சகிப்பின்மை அதிகரித்து வருவதால் எடுக்கப்படும் கலாச்சார காவல் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு மிகவும் ஆபத்தானது என்கிறார் நடிகையும், இயக்குநருமான நந்திதா தாஸ். ”நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக நடைபெறும் கலாச்சார காவல் நடவடிக்கைகளை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். இது போன்ற கலாச்சார காவல் நடவடிக்கைகள், இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளுக்கு, மிகவும் ஆபத்தானது. நான் நடுவராகச் செல்லும் திரைப்பட விழாக்களில், வெவ்வேறு விதமான பார்வைகள் இருக்கும். ஆனால் அந்தப் பார்வைகள் மூலமாகத்தான், அடுத்தவரின் கருத்தையும் மதிக்க வேண்டும் என்று புரிந்துகொண்டேன்.
சரியோ, தவறோ ஒவ்வொருவரின் கருத்தையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியமானது. சமுதாயம் வளர வேண்டுமானால், கருத்து சுதந்திரம் அடிப்படைத் தேவையாக இருக்கிறது. நீங்களும், நானும் கருத்துகளில் ஒட்டுமொத்தமாக வேறுபடலாம்.
ஆனால் அவற்றைச் சொல்வதற்கே அனுமதி மறுக்கப்பட்டால், எப்படிப் புதிய குரலோ, உரையாடலோ உருவாகும்? எப்படி நானோ, சமுதாயமோ, நாடோ வளர முடியும்?” என்கிறார் கவலையான குரலில்..