ஆர்.எஸ் இன்போடெய்ன்மன்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் பாபி சிம்ஹா. பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ராணி, பாலா சரவணன் ஆகியோரது நடிப்பில் புதுமுக இயக்குனர் சரத் இயக்கத்தில்,ஒரு பொலிடிக்கல் த்ரில்லராக உருவாகி வருகிறது கோ-2. இயக்குனர்கள் விஷ்ணு வர்தன், சக்ரி டோலெட்டி ஆகியோருடன் பணிபுரிந்தவர் இப்படத்தின் இயக்குனர் சரத்.
“படம் இயக்க வேண்டும் என்று முடிவு எடுத்தவுடன் இப்பொழுது இருக்கும் ட்ரெண்டிலிருந்து மாறுப்பட்ட ஒரு படம் எடுக்க எண்ணினேன், ஒரு பொலிடிக்கல் சப்ஜெக்ட் சரியாக இருக்கும் என தயாரிப்பு தரப்பில் இருந்தும் கருதப்பட்டதால் இந்த கதையை படமாக்க முடிவு செய்தோம். ஏற்கனவே திரைக்கு வந்து வெற்றிக் கண்ட ஒரு பொலிடிக்கல் த்ரில்லர் ‘கோ’ என்பதால் அதன் அடிப்படையில் கோ-2 என டைட்டில் வைத்தோம். மற்றபடி ‘கோ-2’ திரைப்படம் ‘கோ’ படத்தின் தொடர்ச்சி கிடையாது. எனினும் கோ படத்தில் இருந்த பொலிட்டிக்கல் த்ரில்லரின் அதனை அம்சங்களும் இதிலும் இருக்கும்.
“பிரகாஷ் ராஜ் சார் கதையை கேட்டு மகிழ்ந்து போனார். பின்னர் ஸ்கிரிப்ட் முழுதும் படித்துவிட்டார். இப்பொழுது ஒவ்வொரு ஷாட்டிலும் அவரது நடிப்பு சிலிர்ப்பூட்டுகிறது. இவ்வளவு குறுகிய காலத்தில் தேசிய விருது என்னும் இமாலயத்தை எட்டி பிடித்துள்ளார் பாபி சிம்ஹா. தன்னால் இதற்கு மேலும் செய்ய முடியும் என ஒவ்வொரு முறையும் நிருபிக்கும் ஒரு நடிகர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளில் நடிப்பில் ஒருவரை ஒருவர் யார் மிஞ்சுவது என்ற போட்டி காண்பதற்கு அற்புதமாய் இருக்கும்.” எனக் கூறினார் இயக்குனர் சரத்.
“இப்படத்தில் லியோன் ஜேம்ஸ் என்ற புதிய இசையமைப்பாளரை அறிமுக படுத்தியுள்ளோம். திரை இசையில் இவர் நிறைய சாதிப்பார் என்பதற்கு நிறைய அறிகுறிகள் தென்படுகின்றன. எல்லா வகையான ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் அரசியல் வாழ்க்கையின் நிழல் உலகு விஷயங்களை பற்றி கோடிட்டு காட்டும் இந்த கோ-2.” என்றார் இயக்குனர் சரத்.