தூங்காவனம் டீமை அப்படியே வைத்து கமல் மீண்டும் படமெடுக்கிறார். இப் படத்தின் பூஜை சென்னையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.
தமிழ் மற்றும் தெலுங்கில் கமலுடன் பிரம்மானந்தம் முக்கிய பாத்திரத்திலும், இந்தியில் கமலுடன் செளரஃப் சுக்லாவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதையை கமல் எழுதியிருக்கிறார். தசாவதாரம் படத்தில் வரும் பல்ராம் நாயுடு கேரக்டரை அப்படியே வைத்து இந்தக் கதையை எழுதியிருக்கிறார் கமல்.
நடிகர் சங்கத்திற்கு வாடகையாக இந்த ‘சபாஷ் நாயுடு’ படப்பூஜை விழாவுக்கு 2.5 லட்சம் கொடுத்தார் கமல்.
ராஜபக்ஷே பினாமி லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் ரூ.1 கோடியை நடிகர் சங்க கட்டிட நிதிக்காக அளித்தார். சுபாஷ்கரன் கொடுத்த காசோலையை நடிகர் சங்க செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார் கமல். அப்போது “இப்பணம் கிடைப்பதற்கு காரணம் கமல் சார் தான்” என்று கமல்ஹாசன் காலில் விழுந்து வணங்கினார் விஷால்.
இப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று ஆலோசித்த போது கமலிடம் ‘சபாஷ் நாயுடு’ எப்படியிருக்கிறது என்று கேட்டிருக்கிறார் இளையராஜா. அத்தலைப்பு கமலுக்கு பிடித்துவிடவே அதையே தலைப்பாக வைத்துவிட்டார் கமல்.
கமலின் மகள்கள் இருவரும் இப்படத்தில் கமலுடன் பணியாற்றுகிறார்கள். ஸ்ருதி கமலின் மகளாகவே நடிக்கிறார். அக்ஷரா இப்படத்தில் உதவி இயக்குனராகப் பணிபுரிகிறார்.
ஜாதியை தெருவின் பெயரிலிருந்து கூட தூக்குங்கள் என்று சொன்ன கமல் சினிமாப் படத்துக்கு மட்டும் அப்படி ஏன் சாதிப் பெயரை வைப்பானேன் ? ஏன்னா. இது காமெடி படம். சீரியஸா சிந்திக்காதீங்க.