ஒரு கொலை குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்து வரும் நாயகி ஈஷா, தனது அக்காவின் திருமணத்திற்காக பரோலில் வெளியே வருகிறார். அப்போது அவரை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது.
தப்பி ஓடும் அவர் ஒரு பஸ்ஸில் பயணிக்க அதில் ஹீரோ கீதனும் பக்கத்து ஸீட்டில் பயணிக்கிறார். கீதனின் செயினை ஒரு திருடன் நைசாகத் திருடிவிட அதைப் பார்க்கும் ஈஷா திருடனைத் துரத்திச் சென்று செயினை மீட்கிறார். ஆனால் பஸ்ஸிலேயே தன் கைப்பையை விட்டுவிடுகிறார் ஈஷா. அதை ஹீரோ கீதன் எடுத்துக் கொண்டு சென்னைக்குப் போய்விடுகிறார்.
தலைமறைவாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் ஈஷா தன் ஹேண்ட்பேக்கை தவறவிட்டதால் ஒருவேளை கீதன் அதை வைத்திருந்தால் அவரிடம் அவர் செயினை ஒப்படைத்துவிட்டு தனது பேக்கை மீட்டுவிடலாம் என்று நினைத்து கீதனீன் வீடு தேடிப் போகிறார்.
கீதனின் ஹீரோவின் வீட்டில் ஈஷாவை, கீதன் காதலிக்கும் பெண் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அவரை தடபுடலாக கவனிக்கிறார்கள். ஈஷாவுக்கும் பாதுகாப்பான ஒரு இடம் வேண்டும் என்பதால், சிறிது காலம் கீதனின் காதலியாகவே வாழ்கிறார். இதற்கிடையில், தனது காதல் விவகாரத்தை தனது பெற்றோரிடம் சொல்வதற்காக வீட்டுக்கு வரும் கீதன், தனது காதலி என்ற பெயரில் ஈஷா வாழ்வதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.
ஈஷா ஏன் கொலை செய்தார் ? கீதனின் தனது உண்மையான காதலியைக் கைப்பிடித்தாரா ? என்பது போன்ற கேள்விகளுக்கு க்ளைமாக்ஸில் பதில் கொடுக்கிறார் புதுமுக இயக்குனர் பிரான்சிஸ் மார்க்கஸ்.
லோ பட்ஜெட் படமாக வந்திருக்கும் இந்தப் படத்தில் புதுமுக ஹீரோ கீதன் நாயகன் பணியை சரியாகச் செய்திருக்கிறார். நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார். நாயகி ஈஷா நடிப்பில் தேறுகிறார். இவர் இன்னும் கவனமாக படங்களைத் தேர்வு செய்தால் நல்லது. ஒளிப்பதிவாளரும் தேறுகிறார். இசைஞானி ஆயிரத்துச் சொச்சம் படங்களைத் தாண்டி விட்டதால் அவருடைய பேட்டர்ன் மாறாமல் அப்படியே இருக்கிறது. புதிதாய் எதுவும் மெனக்கெடவில்லை. வழக்கமான கதையுள்ள இந்தப் படத்துக்கு புதிதாய் என்ன என்று நினைத்திருக்கலாம். ஆனாலும் அவரது அக்மார்க் பின்னணியிசை படத்திற்கு சத்து டானிக்.
இயக்குனர் பிரான்சிஸ் வழக்கமான கதைகளின் கலவை என்றே இருந்தாலும் அதை படமாக்கியதில் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். மேலும் வரும் படங்களில் மிளிர்வார் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். நாயகனின் மாமாவாக வரும் அர்ஜூனும் தாத்தாவாக வரும் சங்கிலி முருகனும் படம் துவண்டு விடாமல் காமெடி கலகலப்பு தருகிறார்கள்.
ஒய்..! வீட்ல சும்மா நீரு போரடிச்சுட்டு இருந்தா ஒரு தடவை பாக்கலாம் வோய்..