படிக்கும்போது மாவட்ட அளவில் முதல் மார்க் வாங்கும் ஜெண்டில் மாணவன் சிவகார்த்திகேயன், வாழ்க்கைச் சூழலாம் மார்க் சீட் மோசடியாலராக மாறி பின் சமூகத்துக்கு ஒரு நல்ல செய்தி சொன்னால்தான் அடுத்தடுத்து அஜீத், விஜய் ரேஞ்சுக்கு வளரமுடியும் என்பதால் மீண்டும் ஜெண்டில்மேனாக மாறி எதிரிகளைப் பந்தாடும் கதை.

பி.எஸ்.மித்ரனின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ஹீரோ. இந்தப்படத்தில் மற்றொரு ஹீரோவாக அர்ஜுன் நடித்துள்ளார். ‘சின்ன வயசுல ஒரு ஸ்டூடண்ட் கிட்ட, ‘நீ என்ன ஆகப்போற?’ன்னு கேட்டா ‘பெரிய டாக்டராகி மக்களோட உயிரை காப்பாத்துவேன், மிலிட்ரியில போய் நாட்டைக் காப்பாத்துவேன்’னு சூப்பர் ஹீரோ மாதிரி பேசுவாங்க. ஆனா, படிச்சு முடிச்சு அவங்க நெனச்சமாதிரி வேலை கிடைச்சாலும், மத்தவங்களுக்கு உதவுற சூப்பர் ஹீரோ கனவ மறந்திருவாங்க. அதுக்கு நம்மளோட கல்வி முறை தான் காரணம்.’, ஹீரோ படத்தில் இரண்டுமுறை இடம்பெற்று, இரு ஹீரோக்களும் பேசும் இந்த வசனம்தான் படத்திற்கான காரணமும் மையக்கருத்தும்.

சக்திமானின் தீவிர ரசிகரான சக்திக்கு(சிவகார்த்திகேயன்) சிறுவயது முதலே சூப்பர் ஹீரோ ஆகவேண்டும் என்பது ஆசை. நன்றாகப் படித்து அதிக மதிப்பெண் எடுக்கும் அவருக்கு மனிதனை விட அவன் கையில் இருக்கும் சான்றிதழ்கள் மீதுதான் அனைவரும் நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவர போலிசான்றிதழ்கள் செய்துவிற்கும் மோசடி வேலையைச் செய்கிறார். அவரது பகுதியைச் சேர்ந்த மதி(இவானா) பொதுத்தேர்வில் சற்று மதிப்பெண் குறைவாக எடுத்தாலும் சொந்தமாக ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும் அளவிற்கு புத்திசாலியாக இருக்கிறார். பொறியியல் கல்லூரியில் அவருக்கு நேர்மையான முறையில் இடம் வாங்கித்தர சக்தி முயற்சிக்க கல்லூரி சீட்டுக்கு பதிலாக மதிக்கு திருட்டுப்பட்டம் கிடைக்கிறது. அவர் தற்கொலை செய்துகொள்கிறார். அதே நேரத்தில் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர நினைத்து அதனால் குற்றவாளியாக்கப்பட்டு தலைமறைவாக வாழும் சத்யமூர்த்தி(அர்ஜுன்), பள்ளித் தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மாறுபட்ட கல்வி அளித்து அவர்களை கண்டுபிடிப்பாளர்களாக மாற்றுகிறார். அவரது மாணவியான மதி மரணமடைய பிரச்னை மற்ற மாணவர்களை நோக்கி நகர்கிறது. மதியின் மரணத்திற்கு நீதி கிடைத்ததா? எதற்காக மாணவர்கள் தேடப்படுகிறார்கள்? அவர்களைக் காப்பாற்ற சூப்பர் ஹீரோ எப்படி அவதாரம் எடுக்கிறார், என்பது தான் ஹீரோ திரைப்படத்தின் மீதிக்கதை.

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த அவரது முதல்படமான ஜெண்டில்மேனின் தொடர்ச்சி போலவே பல சம்பவங்கள் படத்தில் வைக்கப்பட்டுள்ளன. ‘படத்துல ஒரு ஹீரோ இருந்தா ஒரு ஜெண்டில்மேனும் இருக்கணும்ல என்ரு கிளைமேக்ஸில் ஒரு வசனமும் வைத்து அதை உறுதி செய்கிறார் இயக்குநர் மித்ரன். நல்ல கதைபோல் தெரியும் இப்படத்தில் துவக்க காட்சிகள் குரிப்பாக சிவகார்த்திகேயனுக்கு வைக்கப்பட்டுள்ள பில்ட் அப் பாடல் சண்டைக்காட்சிகள் எரிச்சலைத்தருகின்றன.

ஹீரோ சிவகார்த்திகேயன் வழக்கமான நடிப்பு. முன்னேற்றத்தை எதிர்பார்த்து ஏமாறவேண்டியதில்லை. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு காட்சிகளில் மெழுகுபொம்மையாய் வந்து காதல் பண்ணும் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் அடுத்து சுத்தமாக காணாமல் போயிருக்கிறார். மதியாக அசத்தியிருக்கும் இவானா கலக்கியிருக்கிறார். அர்ஜூன் சிவகார்த்திகேயனை விட முக்கிய பாத்திரத்தில் தன் அனுபவத்தைக் காட்டியிருக்கிறார். ஜார்ஜ்.சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு கைதட்ட வைக்கிறது. திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் வழக்கமான வகையறா. யுவன் பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் ஓவர் இரைச்சல்களால் இம்சிக்கிறார்.

கல்வி வியாபாரத்தால் எப்படி கல்வித்தந்தைகள் சமூகத்தில் கோடீஸ்வரர்களாக கொடிகட்டிப்பறக்கிறார்களோ அதே போல் சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதிக்க இந்த கல்வி வியாபார மோசடி சப்ஜெக்ட் கைகொடுக்கும் என்று இயக்குநர் மித்ரன் திடமாக நம்பியிருக்கிறார்.

Related Images: