‘பருத்தி வீரன்’ படத்தில் தன் ஒளிப்பதிவை கவனிக்கவைத்து பின் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக இருக்கும் ராம்ஜி, அவர் தற்போது ‘ஜெயம்’ ராஜா இயக்கும் ‘தனி ஒருவன்’ படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். படப்பிடிப்பு வேலைகள் முடித்த உற்சாகத்தில் இருந்த அவரைச் சந்தித்தோம்.

நீங்கள் ஒளிப்பதிவு செய்யும் படங்கள் பெரும்பாலும் முடிய வருடக்கணக்காகிறதே?
அதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. கதையைப் பொறுத்தே பெரும்பாலும் படப்பிடிப்புக்கான நாட்களும் அதிகமாகின்றன.. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை செல்வராகவன் 90 நாட்களில் முடித்துவிடலாம் என்றார். நான். நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ள நிறைய வாய்ப்பிருக்கிறது என்று சொன்னேன். இப்படத்துக்கு நாங்கள் நினைத்த மாதிரி கிராஃபிக்ஸ் காட்சிகள் அமைந்திருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும். இனி வருடத்துக்கு 2 படங்களாவது செய்ய நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

உங்கள் குருநாதர் பற்றி..
என்னை உருவாக்கியவர் பி.சி. ஸ்ரீராம் சார். எனக்கு மிகப்பெரிய பலம், ஊக்கம் அவர் தான். ‘பருத்தி வீரன்’படத்தைப் பார்த்ததில் இருந்து வீரா என்றுதான் என்னை அழைப்பார். அந்த அளவுக்கு அப்படத்தில் என்னுடைய ஒளிப்பதிவு அவருக்கு பிடித்திருந்தது.

டிஜிட்டலுக்கும் பிலிமிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
லேட்டஸ்ட்டான ‘தனி ஒருவன்’ படம் வரை நான் பிலிமில்தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். 3 சதவீத காட்சிகள் மட்டும் டிஜிட்டலில் எடுத்துள்ளேன்.. ‘தனி ஒருவன்’ தான் தமிழில் பிலிமில் வெளிவந்த கடைசிப் படமாக இருக்கும் என நினைக்கிறேன். திரையரங்கில் உள்ள திரைக்கும், மக்களுக்கும் உள்ள இடைவெளியை குறைப்பது பிலிம். திரைக்கும் மக்களுக்குமிடையே அந்நியப்பட்டு நிற்பது டிஜிட்டல் என்பது என் கருத்து.
பிலிமின் தயாரிப்புச் செலவுகள் பெரிய அளவு ஆகையால் பிலிமில் படம் எடுப்பது வீண்செலவு என்பதாக ஆகிவிட்டது. ஆகையால் இனிமேல் டிஜிட்டல் தான் எதிர்காலம். அலக்ஸா போன்ற டிஜிட்டல் கேமராக்கள் இப்போது நன்றாக இருக்கிறது. பிலிம்மின் தரத்திற்கு ஈடு கொடுக்க முயல்கிறது. புதிய தொழில்நுட்பத்துக்கு ஏற்ற வகையில் நாமும் மாறுகிறோம்.

நீங்கள் ஏன் இயக்குநராக முயற்சி செய்யவில்லை?
எனக்கு எழுதும் திறமை இல்லை. எனக்கு பிடித்த நாவல்களை படமாக்க நிறைய பணம் செலவாகும். அதை நல்ல ஸ்கிரிப்டாக மாற்றி பின் என்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் வந்தால் இயக்குனராக வாய்ப்பு உண்டு. என் கதைகளை கேட்ட நண்பர்கள் ‘ஏன் இந்த மாதிரி கதை பண்ற? இளைஞர்களுக்கு பிடிக்கிற மாதிரி கதை பண்ணு’ என்றார்கள். எனது ஒளிப்பதிவுப் பணிகளை முதலில் முடிக்கிறேன். பின்பு பார்க்கலாம்.

தமிழ்ச் சினிமாவில் இளைஞர்களின் வரவு அதிகமாயிருப்பது பற்றி..
திரையுலகின் அனைத்து துறைகளிலும் ஒளிப்பதிவும் சேர்த்து புதிய இளைஞர்கள் வந்திருக்கிறார்கள். வரும் இளம் ஒளிப்பதிவாளர்கள் டிஜிட்டல் கேமராவை கரைகண்டவர்களாக இருக்கிறார்கள். இந்திய அளவில் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் ஒரு இடத்தை பிடித்துள்ளார்கள். உலக அளவிலும் செல்ல அவர்கள் முயலவேண்டும். அதற்கு நீண்ட பயணம் தேவைப்படும்.

அமீர், செல்வராகவன் இருவரின் பாணிகள் பற்றி ஒப்பிடுங்கள்
ஒரு நடிகர், தான் எழுதிய வசனத்தை கொஞ்சம் மாற்றினால் கூட செல்வராகவன் ஒப்புக் கொள்ள மாட்டார். ஆனால் அமீர் கொஞ்சம் முன்னே பின்னே வசனங்கள் இருந்தாலும் விட்டுவிடுவார். ஆனால் அவர் நினைக்கிற நடிப்பு வந்திருக்க வேண்டும். அது முக்கியம். ‘ராம்’ படத்தில் ஜீவாவின் நடிப்பில் அமீரின் டச் இருக்கும். செல்வராகவன் கதை, திரைக்கதையில் நிறைய மெனக்கெடுவார். நடிகர்களை அவர்களின் இயல்பான போக்கிலேயே நடிக்க அனுமதிப்பார்.

Related Images: