இது என்னோட உளறலோ, பேத்தலோ..
முழுக்க முழுக்க மீடியா நண்பர்களுக்காக..
அண்மையில் சில நெறியாளர்களை பெயர் குறிப்பிட்டு தரக்குறைவாக சித்தரித்து ஸீ இந்துஸ்தான் டிவி என்ற பெயரில் தினமலர் நாளிதழில் முன் பக்க விளம்பரம் வந்தது.பிற சேனல்களில் பணிபுரிபவர்களை நேரடியாக தாக்கி விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு புதிதாக வரும் ஊடகம் ஏன் செல்கிறது? இதன் பின்னணி என்ன? இது நியாயமா, அறமா என்று நிறைய கேள்விகள் எழுகின்றன.இதற்கு முன்னணி நாளிதழும் உடந்தையாக இருப்பது எந்த வகையில் தர்மம் என்ற கேள்வியும் உண்டு. சம்பளத்திற்கு பணிபுரியும் ஒரு நிறுவனத்தின் ஊழியர்களை தன் புதிய சேனலின் விளம்பரத்திற்காக கடித்து குதறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாமல்தான் என்னுடைய கண்டனத்தை பதிவு செய்தேன்.
அந்த மூவரில் குணசேகரன் மட்டுமே எனக்கு நேரில் தெரியும். இரண்டு முறை பேசியிருக்கிறேன். மற்றவர்களிடம் போனில் கூட பேசியதில்லை. நேரில் பார்த்ததும் இல்லை.இரு தரப்புமே பேசிவைத்துக்கொண்டு செய்யும் ஒரு விஷயத்திற்கு நீங்கள் ஏன் பொங்குகிறீர்கள் என்று கேட்டவர்களும் உண்டு. என் எதிர்ப்போ, கருத்தோ எதையும் இப்போதைக்கு சாதித்துவிடமுடியாது. ஆனால் ஒரு சிந்தனைக்கான வித்தாக இருந்துவிட்டு போகட்டுமே என்பதுதான் என் நிலைப்பாடு.
இந்த விளம்பரத்தின் மூலம் ஸீ இந்துஸ்தான் என்ன சொல்ல வருகிறது?. விளம்பரத்தில் உள்ளவர்கள் ஸீ இந்துஸ்தான் நிறுவனத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் பொது எதிரி என்றா? எதிரி என்றால், விளம்பரத்தில் பெயர் உள்ளவர்களின் நிறுவனங்களையும் சேர்த்தா? இல்லை அந்த நிறுவனங்களில் பணியும் அத்தனை ஊழியர்களையும் சேர்த்தா?
எதற்காக இதையெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கிறது என்றால் ஏற்கனவே தமிழகத்தில் மீடியாக்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன.கட்சியின் நேரடி ஊதுகுழல் சேனல்கள். கட்சியின் ஆதரவு பெற்ற சேனல்கள் என இரண்டே வகைகளில் விமர்சகர்கள் அடக்கிவிடுகிறார்கள். அதேபோன்று அந்த சேனல்களில் பணிபுரியும் ஊழியர்கள் மீதும் முத்திரை குத்தப்பட்டு விடுகிறது.
இதில் இன்னொரு கொடுமை. சில நியூஸ் சேனல் ஊழியர்கள்.. குறிப்பாக செய்தியாளர்கள், நெறியாளர்கள், அரசியல் கட்சிக்காரர்களாகவே மாறி, தங்களுடைய சேனலுக்கு எதிரான அரசியல் நிலைகொண்ட தலைவர்களை அறத்துக்கு மாறான கேள்விகள் கேட்டு லாக்கப் விசாரணை நடத்துகிறார்கள்.இவர்களுக்கு தெரியாது, தங்கள் சேனல் தலைமை தங்களை கடைசிவரை காப்பாற்றாது என்றும் தவிர்க்கமுடியாத நெருக்கடி வந்தால் எப்பேர்பட்ட விசுவாசியையும் சொடுக்கு போடும் நேரத்தில் கழட்டிவிட தயங்கவே மாட்டார்கள் என்றும். ஏறக்குறைய அரசியல் கட்சிகளின் அடிமைகளுக்கு ஏற்படும் நிலைதான் இவர்களுக்கும். (கட்சி அடிமைகளின் கடைசி கதி பற்றி அறிய என்னுடைய லேட்டஸ்ட் முகநூல் பதிவை படிக்கவும்)
உதாரணத்திற்கு ஒருவர் கேப்டன் டீவி செய்தியாளர் என்றால், தேமுதிக, பாஜக அதிமுக பாமக ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு எதிரான சேனல்களின் செய்தியாளர்களுக்கு எதிரியாக தெரிகிறார். இந்த கூட்டணி தரப்பு சேனல்களும் இதே மாதிரி, அந்த கூட்டணி சேனல்களின் செய்தியாளர்களை எதிரிகளாக பார்க்கிறது.இப்படி அரசியல் சார்புடைய சேனல்களில் நேர்மையான ஊடகவாதிகளாக இல்லாமல் விசுவாசிகளாகவே மாறி ஆட்டமாய் போடுகிறவர்கள்,வேலை இழக்க நேரிட்டால், வேலைவாய்ப்பில் எதிர் முகாம்கள் இவர்களை சீண்டவே சீண்டாது. இப்படி ஆட்டம்போட்டு இன்று இருக்கும் இடம் தெரியமால் போனவர்கள் ஏராளம்.
அதனால்தான் சொல்கிறேன். கட்சி சார்புள்ள அல்லது கட்சிக்கு அனுதாபியாக செயல்படும் எந்த சேனலில் பணிபுரிந்தாலும் உங்கள் சுயத்தை இழக்காதீர்கள்.
அரசியல்வாதிகள், அதிகாரிகள், திரைத்துறையினர், பொதுமக்கள்,என பல்வேறு தரப்பிலும் உள்ளவர்கள், உங்களை உங்களாகவே பார்க்கவேண்டும். எந்த நிறுவனத்திற்கு மாறினாலும் சரி. உங்களுக்கான ஒரே சொத்து நேர்மையும் ஊடக அறமும்தான். தனி அடையாளத்தை எக்காரணம் கொண்டும் அழித்துக் கொள்ளாதீர்கள்.
நான் சன் டிவி செய்தியில் பணிபுரிந்தவன். அதற்காக நான் திமுக சொம்பு என்று இன்றும் சொல்கிறார்கள். இன்னொரு குரூப் நான் வன்னியர் என்பதால் நான் பாமக சொம்பு என்று சொல்லும். நான் எம்ஜிஆரை நேசிப்பவன் என்பதால் என்னை அதிமுக சொம்பு என்று சொல்லும்.
இந்த பட்டங்களை வழங்கும் அறிவாளி பல்கலைகழகங்களுக்கே யூஜிசி போல் செயல்படும் அவர்களின் கட்சி தலைமை பீடத்தில் உள்ளவர்களுக்கு நான் யார் என்று நன்றாகவே தெரியும். அவர்கள் என்னிடம் எப்படி பழகுவார்கள் என்பது என் நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும்.
ஓரு மூத்த அரசியல் தலைவரிடம் ஒரு மணி நேரம் பேசிவிட்டு வந்து மறுநாள் அவரை விமர்சித்து எழுதுகிறேன், அவரிடமே விஷயத்தை கொண்டு போகிறார்கள், அவர் சொன்னார், அந்த ஆள் அப்படித்தான் விடுய்யா என்று. என் எழுத்தில் திட்டமிட்டு சிதைக்கும் வன்மம் இல்லை என்பது அவருக்கு தெரியும். இருந்தால் என்னை விடுவாரா? போனில் காய்ச்சி எடுப்பாரே? மறுபடியும் என்னை ஏன் அவர் வட்டாரம் நாடப்போகிறது?
அறிவாலயத்தில் என்னைப் போன்றவர்கள் நெருக்கத்தில் பார்த்து பேசாத மத்திய மாநில அமைச்சர்களா? எவ்வளோ மூத்த தலைவர்களை பார்த்திருக்கிறோம். கலைஞர் போனில் வந்து எடுத்து பேசவேண்டிய நிலையில் நான் இருந்தால், பீதிதான். கும்பாபிஷேகம்தான்..
ஆனால் வெளியே சொல்லி பீலா விட்டுக்கொள்ளலாம், கலைஞருக்கு நான் எவ்ளோ நெருக்கம் தெரியுமா? என்று ? உண்மையில் மாதச்சம்பளம் வாங்கும் ஒரு சாதாரண ஊழியன்.
ஏதாவது காரணத்திற்காக சம்பளம் ஒரு நாள் தள்ளினால்கூட அடிவயிறு கலக்க ஆரம்பித்துவிடும். அதான் என் நிலைமை.
ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு கிடைத்துள்ள மிகமிக சிறிய வரம். எந்த பிரச்சினையையும் எந்த தலைவரின் பார்வைக்கும் வெகு சுலபத்தில் கொண்டுபோய்விடமுடியும். அங்கிருக்கும் நட்புகள் நம்மை மதித்து உதவுவார்கள். அவ்வளவுதான்.
எங்களுக்கு தெரிந்த, சில வரலாற்று நினைவூட்டல்களையும் நம் பேச்சு எடுபடும் அரசியல் தலைவர்களிடம் அப்படித்தான் சொல்வோம்
அவர்கள், அவர்கள் இடத்தில். நாங்கள் எங்களுக்கான இடத்தில்…என் அளவில் எவரிடமும் பல் இளித்ததில்லை. தீபாவளி பொங்கலுக்காக போய் நின்றதில்லை.
அதனால்தான் தேதி ஒன்றான இன்று வீட்டு வாடகையை எப்படி புரட்டுவது என்று ஓடிக்கொண்டிருக்கிறேன்.
2011 இறுதிவாக்கில் GTV என்ற நியூஸ் சேனல்.. செய்தி ஆசிரியர் பணிக்கு கூப்பிட்டார்கள். நான் அங்கே போய் வைத்த முதல் கோரிக்கை, நான் சொல்லும் அளவிற்கு நான் எடுக்கும் செய்தியாளர்களுக்கும் துணை ஆசிரியர்களுக்கும் சம்பளம் கொடுக்கவேண்டும் என்று. அதன் முதலாளி சம்மதித்தார். அதன்படியே அள்ளியும் கொடுத்தார்.அப்போது G TV தந்த அளவுக்கு முன்னணி செய்தி சேனல்களியே மாவட்ட மற்றும் தாலுகா செய்தியாளர்கள் அவ்வளவு சம்பளம் பெற்றதில்லை.
எனக்கு கார் வீடு எங்கே எதுவேண்டும் என்று கேட்டார்கள். நிரந்தரம் அல்லாத இப்படிப்பட்ட சலுகைகள் அனைத்தும் ஒரு காலத்தில் பறிக்கப்படும் என்பதால் அவற்றை நான் விரும்புவதே கிடையாது என்று தெளிவாகவே சொன்னேன். ஏனெனில் நமக்குதான் வாய் ஒவரா ஆச்சே..ஆபிஸ் செல், சிம் எதையும் என் பெர்சனலுக்காக நான் வாங்கவேயில்லை. என் சொந்த உபயோகத்துக்கூட சேனலின் வாகனங்களை நான் பயன்படுத்தியது கிடையாது. சேனல் நன்றாக உருவாகிக்கொண்டிருந்த நேரத்தில் எனக்கு நேர்ந்த பைபாஸ் சர்ஜரியால் நான் மேற்கொண்டு பணியை தொடர முடியவில்லை.
அங்கே என்னுடன் பணியாற்றிவர்கள் இன்று பல சேனல்களில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள்.. இங்கே முகநூலிலும் இருக்கிறார்கள்.. நான் சொல்வது பொய் என்றால் அவர்களே இங்கு வந்து கழுவி ஊற்றுவார்கள்.
நியூஸ் சேனல்களில் செய்தியாளர்களாக பணிபுரியுங்கள். கட்சி நிர்வாகிகளைப்போல் பணிபுரியாதீர்கள்.அண்மைக்காலமாக செய்தியாளர்களையும் ஊடகவியலாளர்களையும் கட்சிக்கார்கள் போல் மாற்றி பகைமையை உருவாக்கி, எதிர்கால வேலைவாய்ப்புகளை இல்லாமல் போகவைக்கும் போக்கு சாமர்த்தியமாக நுழைந்து ஆட்டம்போடஆரம்பித்திருக்கிறது. அதற்கு பலியாகிவிடாதீர்கள். ஆரம்பத்தில் அள்ளிக்கொடுத்து உச்சிக்குக் கொண்டு போவார்கள். கொஞ்ச நாளிலேயே அங்கிருந்து எட்டி உடைப்பார்கள்..எழுந்துதான் நடக்க முடியாது.அரசியலில் ஒருவன் கட்சி மாறினால் மற்ற கட்சிக்குள் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், சேனல்களில் அப்படி அல்ல.. விலகினால் நேரா வீட்டுக்குதான்.
மறுபடியும் சொல்கிறேன், உங்கள் தனி அடையாளத்தை மட்டும் எக்காரணம் கொண்டும் இழந்துவிடாதீர்கள்.
முகநூலில் ஏழுமலை வெங்கடேசன்…