மும்பையைச் சேர்ந்த தொழில் ஆர்வலர் வருண் அகர்வால் ஒருநாள் அலுவல் நிமித்தமாக வுபர்(Uber) எனப்படும் கால்டாக்ஸியில் ஏறினார். அங்கே அவருக்கு ஆச்சரியம். கார் ட்ரைவியாக இருந்தது ஷபானா என்கிற இளம்பெண். ஆச்சரியமடைந்த வருண் அவரைப் பற்றி விசாரித்திருக்கிறார். அப்போது மும்பையில் மட்டும் சுமார் 150 பெண் வுபர் டிரைவிகள் இருக்கிறார்கள் என்கிற தகவலைச் சொன்னாரம் ஷபானா.
ஷபானா தனது பெற்றோருக்குத் தெரியாமல் டிரைவிங் க்ளாஸில் சேர்ந்து டிரைவராகி வுபர் கால்டாக்சியில் ஓட்டுனராக பணியில் சேர்ந்தார். அவரது பெற்றோர் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின் சம்மதித்தார்களாம். வருண் அகர்வால் ஷபானாவிடம் “இரவு நேரங்களில் டாக்சி ஓட்டுகிறீர்களே… உங்களுக்குப் பயமாக இல்லையா ?” என்று கேட்க உடனே ஷபானா “நான் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்றவள். என்னை வம்பிழுக்கும் ஆண்களிடமிருந்து என்னை தற்காத்துக் கொள்ள எனக்குத் தெரியும்” என்றாராம். உடனே அந்தப் பெண்ணைப் பற்றி புகழ்ந்து வருண் தனது பேஸ்புக்கில் செய்தி வெளியிட அதை 8 ஆயிரம் பேர் ஷேர் செய்ய 1200 பேர் கமெண்ட் கொடுக்க பிரபலமாகிவிட்டார் ஷபானா.
மேம்போக்காகப் பார்த்தால் என்னே பெண்களின் சமத்துவம் என்று தோன்றும். சில மாதங்களுக்கு முன்பு வுபர் கால்டாக்ஸியின் டிரைவர் ஒருவர் தனது டாக்சியில் பயணம் செய்த பெண் பயணியை பாலியல் வன்முறை செய்ததும் அதையொட்டி டெல்லியில் அந்த டாக்ஸி தடை செய்யப்பட்டதும் தெரிந்ததே. அந்த நியூஸினால் தடைசெய்யப்பட இருந்த வுபர் டாக்ஸி இப்படி ஒரு விளம்பர டெக்னிக் செய்ததாகவும் இதைக் கருதிக்கொள்ளலாம்.