பஞ்சாயத்துகளை நோக்கி கமல் போகிறாரா அல்லது அவரை நோக்கி பஞ்சாயத்துகள் படம் எடுக்கின்றனவா என்று பல சமயங்களில் குழப்பம் வந்துவிடுகிறது. தற்போது சிக்கலில் ‘உத்தம வில்லன்’
விஸ்வரூபம் படத்தை அடுத்து கமல்ஹாசன் நடித்து வெளிவர உள்ள படம் உத்தம வில்லன். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.
வருகிற மே 1ம் தேதி வெளியாக உள்ள இப்படம் குறித்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. வில்லுப்பாட்டு பாடல் காட்சியொன்று படத்தில் இடம் பெறுகிறது. அந்த பாடல் வரிகளில் இந்து கடவுளை விமர்சித்து இருப்பதாகவும், அந்த சர்ச்சை காட்சியை நீக்காமல் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்று கூறி இந்து அமைப்பினர் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியும் இப்போது களத்தில் இறங்கியுள்ளது. இன்று சென்னை பெரு நகர காவல் ஆணையரைச் சந்தித்த அக்கட்சியின் பொறுப்பாளர் நாசர் ஒரு புகார் மனுவைத் தந்துள்ளார். அதில், நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து மதங்களை இழிவுபடுத்தி வருகிறார். முன்பு விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தினார். இப்போது உத்தம வில்லன் படத்தில் இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ளார்.
ஒரு நடிகராக அவர் தன் வேலையைப் பார்க்காமல், தொடர்ந்து மதங்களையும் அவற்றை மதிக்கும் மக்களையும் காயப்படுத்தி வருகிறார். எனவே சமூக அமைதி, நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் கமல் ஹாசனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்து அப்படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் விளக்கம் அளித்தார். அவர் கூறியபோது, உத்தமவில்லன் படத்தில் யாருடைய மனதையும் உணர்வுகளையும் புண்படுத்தும் படியான காட்சிகள் எதுவும் இல்லை. 8–ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு நாடக கலைஞருக்கும் தற்கால கலைஞருக்கும் இடையிலான வாழ்க்கை சார்ந்த படமாகவே இது இருக்கும். இந்த படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து ’யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். எனவே திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்று கூறினார்.