இந்தியன் முஜாகிதீன் என்னும் இந்தியக் கண்டுபிடிப்பான தீவிரவாத இயக்கத்தின் தலைவர் யாசின் பட்கல் ஐதராபாத் சிறையில் இருக்கிறார். 2010ல் பூனேவில் நடந்த ஜெர்மன் பேக்கரி வெடிகுண்டு வழக்கில் கைதானவர் இவர்.
யாசின் சமீபத்தில் தனது மனைவி ஸாகிதாவுடன் தொலைபேசியில் பேசியது உளவுத்துறை அமைப்பால் ஒட்டு கேட்கப்பட்டது. அதில் ‘நான் சீக்கிரம் வந்துடுவேன். டமாஸ்கஸில் இருந்து உதவி வருது’ என்று யாசின் மனைவியிடம் பேசியிருக்கிறார் என்று உளவுத்துறை தகவல் வெளியிட்டு நாட்டையே உலுக்கியது.
டமாஸ்கஸ் சிரியாவின் ஒரு நகரம். டமாஸ்கஸ் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிராவதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அப்படியானால் இந்தியன் முஜாகிதீனுக்கு டமாஸ்கஸ்ஸில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். உதவுகிறதா? என்கிற சந்தேகம் உளவுத்துறைக்கு வரவே இல்லையாம். உளவுத்துறையே
கிளப்பி விட்ட செய்தி போலத் தான் இது நமக்குத் தெரிகிறது.
ஆனால் தீவிரவாதிக்கு சிறையில் எப்படி செல்போன் கிடைத்தது என்பது தான் உளவுத்துறைக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியதாம். இதிலென்ன ஆச்சரியம்? எல்லா சிறைகளிலும் செல்போன்கள் புழக்கத்தில் இருப்பது வார்டன்கள் வீட்டு செல்லப்பிராணிகள் வரை எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். பேசுவதற்கான சார்ஜ் மட்டுமே வேறுபடும்.
இந்திய உளவுத்துறைக்கு ஒரு வழியாக ஐ.எஸ்.ஐ.எஸ் இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டது என்று மக்களை பயம் காட்ட விஷயம் கிடைத்திருக்கிறது.