வியாழக்கிழமை காலை தூக்கிலிடப்பட்ட யாகுப் மேமானின் இறுதி ஊர்வலத்தின் போது அவரது உறவினர்களுக்கும் காவல் துறையினருக்குமிடையே இரு தடவைகள் வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
முதல் தடவை மேமானின் குடும்பத்தார் நமாஸ்-ஈ-ஜனாஸா எனப்படும் மரண ஊர்வலப் பிரார்த்தனையை மஹிம் தர்கா அருகேயுள்ள எஸ்.வி.எஸ் ரோட்டில் நடத்தவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். காவல்துறை முன்னர் இந்தப் பிரார்த்தனையை புதைக்கும் சவக்காட்டில் செய்ய மட்டுமே அனுமதி வழங்கியிருந்தது. யாகுப்பின் மாமனார் இக்பால் மேமான் மதியம் 2 மணியளவில் போலீஸிடம் இந்த வேண்டுகோளை முன் வைத்தார்.
நிறைய பேர் ஊர்வலத்திற்கு வந்திருந்ததால் போலீஸ் பிரார்த்தனைக்கு அனுமதி வழங்கியது. மும்பையில் உள்ள மஹிம் மசூதியருகே உள்ள மேமானின் சகோதரர் சுலைமானின் இல்லத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்று அதன் பின்னர் அவரது உடலை புதைக்கும் இடத்திற்கு கொண்டு செல்வதாக முடிவு செய்யப்பட்டது. சுமார் ஆயிரம் பேர் மஹிமில் நடந்த அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இறுதி ஊர்வலம் முடியும் தருணத்தில் மேமானின் உறவினர்கள் பலரும் மேமானை சுமார் 7 வருடங்களாகப் பார்த்தேயில்லை அவரது இறுதி முகத்தை ஒருதடவை பார்க்க வேண்டும். அதனால் முகத்தைப் போர்த்தியிருக்கும் துணியை அகற்ற வேண்டும் என்று போலீஸிடம் கேட்டனர். இறுதி ஊர்வலத்தின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்றிருந்த போலீஸ் கமிஷனர் மரியா அதற்கு மறுத்துவிட்டார். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட கோரமான முகத்தைப் பார்த்தால் ஏற்கனவே யாகுப்பின் மரணத்தால் கொதிப்படைந்திருக்கும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாயுள்ள அந்தப்பகுதியில் சட்ட ஒழுங்குப் பிரச்சனைகள் ஏற்படும் என்று போலீஸ் அவர்களுக்கு விளக்கி கோபமடைந்தவர்களை சமரசம் செய்தது.
மாலை மூன்று மணிக்கு அவரது இறுதிச் சடங்குகள் முடிவடைந்ததும் சுமார் 3.20க்கு மேமானின் உடல் மஹிமிலிருந்து புதைகாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்பட்டது.