“மருந்துக் கம்பெனிகள் பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள். மாபியாக்களும் பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள்.மாபியாக்களின் பக்க விளைவுகள் திட்டமிட்ட கொலைகளும், மரணங்களும். மருந்துக் கம்பெனிகளின் பக்க விளைவுகளும் அதே.மாபியாக்கள் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுப்பதுபோலவே மருந்துக் கம்பெனிகளும் லஞ்சம் கொடுக்கின்றன. பெரிய கார்ப்பரேட் மருந்து கம்பெனிகளுக்கும் பெரும் கொலைக்குற்றங்கள் செய்யும் மாபியா கும்பலுக்குமிடையே இப்படியொரு பயங்கரமான ஒற்றுமை இருக்கிறது.” – பிஸர் பார்மா (Pfizer Pharma) மருந்து நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர்.

அமெரிக்க மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான பீட்டர் சி. காட்சே(Peter C Gotzsche) மருந்துக் கம்பெனிகளின் கிரிமினல் குற்றங்கள் பற்றி நேரடியான அனுபவம் கொண்டவர். கோச்ரேன் சமூகநல மருத்துவ மையத்தை 1993லிருந்து துவங்கி நடத்தி வருகிறார். எண்ணற்ற மருந்துகம்பெனிகளின் மீதான நீதிமன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியுள்ளார். சுமார் 70 ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியவர். தனது “உயிர்க்கொல்லி மருந்துகளும் திட்டமிட்ட குற்றங்களும்” என்கிற புத்தகத்தில் அமெரிக்காவின் மருந்து கம்பெனிகளின் தீய போக்கை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். அந்தப் புத்தகத்திலிருந்து சில விஷயங்கள்..

மருந்துகளின் விலையைப் பற்றிப் பேசுகையில், “மருந்துகளின் விலை அதிகமாக இருப்பதன் காரணம் அதை உருவாக்கும் செலவினால் அல்ல. மாறாக அரசியல்வாதிகளிடமும், பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் அது சம்பந்தமாக லஞ்சம் கொடுத்து மருந்துக்கு ஆதரவான முடிவுகளை பாராளுமன்றங்களில் எடுக்கவைப்பதாலும், பெரிய அளவில் மார்க்கெட் செய்வதாலும், கொள்ளை லாபம் அடிப்பதாலும் தான்” என்கிறார் இவர்.
“மருந்துக் கம்பெனிகள் தங்களது மருந்துகளைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளைக் கூட சாதகமான ஆட்களைத் தேர்ந்தெடுத்து, தங்களுக்கு சாதகமான முடிவுகள் வரும்படி ஆராய்ச்சிகளை நடத்தி அவற்றை கைதேர்ந்த வல்லுனர்களைக் கொண்டு உண்மை போல தெளிவாக எழுதிவிடுகிறார்கள். மார்க்கெட்டில் சிறந்த மருந்து எனப்படும் பெரும்பாலான மருந்துகள் மோசடியான ஆராயச்சி முடிவுகளை கொண்டு சிறந்ததாக நிரூபிக்கப்பட்டவையாக இருக்கின்றன” என்கிறார்.

அவர் கூறுவதற்கு உதாரணம் வேண்டுமா ? மெர்க்(Merck) பார்மா கார்ப்பரேட் நிறுவனம் அம்பலப்பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள். மெர்க் ஊழியர்களுக்கிடையே பரிமாறப்பட்ட ஈமெயிலில் தங்களது மருந்து பிராண்டான வாக்ஸ்(Voxx) ஐ எதிர்த்த டாக்டர்களை ‘ஊமையாக்க’ அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பற்றி பேசப்பட்டுள்ளன. ஒரு மெயிலில் இப்படி எதிர்க்கும் மருத்துவர்களை “நாம் இவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்கள் இருப்பிடம் தேடிப் போய் அழிக்கவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 200ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்டான்போர்டு யுனிவர்சிட்டியைச் சேர்ந்த மருத்துவ விரிவுரையாளர் ஜேம்ஸ் ப்ரைஸ் தனது மருத்துவர் குழுவைச் சேர்ந்தவர்கள் மெர்க் நிறுவனத்தின் வாக்ஸ் மருந்துகளை விமர்சித்தார்கள் என்பதற்காக கொலைமிரட்டல் விடுக்கப்படார்கள் என்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
மருத்துவ இதழ்களில் மிக மோசடியான புள்ளிவிவரங்களைப் போட்டு இந்நிறுவனத்தின் ஆட்கள், பெரும் மருத்துவர்களின் பெயர்களில் எழுதிய கட்டுரைகள் வெளியிடப்பட்டன.

அமெரிக்க மருத்துவர் சங்கம் என்றழைக்கப்படும் (AMA – American Medical Association) தங்கள் சொல்பேச்சு கேளாத மருத்துவர்களின் மேல் எப்படி வேண்டுமானாலும் நடவடிக்கை எடுத்து மிரட்டலாம் என்பதற்கு வசதியாக புதிய விதிகளைப் புகுத்தியது. இந்த விதிகள் நிறுவனங்களின் மருந்துகள் பற்றி மருத்துவர்கள் மீடியாக்களில் விமர்சித்துப் பேசுவதை தடை செய்தது. இத்தனைக்கும் இது அமெரிக்காவின் மொத்த மருத்துவர்களில் 17 சதவீதம் பேரை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. அதிலும் பெரும்பாலானவர்கள் இலவச உறுப்பினராகச் சேர்ந்த மாணவர்கள். ஆனால் அது அமெரிக்க்ப பாராளுமன்றத்தில் பெருமளவு உறுப்பினர்களை கையில் போட்டுக்கொண்ட பெரிய மருந்துக் கம்பெனிகளில் ஐந்தாவது ஆளாக இருக்கிறது. 2014ல் மட்டும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சமாக இந்திய மதிப்பில் சுமார் 1200 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாம் இந்த சங்கம்.

சரி. இந்தியாவில் மருந்து நிறுவனங்களின் கதை என்ன? அமெரிக்காவில் மருந்து நிறுவனங்களின் கதை என்னவோ அதை விட வீரியமாகவும், பலமாகவும் இந்தியப் பாராளுமன்றத்தை மருந்துக் கம்பெனிகள் ஆட்டுவிக்கின்றன என்பதுவே உண்மை. நூறு ரூபாயளவில் இருந்த கேன்ஸருக்கான மருந்து பி.ஜே.பி அரசின் கடந்த பட்ஜெட்டுக்குப்பின் ஒரே நாளில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்தது. இது ஒரு சின்ன உதாரணம்.