இங்கே அந்த பெரும்பான்மை என்பது சிங்கப்பூரில் அதிகம் இல்லை என்றாலும் சுற்றி இருக்கும் நாடுகளில் இருந்து அவர்களது உழைப்பை சீமான்கள் சுரண்டி எடுத்து சிங்கப்பூரில் கொட்டுகிறார்கள்.

மற்றபடி லீ குவான் யூ எனும் மேதை சிங்கப்பூரை செங்கல் செங்கலாக கட்டினார் என்று வாய் பிளந்தால் அந்த வாய்களில் கேன்சர் இருக்கிறது என்றே பொருள்.

மலேசியா, இந்தோனேஷியா, நாடுகளில் 1950-களில் இருந்த கம்யூனிச எழுச்சியை மேற்குல உதவியோடு அந்நாட்டு ஆளும் வர்க்கங்கள் அடக்கி ஒடுக்கின. மலேசியாவோடு இருந்த சிங்கப்பூரிலும் அத்தகைய ஒடுக்குமுறை இருந்தது. இன்றைக்குக் கொண்டாடப்படும் லீ குவான் யூ மற்றும் அவரது மக்கள் செயல் கட்சியும் கூட அத்தகைய கம்யூனிச எதிர்ப்பிலிருந்தே தமது அரசியல் வாழ்வை துவங்கியவர்கள்.

சிங்கப்பூரில் எச்சி துப்பக் கூடாது, சிரிக்க வேண்டும், டாய்லட்டில் தண்ணீர் விட வேண்டும் போன்றவற்றையெல்லாம் சட்டங்களாகவும், மீறினால் தண்டனையாகவும் போட்டு ஷங்கரின் அந்நியன் பாணியில் சுத்தத்தை கொண்டு வந்தார் லீ. தண்டனைகளில் மத்தியக் கால கொடுங்கோன்மை பிரம்படி உண்டு. கூடவே போராட்டம், கலவரம், வேலைநிறுத்தம் போன்றவற்றிற்கும் கடும் தண்டனைகள் உண்டு. மரண தண்டனையும் உண்டு. “சிங்கப்பூரின் மக்கள் தொகை விகிதத்தை ஒப்பிடும் போது அங்கே மரண தண்டனை விகிதம் அதிகம்” என்று அம்னெஷ்டி இன்டர் நேஷனல் பல முறை கூறியிருக்கிறது.

ஒரு கட்சி ஆட்சிமுறை, லீயின் மகனே இன்று பிரதமர் என்று அத்தனையும் இருந்தாலும் மேற்குல ஊடகங்களோ இல்லை ஜனநாயக காதலர்களோ வட கொரியாவை வசைபாடுவது போல சிங்கப்பூரை பாடுவதில்லை என்பதோடு போற்றி புகழ்கிறார்கள். வட கொரியா ஒரு அதிகாரவர்க்க முதலாளித்துவ நாடு என்று நாம் மதிப்பிடுகிறோம். எனில் சிங்கப்பூர்? இது ஒரு அக்மார்க் அப்பட்டமான முதலாளித்துவ நாடு.

சர்வாதிகாரம்
ஒரு கட்சி ஆட்சிமுறை, லீயின் மகனே இன்று பிரதமர் என்று அத்தனையும் இருந்தாலும் மேற்குல ஊடகங்களோ இல்லை ஜனநாயக காதலர்களோ வட கொரியாவை வசைபாடுவது போல சிங்கப்பூரை பாடுவதில்லை என்பதோடு போற்றி புகழ்கிறார்கள்.
2013-ம் ஆண்டில் சிங்கப்பூர் தமிழ் தொழிலாளிகள் நடத்திய கலவரம் ஒரு துவக்கம். தற்காலிக வேலைச் சீட்டு பெற்று சுமார் 15 இலட்சம் (மொத்த சிங்கப்பூர் மக்கள் தொகையில் 25%-க்கும் அதிகம்) தொழிலாளிகள் அங்கே கொத்தடிமை வேலை செய்கிறார்கள். இது போல விசா இல்லாமல் வேலை செய்வோரும் அங்கே அதிகம். அப்போதுதான் அவர்களை வரைமுறையின்றி சுரண்டலாம் என்பதால் சிங்கப்பூர் அரசு அதை கண்டும் காணாமலும் நடந்து கொள்ளும். சிலரை கைது செய்து பிரம்படி என்று செய்திகள் வந்தாலும் அது ஒரு கண்துடைப்பே.

மொத்தத்தில் தொழிலாளிகள் அங்கே குறைந்தபட்ச கூலியின்றி, குறைந்த அளவு சட்ட உரிமைகள் இன்றி சுரண்டப்படுகின்றனர். அந்த கடுமுழைப்பின் பலனை பாதிக்கும் மேல் அங்கே செலவழித்துவிட்டு மீதியை வீட்டிற்கு அனுப்புகின்றனர். அதிலும் திருட்டு விசாவில் அனுப்பிய ஏஜெண்டுக்கு சில வருட உழைப்பை அளிக்க வேண்டும். பிடிபட்டால் நாடு திரும்பி உள்நாட்டில் அகதி போல தத்தளிக்க வேண்டும்.

சிங்கப்பூரில் ஃபேஸ்புக் முதலாளி ஏன் செட்டிலானார், இத்தனை இடர்ப்பாடுகள் இருந்தும் தமிழ் தொழிலாளி ஏன் அங்கே வேலை செய்கிறார் என்பதையெல்லாம் புரிந்து கொண்டால் முதலாளித்துவம் என்றால் என்ன என்று எவருக்கும் புரியும்.

எனினும் இந்த அநீதியின் பாதையில் சிங்கப்பூர் என்றுமே ஒரு சுத்த பத்தமான ஊராக இருக்காது. அந்த நாட்டை உழைத்து உருவாக்கி செத்துப்போன தொழிலாளிகளின் வாரிசுகள் தமது உரிமைகளுக்காக களம் இறங்குவார்கள். இன்று அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கேட்கும் “முதலாளித்துவம் ஒழிக” எனும் முழக்கம் சிங்கப்பூரிலும் கேட்காதா என்ன?

அப்போது சிங்கப்பூர் இப்போது உள்ளது  போல ஒரு ‘சுத்தமான’ நாடாக இருக்காது.

–   வேல்ராசன்

– நன்றி. வினவு இணையதளம்.   http://www.vinavu.com/2015/03/24/singapore-dictator-lee-kuan-yew-passes-away/

 

Related Images: