ஊழலற்ற ஆட்சியைக் கொடுப்போம். கறுப்புப் பணத்தை ஸ்விஸ் பாங்குகளிலிருந்து மீட்டு மக்கள் ஒவ்வொருவரின் அக்கௌன்ட்டிலும் 15 லட்ச ரூபாய் வரை போடுவோம் என்று முழங்கிய பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியில் தான் வியாபம் ஊழலும் ,லலித் கேட்டும் வெளிவந்து நிற்கின்றன.

சுஷ்மா ஸ்வராஜ் யாருமில்லாத பார்லிமண்டில் லலித்மோடி விவகாரத்தில் தான் நிரபராதி என்று முழங்குகிறார். ராஜஸ்தானின் முதல்வர் வசுந்தரா ராஜேவின் பங்கு பற்றி பெரிய சர்ச்சை எழுந்தது. மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌகான் ஆட்சியில் தான் வியாபம் தேர்வு முறைகேடுகளில் கவர்னர் மகன் வரை பங்கிருப்பது என்று செய்திகள் அடிபட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் பி.ஜே.பி தான் ஆளுகிறது.

பீகாரில் நடந்த தேர்தல் ஊர்வலத்தில் பேசிய மோடி தனது கட்சி ஆட்சி செய்யும் இந்த இரு மாநில முதலமைச்சர்களையும் பாராட்டியதன் மூலம் அவர்கள் மேலிருந்த ஊழல் புகாரை கண்டுகொள்ளவில்லை என்பதை விளக்கிவிட்டார். காங்கிரஸின் ஊழலுக்கு எதிராக முழங்கிய மோடி இந்த ஊழல் குற்றச்சாட்டுக்களை கண்டுகொள்ளாதது ஏன் ? காரணம் இருக்கிறது.

முதலாவதாக காங்கிரஸ் ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி பார்லிமண்ட்டையே ஸ்தம்பிக்க வைத்தாலும் வேறு வழிகளில் சட்ட மசோதாக்களை பி.ஜே.பி அரசு கொண்டு வர வாயப்பு வழி இருக்கிறது. இரண்டாவதாக மத்தியில் ஆளும் அரசில் ஏதாவது பிரச்சனைகள் வரும்போது அதை நிலைநிறுத்துவது மற்ற மாநிலங்களிலுள்ள அக்கட்சியின் பலமே. அந்த வகையில் ராஜஸ்தானிலும், மத்தியப் பிரதேசத்திலும் பி.ஜே.பியின் ஆட்சி பலம் மோடி அரசுக்கு முக்கியம்.

மூன்றாவதாக தமிழ்நாடு, ஒடிஸ்ஸா, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய முதல்வர்களை தமக்கு ஆதரவாக இழுக்கும் வேலையை ஒரு புறம் பி.ஜே.பி செய்து வருகிறது. மோடி-ஜெயலலிதா சந்திப்பு அந்தப் பகடையில் ஆடப்படும் ஆட்டமே. நான்காவதாக 2019ல் பி.ஜே.பி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் அது ஹிந்தி மாநிலங்களில் அது பெறும் பலத்தைப் பொறுத்ததே. எனவே வரும் பீகார் சட்டசபைத் தேர்தலில் கொஞ்சம் வெற்றி கிடைத்தாலும் அடுத்து வரும் மத்தியப் பிரதேசத் தேர்தல் வெற்றிக்கு அது உதவும்.

இப்படி பல கணக்குகளை மனதில் வைத்தே மோடி ஊழல் ஸ்பீக்கரை அலறவிடாமல் அமுக்கி வாசிக்கிறார். இதே போல்தான் மன்மோகன் சிங்கும் அமுக்கி வாசித்தார். அப்போது அவரை மௌனச் சாமியார் என்றார்கள். மோடி மௌனமாக இல்லை. அவர்கள் நிரபராதிகளே என்று உரத்துப் பேசுகிறார்.

Related Images: