எஸ் என் எஸ் பட நிறுவனம் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்திருக்கும் படம் தமிழரசன்.இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார்.விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் கமர்சியல் படமாக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.டிசம்பர் 29 அன்று இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா அடையாரில் நடந்தது.

விழாவில் இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா, நாயகன் விஜய் ஆண்டனி, ராதாரவி,படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, டி. சிவா ,படத்தின் நாயகி ரம்யா நம்பீசன், ரோபோ சங்கர், மதுமிதா, மற்றும் பா.ஜ.க கட்சியின் முக்கிய பிரமுகர்களான பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன்ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குநர் பாபு யோகஸ்வரன் பேசியதாவது,,
“இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக அமைந்ததிற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளரும் விஜய் ஆண்டனியும் தான். நாங்கள் இரண்டு ராஜாக்களைப் பார்த்துத் தான் வளர்ந்தோம். அந்த இரண்டு ராஜாக்கள் இளையராஜாவும் பாரதிராஜாவும் தான். அவர்கள் இந்த மேடையில் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்தப்படம் வெற்றியடைய அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்

தயாரிப்பாளர் பெப்சி சிவா பேசியதாவது…“பத்திரிகை நண்பர்களுக்கும் மேடையில் இருப்பவர்களுக்கும் முதல் நன்றி. நான் பெப்சி சிவா ஆக மாறுவதற்கு ஒத்துழைப்பு தந்த பத்திரிகை நண்பர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நன்றி.பாரதிராஜா எனக்கு எல்லா நேரத்திலும் உதவியாக இருப்பவர். பி.ஆர்.ஓ மெளனம் ரவி என் ஆத்மார்த்தமான நண்பர். அவர் மூலமாக எனக்கு நிறைய மீடியா நண்பர்கள் கிடைத்தார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்தப்படத்தை என் மனைவி தான் தயாரிக்கிறார். அவர் சார்பாக மெளனம் ரவி அவர்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பதில் பெருமை அடைகிறோம்.இந்தப்படத்தின் பாடல்கள் இரண்டாயிரத்தி இருபதாம் ஆண்டு முழுவதும் பேசப்படும். அந்தளவிற்கு பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன.

விஜய் ஆண்டனி தான் என்னை தைரியப்படுத்தி இப்படத்தைத் தயாரிக்க வைத்தார். இந்த முழுப்படத்திலும் அவருடைய பங்களிப்பு மிக அதிகம். தயாரிப்பாளராக என் மனைவி உருவாகி இருந்தாலும் பைனான்ஸியர் உத்தவ், விஜய் ஆண்டனி இருவரும் ஆற்றிய பங்கு மிக அதிகம்.இதனிடையே 2000 பேர்களுக்கு அன்னதானம் செய்துவிட்டுத் தான் இந்த விழாவை துவங்கியுள்ளோம். இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள, வானதி ஸ்ரீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், ராதாரவி உள்பட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.இந்தப்படம் நிச்சயமாக வெற்றிப்படமாக இருக்கும். ஏன் என்றால் இந்தப்படத்தில் எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது” என்றார்

நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது,….“இன்னைக்கு நான் ஒரு மியூசிக் டைரக்டரா ஆகி, நடிகனாகவும் இருக்கிறேன் என்றால் அதுக்கு காரணம் இளையராஜா. அவர் ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். அவர் ஒரு இசை அமைப்பாளருக்கு இசை அமைத்திருப்பது இதுதான் முதல்முறை.

இந்தத் தயாரிப்பாளர் சிவா சாரைப் பார்க்க பயமாக இருக்கும். அவர் நிறைய செல்வு செய்யக்கூடியவர். நிறைய பெரிய நடிகர்களை நடிக்க வைத்துள்ளார். இந்தப்படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார் இயக்குநர் பாபு யோகேஸ்வரன்.அவர் பெரிய இயக்குநராக வருவார். மோகன்ராஜா மகன் சிறப்பாக நடித்துள்ளான். இந்தப்படத்தை குடும்பத்தோடு வந்து பார்க்கலாம். பாருங்கள்”

இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது,….“பெயரிலே பொன்னை வைத்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், விஜய் ஆண்ட்னி, சிவா அனைவருக்கும் வணக்கம்.சிவா நல்ல படம் எடுக்கணும். என்று நினைப்பவர். விஜய் ஆண்டனி ஒரு ஆச்சர்யமான முகம். ரொம்ப சாதாரணமா இருப்பார். ஆனால் படத்தில் வேறமாதிரி இருக்கிறார். நல்ல இசை அமைப்பாளர் இப்போது நல்ல நடிகர்.

தமிழரசன் என்ற பெயர் ரொம்ப நல்லாயிருக்கு. இளையராஜாவை மிஞ்சுவதற்கு இனி ஒரு இசை அமைப்பாளர் பிறந்து வந்தாலும் முடியாது. படத்தை ஒன்றுமே இல்லாமல் எடுத்துக் கொடுத்தாலும் அந்தப்படத்திற்கு உயிர் கொடுத்து விடுவார் இளையராஜா..பேசாத படத்தைப் பேச வைத்தவர் இளையராஜா. அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் இசைக்கு ஈடு இணையில்லை.இந்த இயக்குநரை சிவா தேர்ந்தெடுக்கிறார் என்றால் நிச்சயம் பாபு யோகேஸ்வரன் நல்ல இயக்குநராகத் தான் இருப்பான். இனி வரும் இளைஞர்கள் கொஞ்சம் வயலன்ஸ் இல்லாமல் படமெடுங்கள். இது நல்லபடம். சிவா மனசிற்கு இந்தப்படம் பெரிய வெற்றியை அடையும்” என்றார்

Related Images: