பேச்சலர் தந்தையாக மகள் நைனிகாவுடன் கேரளாவில் பேருக்கு ஒரு பேக்கரி வைத்துக் கொண்டு வாழ்ந்து வரும் விஜயை , நைனிகாவின் பள்ளி டீச்சரான எமி ஜாக்சன் ஒரு தலையாக டாவடிக்கிறார். அப்புறம் விஜய்யின் அம்மா எங்கே ? விஜய் குமார் என்கிற ‘ஜோஸப் குருவிலா’ என்கிற விஜய்யின் முன் ஜென்மக் கதை என்ன என்பதை சென்ட்டி மென்ட், கலகலப்பு, அடிதடி, விஜய் ஸ்டைல் என்று வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து கலந்து அட்லி தந்திருப்பது தான் இந்தச் சூடான பொரி.. தெறி.

படம் இதுவரை 30 கோடிகளுக்கு மேல் வசூலித்திருப்பதே படத்தின் மசாலா வாசனைக்கு ஆதாரம்.
விஜய்க்கு வலியான ‘புலி’க்குப் பிறகு வந்திருக்கும் ‘தெறி’  ரசிகர்களை தெறிக்கவைத்திருக்கிறது. ஜாலியான அப்பாவாகவும், ஆக்ஷன் போலீஸ் ஆபீசராகவும், ராஜேந்திரன் மற்றும் ராதிகாவுடன் கலகலப்பாகவும் என்று, தான் இத்தனை படங்களில் கற்ற அதே ஸ்டார் முகபாவங்களை சரியாகக் காட்டிவிடுகிறார் விஜய்.  ராஜேந்திரன், ராதிகா, இயக்குனர் மகேந்திரன் (சார். நீங்க இப்படியா வில்ல ரீ-என்ட்ரி தரணும்?),  எல்லோரும் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.  எமிஜாக்சன், சமந்தா இருவரும் நாயகி கோட்டாவை சரியாகவே பில் பண்ணுகிறார்கள். எமி ஜாக்சன்  வெள்ளைக்காரப் பொண்ணாகத் தெரிந்தவர் இப்போது சேட்டுப் பெண் போலத் தெரிகிறார். முன்னேற்றம் தான்.

மகளாக வரும் பேபி நைனிகா படத்தில் விஜய்க்கு சமமான பாத்திரம் செய்திருக்கிறார். மொத்த படத்திலுமே லேசான நாடகத்தன்மையான நடிப்புகளே வெளிப்படுவதால் இவரது நாடகத்தனமான நடிப்பும் கடுப்பேத்திவிடவில்லை. விஜய்-நைனிகாவை மையமாக திரைக்கதையில் அட்லீ வைத்தது ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. பிள்ளை குட்டிகளோடு படம் பார்க்க வரும் குடும்பஸ்தர்களுக்கு சென்ட்டிமென்ட், எமி மற்றும் சமந்தா, குழந்தைகளுக்கு விஜய் ஸ்டைல், நைனிகா  அப்புறம் காமெடி என்று அளவெடுத்து மசாலா சேர்த்து எல்லோரையும் உட்கார வைப்பதில் அட்லீக்கு வெற்றி தான். அதே வேளை அடுத்த படத்திலும் இப்படியே ஒப்பேத்தலாம் என்று அட்லீ நினைத்தால் அவரது கேரியருக்கு தெறிதான்.

ஜி.வி.பிரகாஷ்குமார் பாடல்கள் எல்லாம் கரண்டி கப்படாவை வைத்து ட்ரம்ஸ் வாசிக்க முயற்சிப்பது போல ஒரே கடபுடா சத்தம். டப்பாங்குத்துப் பாடல் என்று இம்சை செய்கிறார். படம் போகிற போக்கில் ஆடியன்ஸ் அவரை மன்னிக்கிறார்கள். கேமரா மேன் ஜார்ஜ் வில்லியம்ஸ் பளிச்சென்று படமாக்கியிருக்கிறார்.

அழகம் பெருமாள், பிரபு என்று பிற்பாதியில் இன்னும் பலர் வந்து அலிபாபா கதை போலவே நீண்டு ரசிகர்கள் கொட்டாவி விட ஆரம்பிப்பதற்குள் சுபம் போட்டு சரிதான் ஓ.கே என்று சொல்லும்படி ரசிகர்களை காப்பாற்றிவிடுகிறார்கள்.

அஜித்தின் ஏதோ ஒரு படம் போலவே தெறி இருக்கிறது என்று அதற்குள் அஜித் சைடிலிருந்து கலாய்க்க ஆரம்பித்திருந்தாலும் படத்தில் ஏதேதோ படங்களின் வாசனை அடிப்பது உண்மைதான்.

விஜய்யின் ‘கத்தி’யை கம்பேர் செய்தால் தெறி அதில் பாதிதான். தெறி ஒரு குடும்ப மசாலாப் பொரி.

 

Related Images: