அரசியலைப் பொறுத்தவரை நம்மவர் என்று சொல்லப்படும் கமல் நம்மவரா அல்லது பா.ஜ.க.வின் ‘பி’ டீமா என்ற சந்தேகத்தை அடிக்கடி எழுப்பிக்கொண்டேயிருக்கிறார். சமீபத்தைய அவரது பல்டி திமுக மற்றும் தோழமைக்கட்சிகள் நடத்தும் கூட்டத்திலிருந்து சப்பைக் காரணம் கூறி ஜகா வாங்கியிருப்பது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், தோழமைக் கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 23ஆம் தேதி சென்னையில் மாபெரும் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் எனத் தெரிவித்தார். திமுகவைக் கடுமையாக விமர்சித்துவந்த கமல்ஹாசன், திமுக பேரணியில் பங்கேற்க முடிவு செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவரது முடிவை பொதுமக்கள் பலரும் ரசித்து ஆதரித்தனர்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு டிசம்பர் 19 ஆம் தேதி சென்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து உரையாடினர். தொடர்ந்து, 23ஆம் தேதி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் நடத்தும் பேரணியில் கலந்துகொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்தனர். அப்போது மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். இந்நிலையில், தி.மு.க. பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக நேற்று (டிசம்பர் 21) அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதால் சென்னையில் டிசம்பர் 23-ம் தேதி நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணியில் பங்கேற்கவில்லை” என்று கூறப்பட்டிருக்கிறது.
“அழைப்பு விடுத்தால் கண்டிப்பாக செல்வோம். அழையா வீட்டுக்கு நாங்கள் செல்லமாட்டோம் என்று செய்தியாளர்களின் கேள்விக்கு கமல் பதில் அளித்த நிலையில்தான், திமுக தலைவர் ஸ்டாலின் ஆர்.எஸ்.பாரதியை அழைத்து நீங்க கமலை நேரில் போய் அழைச்சுட்டு வாங்க என்று சொல்லியிருக்கிறார். அப்போது நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவரும் கமலுக்கு பரிச்சயமானவருமான பூச்சிமுருகனையும் அழைத்துக்கொண்டு போயிருக்கிறார். இருவரிடமும் நன்றாகத்தான் பேசியிருக்கிறார் கமல். அழைத்தமைக்கு நன்றி என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால் சில மணி நேரங்களில் முடிவை மாற்றியிருக்கிறார்.கமல்ஹாசன் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றால் என்ன, அவரோடு அவரது கட்சியுமா வெளிநாடு போகிறது? திமுக நடத்தும் போராட்டத்தில் சேர்ந்தால் தனது அரசியல் அடையாளம் போய்விடுமோ என்று அவருக்கு அச்சம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அதை விட அவருக்கு எங்கிருந்தோ வந்த அழுத்தம்தான் இந்த நிலை மாற்றத்துக்குக் காரணம்” என்கிறார்கள் திமுக வட்டாரத்தில். ‘இந்தியன் 2’தாத்தா நீங்க நல்லவரா? சங்கியா?? எங்க சந்தேகத்துக்கு பதில் சொல்லுங்க.