வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை ரஜினி புறக்கணிப்பதால் கமலுக்குத்தான் நஷ்டம்.2021ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கும் ரஜினி இதே பதிலைத்தான் கூறுவார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட அறிக்கையில், ‘உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தரவில்லை. ஆகையால் யாரும் ரஜினிகாந்தின பெயர் மற்றும் புகைப்படம், ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர், ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயர், மன்றத்தின் கொடி, உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை ரஜினி புறக்கணிப்பதால் கமலுக்குத்தான் நஷ்டம் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை ராயபுரத்தில் ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்கள் ரஜினி மக்கள் மன்ற அறிக்கை குறித்து கேள்வி எழுப்பியதற்கு, பதில் கூறிய அவர்,’கவலை வேண்டாம், 2021ம் ஆண்டு தேர்தலிலும் ரஜினி இதையேதான் கூறுவார். இன் மூலமாக மிகவும் கலவலைப்பட வேண்டியது, வருத்தப்பட வேண்டியது என்றால் கமல்தான். இணைந்த கைகளாகச் செயல்படுவோம் என்று கூறியவர்கள் இப்போதே இப்படி இருக்கிறார்கள். ரஜினியின் புறக்கணிப்பால் கமலுக்கு தான் நஷ்டம்’என்றார் அவர்.