ஹிந்துத்துவ அரசியலை அடிநாதமாகக் கொண்ட சங்பரிவார் குழு (ஆர்.எஸ்.எஸ், சிவசேனா முதல் பி.ஜே.பி. வரை) வின் எல்லாத் தலைவர்களும் முஸ்லீம் தீவிரவாதத்துக்கு எதிராக பெருங்குரலெடுத்து முழங்குவார்கள். ஆனால் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பி.ஜே.பியின் பொறுமையான தலைவர்களில் ஒருவர். யார் எரிச்சலடையும்படி பேசினாலும் கூலாக இருப்பவர். எவ்வளவுதான் பொறுமையானவராகக் காட்டிக்கொண்டாலும் வெள்ளியன்று அவருள்ளிருக்கும் ஹிந்துத்துவா பூனை வெளியே வந்துவிட்டது.

ஒரு டி.வி.சேனல் ஹிந்துத்துவ தீவிரவாதம் பற்றிப் பேசியபோது ‘ராஜ்நாத் சிங்குக்கு ஏன் கோபம் வரவில்லை?’ என்று கேட்டதையொட்டியும் வராத கோபம் வெள்ளிக்கிழமை திடீரென பாராளுமன்றத்தில் வந்துவிட்டது. “இந்துத் தீவிரவாதம் என்கிற வார்த்தை முஸ்லீம்களை பாதுகாப்பதற்கென்றே காங்கிரஸ் அரசால் கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தை. அது தீவிரவாதத்துக்கு எதிரான நமது போரை பலவீனப்படுத்தி தீவிரவாதிகள் எல்லை தாண்டி உள்ளே நுழைவதற்கு உதவிவிட்டது.” என்று கடுமையான கருத்துக்களை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். காங்கிரஸ்காரர்கள் அமர்ந்திருக்கும் இடம் நோக்கி விரலை நீட்டிப் பேசிய ராஜ்நாத்சிங் காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சுசில்குமார் ஷிண்டே உருவாக்கிய வார்த்தை ‘இந்துத் தீவிராவதம்’ என்றும், அந்த வார்த்தைப் பிரயோகத்தால் அவர் இந்துக்களின் மேலும் இந்து மதத்தின் மீதும் களங்கம் ஏற்படுத்திவிட்டார் என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் கூறிய அவர், “தீவிரவாதத்துக்கு மதங்கள். நிறங்கள், ஜாதிகள் இல்லை. ஷிண்டே இந்துத் தீவிரவாதம் என்று பெயரை உருவாக்கி தீவிரவாதத்துக்கு எதிரான போரை திசைதிருப்பிவிட்டார். நமது போராட்டம் பலவீனமாகிவிட்டது. அதன் விளைவு லஷ்கர் ஈ தொய்பாவின் நிறுவனர் ஹபீஸ் சையது ஷிண்டேவைப் பாராட்டுவதில் போய் முடிந்தது. எமது அரசு இதுபோன்ற வெட்கக்கேடான நிலையை நமக்கு இனித் தராது.” என்று முழங்கினார். சமீபத்தில் நடந்து குர்தாஸ்பூர் நிகழ்வுகளையொட்டி கொடுத்த அறிக்கைக்கு முன் ராஜ்நாத் சிங் இவ்வாறு பேசியது தற்செயலானது. யார் தூண்டியும் இப்படிப் பேசவில்லை. மொத்த அவையே அமைதியாக அவர் பேச்சைக் கேட்டது. காங்கிரஸின் நாடளுமன்றத் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறுகையில் “அவர் பேசி முடித்ததும் காங்கிரஸார் உட்பட அனைவரும் அவர் பேச்சை கைதட்டி வரவேற்றோம். தீவிரவாதத்துக்கு எதிராக நாம் எல்லோரும் இணைந்திருப்போம். நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்போம்” என்றார்.

எல்லோரும் ரசித்த அவர் பேச்சின் உள்ளே மறைந்திருக்கும் இந்துத்துவா கோட்டை ‘தீவிரவாதத்துக்கு மதங்கள், நிறங்கள், ஜாதிகள் இல்லை’ என்கிற வாதத்தில் அவர் சாமர்த்தியமாக மறைத்துவிட்டார். ஹிந்துத்துவா பேசும் பிரிவினைவாதிகளின் பேச்சுக்களில் எங்கேயோ தொட்டு எங்கேயோ போய் முடிச்சுபோடும் திசை திருப்பல்கள் எப்போதுமே சகஜம் தான். அதாவது ஏதாவது ஒரு மதரீதியான விஷயத்தை இழுத்து இறுதியில் இந்துக்களின் காவலன் பி.ஜே.பி வகையறா மட்டுமே என்று முடிக்கும் சாமர்த்தியப் பேச்சு.

குர்தாஸ்பூர் தீவிரவாதத் தாக்குதலுக்கும் இந்துத்துவா என்கிற வார்த்தைக்கும் சம்பந்தமே இல்லை. எப்போதோ ஷிண்டே சொன்ன வார்த்தைகளை இக்கணத்தில் அவர் சொல்லக் காரணம் ? குர்தாஸ்பூர் தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்று தகவல் வந்துள்ளது. இந்நேரத்தில் அவர் இந்துத் தீவிரவாதம் என்றழைப்பது தவறு என்று சொல்வதன் மூலம் முஸ்லீம் தீவிரவாதம் என்று அவர்கள் அழைப்பது சரியென்பதை மறைமுகமாக வலியுறுத்துகிறார்.

அவர் சொல்லியபடியே தீவிரவாதத்துக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லையென்றால் ஏன் அவரது கட்சியும் அவர்களது குடும்பக் கட்சிகளும் ‘ஏதோ சில முஸ்லீம் அடிப்படைவாதிகளால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்களுக்கு ஒட்டுமொத்தமாக எல்லா முஸ்லீம்களையும் அடையாளப்படுத்தும் முஸ்லீம் தீவிரவாதம் என்கிற வார்த்தையை எதிர்க்கவில்லை ? சொல்லப்போனால் அந்த வார்த்தையை முஸ்லீம்களுக்கு எதிராக அதிகம் உபயோகித்தவர்களும் அவர்களே. பாகிஸ்தானில் நடக்கும் தீவிரவாதமே ஆனாலும் ஒட்டுமொத்த முஸ்லீம் மதத்தின் தீவிரவாதம் ஆகிவிடுமா? அப்படி முஸ்லீம் தீவிரவாதி என்று முஸ்லீம்களும் , சீக்கியத் தீவிரவாதி என்று சீக்கியர்களும் புண்படுத்தப்படும்போது இந்துத் தீவிரவாதம் என்றழைப்பதும் சரியானதே. மதத்துக்கும் தீவிரவாதத்துக்கும் சம்பந்தம் இல்லையென்று அவர் கூறுவதை அவர் நம்பினால் தீவிரவாதத்தின் முன்னால் எந்த மதமும் அடையாளப்படுத்துவதையும் அவர் எதிர்க்கவேண்டும். இல்லையா? ஆனால் அவருக்கு இந்துத் தீவிரவாதம் என்று சொல்லும்போது மட்டுமே கோபம் வருகிறது.

2013ல் ஷிண்டே ‘இந்துத் தீவிரவாதம்’ என்கிற வார்த்தைகளை உபயோகப்படுத்தியதை கண்டித்த பி.ஜே.பியின் முக்தார் அப்பாஸ் நக்வி சோனியா காந்தி அமைச்சரின் இந்த வார்த்தைகளை வாபஸ் பெறவில்லையென்றால் ‘கடுமையான விளைவுகள்’ ஏற்படும் என்று எச்சரித்ததையொட்டி ஷிண்டே ‘காவித் தீவிரவாதம்’ என்று தனது வார்த்தைகளை மாற்றினார். ஷிண்டே ஒன்றும் நேர்மையான அரசியல்வாதி அல்லதான். ஆனால் ராஜ்நாத்சிங்கும் அப்படித்தான். இந்துக்களைப் பாதுகாப்போம் என்கிற முழக்கத்துடன் தான் பாபர் மசூதியை பி.ஜே.பி தலைவர்களின் மேற்பார்வையில் பல ஆயிரம் இந்து ‘கர சேவகர்கள்’ சேர்ந்து இடித்தனர். இது சேவையா ? தீவிரவாதமா ? சாத்தர் என்கிற அறிஞர் சொல்வதைப் போல “பாவிகள் எப்போதும் மற்றவர்களாகவே இருக்கிறார்கள்.”. இந்துத் தேசியம் பேசும் ராஜ்நாத் சிங் போன்றவர்களுக்கு அந்த ‘மற்றவர்கள்’ எப்போதும் ‘முஸ்லீம்களே’.

Related Images: