மன்மோகன் அரசே ரேஷன் கடைகளில் மானிய விலையில் பொருட்களை விற்பதை ஊத்தி மூடிவிட, உலக வங்கியின் ஆணைப்படி உத்தரவிட்டுவிட்டது. இப்போது வந்திருக்கும் மோடியின் அரசு, அதை அப்படியே வழிமொழிந்து விட்டது. இது வித்தியாசமான ஆட்சியாம். மத்திய அரசு கைவிரித்து விட்டாலும் அம்மாவின் அரசு மக்களுக்கு ஏதாவது செய்தாகவேண்டுமே ?
அதனால் 2000 கோடி ரூபாயை செலவழித்து, நியாய விலைக் கடைகளில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய பொருட்களை குறைந்த விலையில் வழங்கிடும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தினை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை வெளிச்சந்தையில் அதிகமாக உள்ள காரணத்தால், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை மிகக் குறைந்த விலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவை கிலோ 30 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை 30.9.2015 வரை வழங்கிட நான் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தேன்.
வெளிச் சந்தையில் பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர் அளவில் உள்ளதால், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன் கருதி நியாய விலைக் கடைகளில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கிடும் இந்த சிறப்பு பொது விநியோகத் திட்டத்தினை மேலும் ஓராண்டுக்கு அதாவது 30.9.2016 வரை நீட்டிக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இதன் படி ஒரு கிலோ துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு தலா 30 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் தொடர்ந்து வழங்கப்படும். நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கிடும் இத்திட்டத்திற்கென தமிழக அரசுக்கு ஆண்டிற்கு 2,000 கோடி ரூபாய் செலவு ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் அம்மா.
இதுக்குப் பின்னால் ஏழை மக்களுக்கு மானியம் தர முடியாது கைவிரித்து விட்ட மத்திய அரசின் திமிர்த்தனம் இருக்கிறது. மோடி அமெரிக்கா போய் கையாட்டி விட்டு வருவதெல்லாம் யாருக்கு ? ஏழைகளுக்கா ? அம்மாவின் அரசோ 2000 கோடி ரூபாய் மாநில அரசு வருவாயை செலவழிக்க இருக்கிறது. இது ஏழைகளுக்கு கிடைக்கும் நல்ல விஷயம் தான். சந்தேகமில்லை.
ஆனால் இந்த மாதிரி அம்மா உணவகம், ரேஷன் கடைகள் போன்ற மானியங்களுக்கு அம்மாவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது ? அதுவும் மக்களின் பாக்கெட்டில் இருந்து தான். டாஸ்மாக்கில் தினமும் குடிமகன்கள் அள்ளிக் கொடுக்கும் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் சும்மா ஒரு இரண்டாயிரம் கோடி மட்டும் அதே ஏழை மக்களை ஆற்றுப்படுத்த. எல்லாம் இன்னும் ஒரு வருஷம் தான். பாத்துக்கோங்க.