இசை படத்திற்கு பிறகு இனிமேல் டைரக்சனில் இறங்கப்போவதில்லை என்கிற முடிவுக்கு வந்த எஸ்.ஜே.சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இறைவி படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் நடித்துள்ள பாபி சிம்ஹா, எனக்கு எஸ்.ஜே.சூர்யா என்ற ஒரு நல்ல அண்ணன் கிடைத்து விட்டார் என்று கூறுகிறார். அப்படி பாத்திரத்தில் ஒன்றிவிட்டாராம் எஸ்.ஜே.சூர்யா.
இறைவி படத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம், டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ், கதை சொல்ல சென்றபோது, அவர் சொன்ன கதை சூர்யாவுக்கு புரியவே இல்லையாம். என்றாலும், பீட்சா, ஜிகர்தண்டா என்ற இரண்டு ஹிட் படம் கொடுத்தவராச்சே. நல்லாதான் எடுப்பார் என்றுதான் நடிக்க சம்மதித்தாராம். பின்னர் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருந்தபோதுதான் ஒருநாள், “முதல்ல எனக்கு கதையே புரியல, ஆனா இப்ப பார்த்தா நல்லாதான் இருக்கு” என்று சொன்னாராம். அதைக்கேட்டு, “அப்படின்னா என் கதை மேல நம்பிக்கையே இல்லாமல்தான் இத்தனை நாளும் நடிச்சீங்களா சார்?” என்று அவரிடம் கேட்டாராம் கார்த்திக் சுப்புராஜ்.
இறைவி படத்தில் நடித்த பிறகு ஒரு நல்ல டைக்டரின் படத்தில் நான் நடிகனாக மீண்டும் என்ட்ரி ஆனது எனக்கு பெரிய மகிழ்ச்சியையும், பெரிய நம்பிக்கையும் கொடுத்துள்ளது என்கிறார் எஸ்.ஜே.சூர்யா.