’பாண்டியநாடு’ தந்த வெற்றிக்களிப்பில் மீண்டும் மதுரை மண்ணையே கதைக்களமாக்கி ‘பாயும்புலி’ செய்திருக்கிறார்கள் விஷால் சுசீந்திரன் கூட்டணி.
கோடிஸ்வர தொழிலதிபர்களை மிரட்டி மாமூல் வசூலிக்கும் வில்லன்கள் கூட்டத்தை இடவேளை வரை காக்கிச்சட்டை அணியாமலும், அதற்குப்பின்னர் யூனிஃபார்ம் அணிந்தும் ஒற்றை ஆளாய் விஷால் எப்படி அழிக்கிறார் என்பதுதான் கதை. அதில் புளிக்குழம்புக்கு தக்காளியும் வெங்காயமுமாக கொஞ்சம் குடும்ப செண்டிமெண்ட், கொஞ்சம் காதல் கலந்து அடித்திருக்கிறார் சுசீந்திரன்.
சமுத்திரக்கனி சமீப தினங்களில் எதில் நடித்தாலும் ஸ்கோர் செய்கிறார். ஆனால் அவர் கேரக்டரை நியாய்ப்படுத்த சுசீந்திரன் சொல்லும் சப்பைக்கட்டு காரணங்கள் பரிதாபமானவை. ’வெண்ணிலா கபடிக்குழு’ போன்ற படத்தை தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடிய தமிழ்சினிமா ரசிகனை தொடர்ச்சியாக மசாலா படங்கள் எடுத்து துரோகம் செய்யும் சுசீந்திரனை நினைவூட்டுகிறது இப்படத்தில் சமுத்திரக்கனிக்கு தரப்பட்டிருக்கும் பாத்திரம்.
எழுத்தாளர் வேல.இராமமூர்த்தியை, ஆண்ட பரம்பரை, ஆதிக்க சாதி வேடங்களில் இயக்குநர்களாகவே நடிக்க வைக்கிறார்களோ…இல்லை அவரே தன்னிச்சையாக நடிக்கிறாரோ என்னமோ! க்ளைமாக்ஸ் காட்சிகள் அப்படியே ‘பாண்டியநாடு’ பாரதிராஜாவை வேலராமமூர்த்தியாக்கி விட்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. அண்ணன் ‘கம்பியால அடிச்சிட்டான்பா’ எனறு சொல்லும்போது பாண்டி நாடு பாரதிராஜாவை திரும்ப நடித்த மாதிரியே இருக்கிறது. டயலாக்கில் ஒரு இடத்தில் “காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடும் மக்களுக்கு’ ஒரு லைட் பன்ச் வைத்திருக்கிறார்கள். கதை இலாகாவுக்கு பேட்டா ஒழுங்கா குடுக்குறீங்களா பாஸ்? கதையில் எதிர்பார்த்த வெயிட் இல்லையே.
மதுரையின் கொடூர வில்லன்களை ஆயுதமே இன்றி சிங்கிள் பஞ்சில் பஞ்சாகப்பறக்கவிடும் விஷால், அண்ணன் கனியிடம் மட்டும் அரைமணி நேரத்துக்கு என்னத்துக்கு மோதுகிறார் என்பது அந்த மீனாட்சி அம்மாளுக்கே வெளிச்சம்.
இது என்னவிதமான அப்ரோச்சோ தெரியவில்லை. தமிழ்சினிமாவில் தற்போது எல்லா ஹீரோயின்களும் ஸ்கூட்டி பேட்டிகளாகவே அறிமுகமாகிறார்கள். நம்ம காஜர் அகர்வாலும் அங்ஙனமே வந்துபோகிறார். இரண்டு பாடல் காட்சிகளில் சேலையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறக்கிக்கட்டி பார்ப்பவர்களை பொலி போடுகிறார்.
இமான் இசையமைப்பில் குத்துப்பாடல்கள் என்ற பெயரில் அத்தனையும் வெத்துப்பாடல்கள். பின்னணி இசை சோதனைமேல் சோதனை.
வேல்ராஜின் நேர்த்தியான , ஆண்டனியின் நறுக் கத்தரியும் படத்தை கொட்டாவி விடாமல் காப்பாற்றுகின்றன.
மற்றபடி ‘பாயும்புலி’ வெறும் காகிதப்புலிதான்.