கமலா, ரஜினியா,  ஹாலிவுட்டுக்கு முதலில் போவது என்கிற தமிழ்ச் சினிமா பட்டிமன்றத்தில் புதிய என்ட்ரி தனுஷ்ஷூக்கு பச்சைக் கொடி கிடைத்துவிட்டது.

தற்போது முதன் முறையாக ஹாலிவுட் படத்தில் பிரதான பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தனுஷ். பிரபல ப்ரெஞ்ச் நாவலான ஒரு ஐக்கியா கப்போர்டில் மாட்டிக்கொண்ட ஒரு பக்கீரின் அசாதாரணப் பயணம்(‘The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard’) திரைப்படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தில் தனுஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க அவருடன் இணைந்து ‎உமா தர்மன்(UmaThurman‬)  நடிக்க இருக்கிறார். இப்படத்தை மார்ஜானே சட்ரபி (Marjane Satrapi) என்கிற பிரெஞ்சு இயக்குனர் இயக்கவிருக்கிறார்.

ஹாலிவுட் வாய்ப்பு குறித்து தனுஷ், “’The Extraordinary Journey Of the Fakir Who Got Trapped In The Ikea Cupboard’ என்ற முழு நீள ஹாலிவுட் படத்தில் நடிக்க எனக்கு முதன்முதலில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன். படத்தின் இயக்குநர் மழ்ஜான் சத்ராபி இந்த கதாபாத்திரத்துக்கு நான் சரியாகப் பொருந்துவேன் என நினைத்தார்.

இதில் நடிப்பதன் மூலம் இந்த பாத்திரத்தின் பல அம்சங்களை என்னால் உணர்ந்து நடிக்க முடியும். எப்போதும் என்னுடன் இருந்து, நான் புதிய எல்லைகளைத் தொட, புதிய சவால்களை எடுத்துக் கொள்ள ஊக்குவிக்கும் எனது ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இப்படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் பாத்திரத்தின் காட்சிகள் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இத்தாலி, மொரோகோ மற்றும் ப்ரான்ஸ் நாடுகளில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

Related Images: