தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது காக்கா முட்டை. ஏற்கனவே இரண்டு அவார்டுகளும் வாங்கியுள்ளது. ஆனால் அவார்டு படங்களுக்கான யதார்த்தத்தோடு ரத்தமும் சதையுமான திரைக்கதை படத்தை வெற்றிக்குள்ளாக்கியிருக்கிறது.

படத்தின் நாயகர்கள் சின்ன காக்காமுட்டை மற்றும் பெரிய காக்க முட்டை எனப்படும் இரு சேரிவாழ்ச் சிறுவர்களைப் பற்றியது. அவர்களின் அப்பா ஜெயிலில் இருக்க, அம்மா அவரை பெயிலில் வெளியே கொண்டு வர வழி தேடிக்கொண்டிருக்கிறாள். ரயில்வே ட்ராக்கில் விழும் கரித்துண்டுகளை பொறுக்கி விற்று தங்கள் அன்றாட வாழ்வை ஓட்டுகிறார்கள் சின்ன முட்டையும் பெரிய முட்டையும்.

அவர்களின் வாழ்க்கையை எவ்விதத்திலும் மேம்படுத்தாத உலகளாவியம் அங்கே திறக்கப்படும் ஒரு பிட்சா கடையாக அவர்கள் வாழ்க்கையில் நுழைகிறது. அவர்களின் ஆதர்ச சினிமா நாயகன் சிம்பு அங்கு வந்து பிட்சா சாப்பிடுகிறார். அதைப் பார்த்து தாங்களும் பிட்சா சாப்பிடவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் சிறுவர்கள் இருவரும். அதற்காக 300 ரூபாயை அவர்கள் எப்படி சேர்த்தார்கள் என்பது தான் கதை.

இவ்வளவு எளிமையான கதையை திரைக்கதையாக்கிய விதத்திலும், அதில் உள்ள மாந்தர்கள் இயல்பாக உலவவிட்டதிலும், அவர்களுக்கிடையேயான உரையாடல்களை மிக இயல்பாக சினிமாத்தனமில்லாமல் காட்டியதிலும் அதில் மெல்லிய உணர்வுகளை தட்டி எழுப்பியதிலும் பல சிக்ஸர்கள் அடித்திருக்கிறார் மணிகண்டன். பாராட்டுக்கள்.

சிறுவர்கள் ரமேஷ் மற்றும் விக்னேஷ், அவர்களின் அம்மா, அந்தப் பாட்டி என்று அசத்தலான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள் எல்லா பாத்திரங்களும். வலிந்து திணிக்கப்பட்ட வில்லன் இல்லை. எப்படி இருக்கிறது ஏழைகளின் வாழ்க்கை பார்த்தீர்களா என்கிற நையாண்டி கூட இல்லை. ஆனால் படம் பார்ப்பவர்களை அவர்கள் மேல்தட்டு, கீழ்த்தட்டு, நடுத்தரம் என்று யாராக இருந்தாலும் அவர்களை கொஞ்சமாவது சிந்திக்க வைக்கிறது உள்ளுக்குள்ளே. ஐஸ்வர்யா, சாந்திமணி, ‘சூது கவ்வும்’ ரமேஷ், பாபு ஆண்டனி, கிருஷ்ணமூர்த்தி, ஜோ மல்லூரி என அனைவருமே படத்தின் உயிரோட்டத்துக்கு உதவுகிறார்கள்.

இந்த போலியான ஏழை பணக்கார இடைவெளியின் குரூர முகத்தையும் எந்த வித சலனமுமின்றி காட்சிப் படுத்திச் சென்று பார்வையாளர்களை உள்ளூர சலனப்படுத்திவிடுகிறார் இயக்குனர் மணிகண்டன். இயக்குனராக அவர் நிச்சயம் பல மடங்கு ஜொலித்திருக்கிறார். ஒளிப்பதிவும் அவரே. ஜி.வி. பிரகாஷ்ஷின் இசை சொதப்பலில்லை. கிஷோரின் எடிட்டிங் இன்னொரு பலம்.

காக்கா முட்டை – பொன்முட்டை

Related Images: