உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ தயாரிப்பில் அவர் நடித்து சமீபத்தில் வெளியான மசாலாவே மசாலாவான கெத்து படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப் படவில்லை.
இந்த படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு கோரி விண்ணப்பித்தபோது. ‘கெத்து என்பது தமிழ் வார்த்தை இல்லை’ என்று கூறி வரிவிலக்கு அளிக்க மறுத்திருக்கிறது தணிக்கைத் துறை.
கணினி மைய இணை ஆணையர் டி.ரமாதேவி, தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் எம்.சி.தியாகராஜன், இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், பாடகர்கள் ஏ.எல்.ராகவன், வாணி ஜெயராம், பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் ஆகியோர் கொண்ட தணிக்கைக் குழு தான் இந்தப்படத்தை பார்த்து ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஆனால் ‘கெத்து’ என்பது தமிழ் வார்த்தை இல்லை எனக் கூறி வரிவிலக்கு தரவில்லையாம்.
திருக்குறள், திருப்புகழிலும் பல்வேறு இலக்கண, இலக்கியங்களிலும் ‘கெத்து’ என்ற தமிழ் வார்த்தை இடம் பெற்றுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வாதாடுகிறார்களாம். .திருட்டு விசிடி, கோலி சோடா, நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ, ஆல்இன்ஆல் அழகுராஜா போன்ற படங்களுக்கு வரிவிலக்கு அளித்திருக்கும் தணிக்கைத் துறை உதயநிதி ஸ்டாலின் தயாரித்தது என்பதாலேயே அவர் நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் வரிவிலக்குத் தரவில்லையாம். இப்படி கோர்ட்டில் நியாயம் கேட்டு உதயநிதி போக நீதிபதி அதை ஆமோதித்து ஏன் தரவில்லை என்று அரசிடம் கேட்டிருக்கிறாராம்.
தமிழை வளர்க்க தூய தமிழில் படத்தின் பெயர் வந்தால் வரிவிலக்கு என்பதே ஒரு விளம்பரமான தமிழ் வளர்ப்பு முயற்சி. கே.எப்.சி, மெக்டொனால்டு, பெப்சி, கோக், மாகி என்று சகலமும் மேற்கத்திய நாகரிக வாழ்க்கையாக மாறிவிட்ட தமிழ்நாட்டில் தமிழின் அடையாளம் அரசுப் பள்ளிகளோடு சமாதி கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கெத்து என்று தமிழ்ப் பெயர் இருந்தாலே வரிவிலக்கா என்பதும் கேள்வியே. அப்படியானால் ‘அவளுடைய இரவுகள்’ என்று தூய தமிழ்ப் பெயர் வைத்தாலும் வரிவிலக்கு தருவார்களா ?
ஒன்னுமே புரியலை.