பாலாவின் பரதேசிக்குப் பின் அதர்வா புது ஆளாகவே மாறிப்போனார். தேர்ந்தெடுக்கும் படங்களில் கவனம், நடிப்பில் மெருகு என்று பாலாவிடம் அடி பட்ட பாடு அவருக்கு உதவவே செய்திருக்கிறது.
ஆனாலும் பரதேசி படம் வெற்றியடையாததால் அதர்வாவும் கொஞ்சம் பின் தங்கினார். பாலாவே அவருடைய தயாரிப்பில் வரும் ‘சண்டி வீரன்’ படத்தில் அதர்வாவை நாயகனாக்கினார். அது போக கணிதன், எட்டி என்று படங்கள் கையில் இப்போது. அதர்வாவிடம் பேசிய போது..
பரதேசிக்குப் பிறகு அதர்வா எப்படி ?
பரதேசியில் நடித்தற்குப் பின் அடுத்த படத்தை தேர்வு செய்யவே நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டேன். நான் சரியான படத்தைத் தான் தேர்வு செய்கிறேனா என்கிற சந்தேகம் இருந்துகொண்டேயிருந்தது எனக்கு. படு சீரியஸான பாத்திரமான பரதேசியின் தாக்கத்திலிருந்து நான் மீளவேண்டியிருந்தது. ஆனால் அந்த பாத்திரமே எனக்கு எத்தகைய ரோலையும் செய்து விடமுடியும் என்கிற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.
பாலாவின் இயக்கத்தில் நடிப்பதற்கும் அவருடைய தயாரிப்பில் நடிப்பதற்கும் வித்தியாசம் தெரிகிறதா?
பாலாவின் இயக்கத்தில், அவர் எதிர்பார்த்த நடிப்பு தெரியும் வரை பாலா விடவே மாட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் காலில் வென்னீர் ஊற்றியமாதிரியே எல்லோரும் பரபரப்பாக நிற்பார்கள். தயாரிப்பாளராக பாலா இயக்குனருக்கு முழு சுதந்திரமும் அளித்துவிடுவதால் இங்கு இயக்குனரின் கட்டுப்பாட்டிலேயே எல்லாம் நடக்கும்.
சண்டி வீரன் படத்தின் இயக்குனர் சற்குணம் பற்றி..
சற்குணம் சார் இயக்கத்தில் நடிப்பது மிக ஜாலியானது. அவர் ஸ்கிரிப்டை, டயலாக்கை ஸ்பாட்டில் இன்னும் மாற்றம் செய்து கொண்டேயிருப்பார்.
சண்டி வீரன் சீரியஸான படமா?
இல்லையில்லை. சண்டி வீரன் ஒரு முழுக்க முழுக்க பொழுதுபோக்குப் படம். கிராமத்து சப்ஜெக்ட். அதில் மன்னார்குடியைச் சேர்ந்த துடிப்பான, ஜாலியான இளைஞனாக நான் நடிக்கிறேன்.
வேறு எதுவும் படங்கள் இருக்கின்றனவா?
சண்டி வீரன் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருக்கிறது. படத்தின் ஆடியோ வெளியீடு விரைவில் நடக்க இருக்கிறது. படம் ஜூன் அல்லது ஜூலையில் ரிலீஸாகும். இது தவிர கணிதன் என்கிற படத்தில் பத்திரிக்கை ரிப்போர்ட்டராக நடித்திருக்கிறேன். பத்திரிக்கை ரிப்போர்ட்டர் தனது அடையாளத்தை இழந்து அதைத் தேடுவதுதான் கதை. இன்னொரு படமான ‘எட்டி’ படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷனில் இருக்கிறது.