ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அன்றாடங்காய்ச்சிகள், நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் குடும்பப் பிரச்சனைகளை பஞ்சாயத்து பண்ணுகிறோம் என்று காசு கொடுத்து கூட்டி வந்து அவர்களின் அந்தரங்கங்களை சிந்து பாடி நடத்தும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் தான் நாட்டாமையாக பல வருடங்கள் இருக்கிறார்.

பஞ்சாயத்து போர்வையில் அந்தரங்க வக்கிரங்களை பட்டியலிடுவதும், அவற்றை விலாவரியாக ‘விசாரித்து’, பார்க்கும் மக்களின் மனங்களில் எட்டிப் பார்க்கும் விகாரங்களை உருவாக்குவதுமான பெரும் ‘சமூக சேவை’யில் இந்நிகழ்ச்சிக்கு பெருமளவில் வரவேற்பு இருக்கிறது (அடுத்தவர் அந்தரங்கம் பற்றிப் பேசுவது நமக்கு கசக்குமா என்ன?). இந்தத் தொடரில் லட்சுமி அதிகமாக உபயோகித்த வாக்கியம் ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா!!’

இந்த வாக்கியம் காமெடி சீரியல்களிலும், ப்ரோக்ராம்களிலும், பேஸ்புக்கிலும் கிண்டலாக பேசப்பட்டு ஒரு பாப்புலரான கிண்டல் வாக்கியமாக பரவிவிட்டது. இதையடுத்து இந்த பாப்புலாரிட்டியை பயன்படுத்த முடிவுசெய்து இதே பெயரிலேயே ஒரு ஜாலி டி.வி. நிகழ்ச்சியை தயாரிக்க இறங்கிவிட்டார் லட்சுமி.

‘சொல்வதெல்லாம் அசிங்கம்’ தொடர் போல சீரியசாக இல்லாமல் யூத்துகளை கவர்ந்திழுக்கும் ஆடல், பாடல் என்று ஜாலியாகவும் கொஞ்சம் வேலை, நாட்டுப் பற்று என்று லைட் சீரியஸாகவும் இருக்கப் போகிறதாம். இதை நடத்தப் போவதும் இவரே !!

‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?’ என்று கேட்டால், ‘எனக்கு 3 பெண்குழந்தைகள். அவர்களை வளர்ப்பது எப்படி என்று எனக்குத் தெரியும். இந்த வயதில் இளைஞர்களுக்கும் பொறுப்பு வேண்டும் என்பதையும் சொல்ல முயல்வேன்.’ என்று சீரியஸாக பதில் வருது.

படிக்கிறது பைபிள் !! இடிக்கிறது சர்ச்சு !!

Related Images: