‘ஜடா’தலைப்புக்கு என்ன அர்த்தம் என்று தலைமுடியைப் பிய்த்துக்கொள்ளவேண்டாம். அது கதநாயகனின் பெயர். அநேகமாக ஜகந்நாதண்டா என்பதன் சுருக்கமாக இருக்கலாம்.

கால்பந்து விளையாட்டும் அதில் நடக்கும் அரசியலையும் மையப்படுத்திய கதை கொண்ட படம் ஜடா.நாயகன் கதிர், யோகிபாபு உள்ளிட்டோர் அடங்கிய கால்பந்து அணி, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வென்று இந்திய அணியில் இடம்பிடிக்கும் நோக்கத்துடன் பயிற்சி எடுக்கின்றனர்.இந்நிலையில்,திடீரென, செவன்ஸ் எனப்படும், விதிமுறைகளக் கடைபிடிக்காத, வன்முறை மேலோங்கும் விளையாட்டில் கலந்து கொண்டாக வேண்டும் என நாயகன் கதிர் பிடிவாதம் பிடிக்கிறார்.

அவருடைய பிடிவாதத்துக்குக் காரணம் என்ன? அதன்பின் என்ன நடந்தது? என்பதைச் சொல்வதுதான் படம்.

கால்பந்து வீரர் வேடத்துக்கு ஏற்ப தன்னைத் தயார் செய்திருக்கிறார் கதிர். நடிப்பிலும் முன்னேற்றம்.படம் முழுக்க நாயகனுடன் பயணிக்கும் வேடம் யோகிபாபுவுக்கு. மிக சமீபத்திய படங்களில் நான் என்ன சொன்னாலும் சிரிப்பீங்க என்கிற தெனாவட்டி பாடி லாங்குவேஜ் தெரிகிறது யோகி பாபுஇடம். இன்னொரு கால்பந்து வீரராக கிஷோர். நல்லவர் வல்லவர் எல்லோரையும் முன்னேற்ற நினைப்பவர். அப்படி ஒருவர் இருந்தால் என்னவெல்லாம் நடக்குமோ? அதெல்லாம் கிஷோருக்கும் நடக்கிறது.படத்தில் சில காட்சிகளே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கிறார்.

நாயகியாக ரோஷினி ஜெயபிரகாஷ் நடித்திருக்கிறார். அட்ரஸ் விசாரித்து ஒரு லவ் லெட்டர் கொடுத்துவிட்டு வரலாமா என்கிற அளவுக்கு பேரழகி. ஆனால் இயக்குநரும் கதிரும் அவரை சைடிஷ்க்கு ஊறுகாய் அளவுக்கே யூஸ் செய்திருக்கிறார்கள். வில்லனாக நடித்திருக்கும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் நன்றாக நடித்து பயமுறுத்துகிறார்.கெளதம் செல்வராஜ்,அருண் அலெக்ஸாண்டர்,லிஜேஷ்,ராஜ்குமார்,அருண் பிரசாத்,நிஷாந்த்,சண்முகம் உள்ளிட்டோர் கொடுத்த வேடங்களுக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

ஏ.ஆர்.சூர்யாவின் ஒளிப்பதிவு பிரமாதம். இரவுக்காட்சிகளை ரசிக்கும்படி எடுத்திருக்கிறார்.சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசை ஓவர் இரைச்சல். கதை .எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் குமரன் அடித்தட்டு மக்களின் கனவுகளையும் அதை நனவாக்க எண்ணி அவர்கள் செலுத்தும் கடும் உழைப்பையும், வசதியானவர்கள் எவ்வளவு இலகுவாகத் தட்டிப்பறிக்கிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறார். அவர் படம் எடுத்துக்கொண்டிருக்கும்போதே ஏதோ ஒரு பேய்ப்படம் ரிலீஸாகி ஹிட் அடித்திருகும் போல. முதல் பாதியில் பல காட்சிகளில் அட’ போட வைக்கும் அவர் இரண்டாம் பாதியில் கதைக்குள் பேய்களைப் புகுத்தி கதையையும் நம்மையும் பாடாய்ப்படுத்தி விடுகிறார்.

Related Images: