சப்னா பவ்னானி மும்பையில் புகழ்பெற்ற முடியலங்கார நிபுணர்களில் ஒருவர். பெரிய பிரபலங்களுக்கு ஹேர்ஸ்டைல் செய்து பிரபலமானவர் இவர். அவரது ஸ்டைலான முடியலங்காரங்களாலும், முரட்டுத்தனமான பேச்சினாலும், அவர் உடலில் வரைந்திருக்கும் விதவிமான டாட்டூக்களாலும் அவர் பிரபலம். டி.வி.யில் பிக்பாஸ் சீசன் – 6 ல் வந்திருக்கிறார். 44 வயதாகும் இவர் சமீபத்தில் பேஸ்புக்கில் சிறுவயதில் தனக்கு நடந்த பாலியல் வன்முறையைப் பற்றி மனம் வலிக்கப் பேசியிருக்கிறார்.
எடின்பர்க்கில் நடந்த விழாவில் நிர்பயாவின் நிகழ்வு நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது. அதைப் பார்த்ததும் மன எழுச்சி அடைந்த சப்னா தனது வாழ்வில் நடந்த விஷயத்தை வெளிப்படையாகப் பேச முடிவுசெய்தார். பேஸ்புக்கில் 65 ஆயிரம் பேர்கள் லைக் செய்து, 6 ஆயிரம் ஷேர்களுக்கு மேல் செய்யப்பட்ட அவரது ‘பம்பாயின் மனிதர்கள்’ என்கிற கட்டுரையில் தனக்கு நிகழ்ந்த கொடூர நிகழ்வை பின்வருமாறு எழுதியிருக்கிறார் அவர்.
“எனது 14 வயதில் நான் பையன்களுடன் பேசுவேன்; பைக் ஓட்டுவேன்; சிகரெட் குடிப்பேன். மும்பை பாந்த்ரா பகுதியில் பலரும் என்னை விபச்சாரி என்று திட்டுவார்கள். அப்போது அந்த வார்த்தைகளின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. பையன்களுக்கு இணையான விஷயங்களை செய்பவளாக நான் இருந்ததாலேயே நான் விபச்சாரி என்றால் அதில் எனக்கு சந்தோஷமே.
எனது அப்பாவின் மரணத்துக்குப் பின் சிகாகோவுக்கு குடிபெயர்ந்த நான் அங்கு என்னைப் போல சுதந்திரமாக இருந்த பலபேரைக் கண்டேன். நிறைய பேருடன் பழகினேன். முடியலங்காரம் பற்றி நிறைய கற்றுக்கொண்டேன். அது ஒரு கிறிஸ்துமஸ் இரவு. தனியாக ஒரு பாரிலிருந்து வெளியே வந்தேன். குட்டைப் பாவாடை உடையும் சிவப்பு லிப்ஸ்டிக்கும் அணிந்திருந்தேன். எனக்கு வயது அப்போது 24. கொஞ்சம் குடித்திருந்தேன்.
அப்போது வந்த ஒரு இளைஞர்கள் கும்பல் என் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வைத்து அவர்கள் குறியை சுவைக்கும்படி மிரட்டினார்கள். உயிருக்குப் பயந்து அவர்கள் சொன்னதைச் செய்தேன். பின்பு அவர்கள் என்னை குழுவாக பாலியல் வன்புணர்ந்தார்கள். குளிரிலும், அதிர்ச்சியிலும் நான் நடுங்கிக் கொண்டே வீட்டுக்குப் போனேன். அன்றிலிருந்து ஒவ்வொரு கணமும் அந்த கொடூர நிகழ்வை மனதிலிருந்து அகற்ற போராடிக்கொண்டே இருந்தேன். அது என் மனதை அரித்து தின்றுவிடாமலிருக்க எனக்குள் போராடிக் கொண்டே இருந்தேன். இன்னும் கூட நான் குட்டைப் பாவாடையும் சிவப்பு லிப்ஸ்டிக்கும் அணிகிறேன்.
பின்பு நான் எனது கல்லூரி காதலனை திருமணம் செய்தேன். ஆனால் அங்கும் குடும்ப வன்முறை என்மேல் பாய்ந்தது. அந்தத் திருமணத்தை விட்டு வெளியேறினேன். நான் பெண்ணியவாதியா ? இல்லை. பல சமயங்களில் நம் வாழ்க்கை நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அது போன்ற சூழ்நிலைகளை தைரியமாக எதிர்த்து அதை விட்டு வெளியேறி வர நமக்கு மன உறுதி இருக்கவேண்டும். எனக்கு அதற்கு 20 வருடங்கள் ஆனது.
எந்தப் பெண்ணும் அடிபடவோ, உடலை விற்கவோ அல்லது குழுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகவோ விரும்புவதில்லை. இதுபோன்ற கொடூரம் நடந்ததை உள்ளுக்குள் வைத்திருக்கும் எந்தப் பெண்ணும் கோழையல்ல. அவள் அதனுடனான தன்னுடைய போராட்டத்தை நடத்திக் கொண்டேயிருக்கிறாள் என்பது தான் உண்மை. அது ஒரு மன உறுதி. அதை நாம் மதிக்க வேண்டும்.
ஆண்களின் பாலியல் வன்முறையானது வெறும் உடலின்பம் சம்பந்தமானது அல்ல. அது முக்கியமாக பெண் உடலின் மேல் ஆண் செலுத்த விரும்பும் அதிகாரம் சம்பந்தப்பட்டது. பேஸ்புக்கில் ‘Sapna Moti Bhavnani’ ன் பக்கம் இதுதான்.
https://www.facebook.com/sapnabhavnani