முகஸ்துதிகளுக்குப் பெயர் போன சினிமாவில் உண்மையை யாராவது கொஞ்சம் பேசினாலே போதும்; ஒரு வழி பண்ணிவிடுவாரகள் அவர்களை. அப்படி அவ்வப்போது உண்மைகளையும் பல சமயங்களில் வம்பையும் விலைக்கு வாங்குபவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. சமீபத்தில் அமிதாப், ரஜினி, சிரஞ்சீவி போன்ற சூப்பர் ஸ்டார்களை ஒப்பிட்டு ட்வீட் செய்திருந்தார் அவர்.
“’Te3n’ படத்தில் அமிதாப் பச்சனின் ஆகச் சிறந்த நடிப்பைப் பார்த்த பிறகு எனக்கு ஒரே ஒரு மனக்குறை தான் உள்ளது. அவர் இனி ‘ரான்’ போன்ற ஹீரோயிஸ படங்களில் நடிக்கக் கூடாது என்பதே அது. திரையுலகின் பல நட்சத்திரங்கள் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியாக இருக்கட்டும், தமிழ் திரையுலகின் ரஜினிகாந்தாக இருக்கட்டும் அனைவருமே அமிதாப்பச்சனின் திறமையை புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அமிதாப்புக்குத்தான் அவரது சிறப்பு தெரியவில்லை.
பலதரப்பட்ட கதாபாத்திரங்களுக்கான தேடலினாலும், நடிப்புத் திறனின் எல்லையை விஸ்தரிப்பதற்காகவும் அமிதாப்பச்சன் தான் ஒரு நட்சத்திர நாயகர் என்ற அந்தஸ்தையும் கடந்து எடுத்த முடிவுகள் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் சென்றுள்ளது. ஒரு ரஜினிகாந்தின் தீவிர ரசிகனாகவே கூறுகிறேன், ஒருவேளை ‘ரோபோட்’ படத்தில் அமிதாப் நடித்திருந்தால் அது இன்னமும் பிரம்மாண்டமாக இருந்திருக்கும். அதேவேளையில் ‘Te3n’ படத்தில் ரஜினிகாந்த் நடித்தால் அமிதாப்புக்கு அவரால் ஈடு கொடுக்க முடிந்திருக்காது.
எனது இந்த கருத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட மறுத்தலிக்க மாட்டார். ‘Te3n’, ‘பிளாக்’, ‘பிக்கூ’ படங்களில் ரஜினி நடித்திருந்தால் அவை நகைப்புக்குரியாதாக இருந்திருக்கும். ரஜினியை நான் நேசிப்பதற்கு காரணம் அவர் ஏற்படுத்தும் தாக்கம், அமிதாப்பை நான் நேசிக்க காரணம். அவருக்குள் இருக்கும் கருத்தாழம். எனது இந்த ரசனை ரஜினி சாருக்கு மட்டுமே புரியும். ஏனெனில் என்னைப்போல் அவரும் அமிதாப்பை ரசிக்கிறார்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் ராம் கோபால் வர்மா.
60 வயதுகளுக்குப் பின்னும் வயதுக்கேற்ற பாத்திரங்களை ஏற்று நடிக்காமல் இன்னும் யூத் கெட்டப்களில் மட்டுமே நடிப்பேன் என்று இருக்கும் நடிகர்களைப் பற்றிய அவரது ஆதங்கத்தை ரா.கோ.வர்மா இவ்வாறு தெரிவித்தாலும் தெரிவித்தார். உடனே வெங்கட் பிரபு போன்ற பிரபலங்கள் அவருக்கு பதிலடி ட்வீட்டுகள் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சில ரசிகர்களோ “ஆறிலிருந்து அறுபது வரை பார்த்தீர்களா?”, முள்ளும் மலரும் பார்த்தீரகளா என்று ரஜினி குழந்தைப் பருவத்தில் நடித்த படங்களைப் பற்றிக் கேட்கிறார்கள்.
அவர் சொல்வதில் உண்மை இல்லாமலில்லை. அமிதாப் பேத்தி வயதுப் பிள்ளைகளுடன் மரத்தைச் சுற்றி இனி டூயட் பாடப்போவதில்லை என்று தில்லாக முடிவெடுத்தார். அதைச் செய்ய ஏன் ரஜினி, கமல், சிரஞ்சீவி போன்றவர்கள் முன்வரவில்லை?