மத்திய, மாநில அரசுகள் விவசாயத்து மானியங்களை நிறுத்தி விவசாயிகளை தற்கொலை செய்யவைத்ததிலும், வட இந்தியாவில் பெய்த கனமழையாலும் பருப்பு வகை உணவுப் பொருட்களின் உற்பத்தி பாதித்திருக்கிறது.
இதைச் சரிசெய்ய மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் 3500 மெட்ரிக் டன்கள் பருப்பிலிருந்து 500 மெட்ரிக் டன்கள் தமிழ்நாட்டுக்கு தரவிருக்கிறது. இதை வைத்து பருப்பு விலையை குறைத்து விடுவோம் என்று முழங்கும் அம்மா அரசு, தமிழகம் முழுவதும் நவம்பர் 1 முதல் 91 விற்பனை அங்காடிகளில் கிலோ 110 ரூபாய் என்ற விலையில் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறது. இதை கண்துடைப்பு நாடகம் என்று வர்ணித்திருக்கிறார் நம் நாடகத் தந்தை கருணாநிதி அவர்கள்.
இது பற்றி அவர் எழுதிய அறிக்கையில், “அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடே செழிக்கும்; பாலும் தேனும் பெருக்கெடுத்து ஓடும்; விலைவாசி தரை மட்டத்திற்கு இறங்கி விடும் என்றெல்லாம் வாய்ஜாலம் காட்டி, மக்களை ஏமாற்றி, பதவிக்கு வந்தவர்கள் ஆட்சியில், தற்போது விலைவாசி இறக்கை கட்டிக் கொண்டு விண்ணை நோக்கி வேகமாகப் பறக்கின்றது.
மிளகாய் வற்றல் வகைகளின் விலையும் கிலோவுக்கு 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
அதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அதற்குப் பிறகும் அரசின் சார்பில் எவ்வித முயற்சியும் எடுக்கப்படாததால், கழக ஆட்சியில் துவரம் பருப்பு என்ன விலை விற்றதோ, அதைப் போலத் தற்போது நான்கு மடங்காக விலை உயர்ந்துள்ளது.
வரலாறு காணாத இந்த விலை உயர்வின் காரணமாக ஏழை எளிய குடும்பங்கள் உணவில் குழம்பு அல்லது சாம்பார் என்பதையே மறந்து வருகின்றன.
இதற்குப் பிறகு தான் தமிழக அரசு தேர்தல் வருவதாலோ என்னவோ அரைத் தூக்கம் கலைந்து 1-11-2015 முதல் அங்காடிகளில் குறைந்த விலைக்கு பருப்பு விற்பனை துவங்கப்படும் என்று தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதைப் போல அறிவித்திருக்கின்றது.
அரசின் இந்த அறிவிப்பு பற்றி பருப்பு மொத்த வியாபாரிகள் கூறும்போது, தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து 500 மெட்ரிக் டன் கொள்முதல் செய்துள்ளது, 500 மெட்ரிக் டன்னை அரவைக்கு அனுப்பும் போது 15 சதவிகிதம் வரை கழிவு ஏற்பட வாய்ப்புள்ளது, அதாவது கழிவு போக 425 மெட்ரிக் டன் மட்டுமே பருப்பு கிடைக்கும். இந்தப் பருப்பும் 9 நாட்களுக்கு மட்டும் தான் வரும். எனவே அரசின் இந்த நடவடிக்கை வெறும் கண் துடைப்பு நாடகம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா கூறும்போது, “ஒரு மாதத்துக்குத் தேவை என்பது லட்சம் டன்களைத் தாண்டும். இதனை பருப்பு விளைச்சல் நடைபெறும் ஜனவரி, பிப்ரவரி, மாதங்களில் கொள்முதல் செய்து இருப்பு வைத்திருக்க வேண்டும். ஆனால் மத்திய, மாநில அரசுகள் செய்வதில்லை. அதுதான் தற்போது பருப்பு தட்டுப்பாட்டுக்கு உண்மையான காரணம்.
தட்டுப்பாட்டைப் போக்க 500 மெட்ரிக் டன் துவரம் பருப்பை மத்திய அரசிடமிருந்து வாங்கியுள்ளதாகத் தமிழக அரசு கூறுவது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை தான். இது தமிழக மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யாது” என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.
ஜெயலலிதா 2011-ம் ஆண்டு பதவியேற்ற போது ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை 52 ரூபாயாக இருந்தது, தற்போது நான்கு மடங்காக 210 ரூபாய் என்று விலை உயர்ந்துள்ளது.
கோடநாடு அரண்மனையில் ஓய்வில் இருந்து கொண்டே அரசுப் பணி ஆற்றுவதாகக் காட்டிக் கொள்ள, ஒருவேளை இந்தப் பிரச்சினை பற்றி முதல் அமைச்சர் விவாதிப்பதற்காக அந்தத் துறை சார்ந்த அதிகாரிகளையும், அமைச்சர்களையும் கோடநாட்டிற்கு வரச் சொல்லி, அங்கே ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினாலும் நடத்துவார்.
இதையெல்லாம் பார்க்கும்போது அண்ணா “கும்பி எரியுது; குடல் கருகுது, குளுகுளு ஊட்டி ஒரு கேடா?” என்று அப்போது கேட்டதைத் தான் சற்று மாற்றி, “கும்பி எரியுது; குடல் கருகுது, கோடநாடு ஒரு கேடா?” என்று தமிழக மக்களுக்குக் கேட்கத் தான் தோன்றும்!” என்று கருணாநிதி கூறியுள்ளார்.
வசனம் நல்லா இருக்குங்க. இதே போன்றதொரு வசனத்தை கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா அவர்கள் பேசினார்கள் என்பது ஞாபகம் இருக்கிறதா? ஆட்சிகள் மாறினாலும் விலைவாசி எப்போதும் குறையவே இல்லை.
அரசு மக்களைப் பாதுகாப்பதிலிருந்து ஒதுங்கிக் கொண்டதையே இந்தச் செயல்கள் காட்டுகின்றன. அரசு உணவு தானியஙகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கி சேமித்து வைக்காமல், உணவு தானிய உற்பத்தியை தனியார் கைகளில் கொடுத்துவிட்டதால் இப்போது விலையை தனியார்களே நிர்ணயிக்கிறார்கள்.
இஷ்டம்னா வாங்குங்க.. கஷ்டம்னா சும்மா கிடங்க..