இன்று பத்திரிகையாளர்களை அவசரமாக சந்தித்த டி.ஆர் ‘சிம்புவின் `வாலு` பட ரிலீஸ் குறித்து மீடியாக்கள் தொடர்ந்து தவறான செய்திகள் தருகிறார்கள். இந்நிலை இப்படியே தொடர்ந்தால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது` என்று பேசினார்
’நான் இப்படத்தின் விளம்பரத்தை ஜூன் 19-ந்தேதி முதல் விளம்பரப்படுத்தி வருகிறேன். அன்றைய தினம் முதல் இந்த விளம்பரங்களில் இடதுபுறத்தில் நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் பெயரையும், வலது புறத்தில் மேஜிக் ரேஸ் நிறுவனத்தின் பெயரையும், நடுவில் எனது நிறுவனமான சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் பெயரையும் பயன்படுத்தி வருகிறேன்.
அதுமட்டுமில்லாமல், ரம்ஜானை கொண்டாட, இன்ஷா அல்லாஹ் என்றும் ஜூலை 19-ந்தேதி வெளியான விளம்பரத்தில் பதிவு செய்திருந்தேன். நான் இறைவன் மீது நாட்டம் கொண்டவன். அதனால்தான், அந்த வாசகத்தை ‘வாலு’ படத்தின் விளம்பரத்தில் பதிவு செய்திருந்தேன். இறைவன் இந்த படத்தின் மீது நாட்டம் வைத்திருந்தால் கண்டிப்பாக ஜூலை 17-ந்தேதி ‘வாலு’ படம் வெளிவரும்.
மேலும், தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் மேஜிக் ரேஸ் நிறுவனத்தின் பெயரை நான் விளம்பரங்களில் பயன்படுத்தி வருகிறேன். இவ்வளவு நாள் வழக்கு தொடராமல், வெளியீட்டு தேதி நெருங்கும் சமயத்தில் அவர்கள் வழக்கு தொடர காரணம் என்ன? அவர்கள் இந்த படத்தின் உரிமையை கொண்டாட நினைக்கிறார்களா? அல்லது இப்படத்தை நாங்கள் வெளியிடுவதை தடுக்க நினைக்கிறார்களா?
நேற்று நீதிமன்றத்தில் மேஜிக் ரேஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. நிக் ஆர்ட்ஸ் தனது பதில் மனுவை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கிறது. உடனே, நீதிமன்றம் இந்த வழக்கு இதே நிலையிலேயே நீடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறது. ஆனால், இதை சில மீடியாக்கள் படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு விட்டது என்று வெளியிட்டு விட்டன. நீதிமன்றம் எந்த இடத்திலும் படத்திற்கு இடைக்காலத் தடை என்பதை கூறவில்லை.
இந்த வழக்கு மீண்டும் வருகிற 13-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிமன்றம் இந்த படத்திற்கு என்ன தீர்ப்பு வழங்கினாலும் அதற்கு நான் தலை வணங்குகிறேன்` என்றார் டி.ஆர்.