`திரிஷ்யம்` படத்தின் ரீமேக்கான `பாபநாசத்துக்கு விமர்சனம் எழுதும்போது நியாயமாக இரண்டு காரணங்களுக்காக இப்படத்தின் கதையை எழுதக்கூடாது. முதல் காரணம் 90 சதவிகிதம் பேருக்கு கதை தெரியும். இரண்டாவது காரணம் படத்தின் ஒருவரிக்கதை கூட தெரியாமல் அனுபவித்துப் பார்க்கவேண்டிய படம் இது.
ஆனாலும் இத்தினியூன்டு கதை. பாபநாசத்தில் கேபிள் டிவி நடத்திவரும் சுயம்புலிங்கம், மனைவி ராணி, அவர்களுக்கு இரு பெண் குழந்தைகள். சுயம்புலிங்கத்திற்கு மகள் மூலமாக ஒரு பூதாகரப்பிரச்சினை வருகிறது. ஒரு கொலைப்பழி அவர் மகள் மேல் விழுகிறது. அதிலிருந்து தப்ப
`எதற்காகவும் பொய்யே சொல்லக்கூடாது என்று தன் மனைவி பிள்ளைகளை வழிநடத்தி சுயம்புலிங்கம் `இதற்காக பொய்சொல்வதில் தவறே இல்லை` என்று அவர்களைத் தயார்படுத்தி போலீஸை எதிர்கொள்கிறார். அப்புறம் என்ன நடந்தது என்பது தான் பாபத்தின் நாசம் கதை.
`கமல்ஜி உங்களைக் கரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறோம், இனிமேல் ரீமேக் படங்களில் நடிக்காதீர்கள். நேற்று பிறந்த சுண்டைக்காய் பயலுக எல்லாம் `மோகன்லால் நடிப்புல பாதிகூட இல்லப்பா` என்று கமெண்ட் அடிக்கும்போது ரத்தம் கொதிக்கிறது. ஆனால் அதுவே உண்மை.
முதல் பாதியில் கதை சும்மா வளவள. ஆனால் இடைவேளைக்குப்பின் விசாரணை வளையத்துக்குள் குடும்பம் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தைகளில் தான் கதை நிற்கிறது. பெண் பிள்ளைகள் பெற்ற தந்தைகள் கைவசம் நாலைந்து கைக்குட்டைகளோடு போவது நல்லது. அழுது தீர்க்க அத்தனை காட்சிகள் இருக்கின்றன.
கலாபவன் மணி,எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு,அருள்தாஸ்,வையாபுரி,டெல்லி கணேஷ்,சார்லி, போன்ற கமலின் கம்பெனி நட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில், டி.ஐஜி, மற்றும் அவரது கணவராக வரும் ஆஷா சரத்தும், ஆனந்த் மகாதேவனும் அட்டகாசமாக நடித்திருக்கிறார்கள்.
ஹைக்கூவாய் வைக்கப்பட்டிருக்கும் சின்னச்சின்ன பாடல்களிலும், பின்னணி இசையிலும் ஜிப்ரான் அவ்வப்போது `உள்ளேன் ஐயா` என்கிறார்.
கமலின் திருநெல்வேலி பாஷை உச்சரிப்பு கொஞ்சம் நச்சரிப்பு ரகம்தான். ஏனோ ஒட்டவில்லை. அதற்கு முக்கியமான காரணம் வசனகர்த்தா ஜெயமோகனாகத்தான் இருக்கவேண்டும். வஜனம் என்ற பெயரில் வண்டிவண்டியாய் எழுதித்தள்ளியிருக்கிறார்.
கமலுக்கு எப்போதுமே ஒரு கெட்ட ராசி உண்டு. `ராஜபார்வை`யில் தொடங்கி,`குணா` மகாநதிகள்` வழியாக `அன்பே சிவம்` வரை அவரது ஆகச்சிறந்த படங்கள் வசூலில் படுத்துவிடும். இந்த `பாபநாசமும்` கமலின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்றுதான். ஆனால் இது வசூலில் ஜெயித்துவிடும் என்று உள்மனசு சொல்கிறது.