தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. உள்ளாட்சி அமைப்பு தொகுதிகள் வரையறுக்கப்பட்டதில் குளறுபடிகள் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து குளறுபடிகள் அனைத்தும் நீக்கப்பட்டன. அதன் பிறகும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தாமதம் ஏற்படுவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இது தொடர்பாக தமிழக மாநில தேர்தல் ஆணையத்தை விசாரித்து தேர்தல் தேதியை அறிவிக்க உத்தரவிட்டனர். அப்போது அக்டோபர் 30-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிப்போம் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்தது.

ஆனால் மாநில தேர்தல் ஆணையத்தால் திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை. மேலும் அவகாசம் அளிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்தை சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி இருந்தது. அதன்பின்னர் அவகாசம் வழங்க மறுத்த சுப்ரீம் கோர்ட், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் டிசம்பர் 13-ந்தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

இதையடுத்து டிசம்பர் 2-ந்தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் வாக்காளர் பட்டியல் தயார் செய்வது, வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் கூட்டத்தை கூட்டி மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கருத்துக்கள் கேட்டார். அப்போது உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினார்கள். ஓட்டுச் சீட்டுக்கு பதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட்டார்.

அதன்படி தமிழகத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.

வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 13, வேட்பு மனுக்களை திரும்ப பெற டிசம்பர் 18ம் தேதி கடைசி நாள் ஆகும். ஜனவரி 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

Related Images: