ண்மையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய், தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி மோடி பொய் சொல்வதாகக் கூறி, எதிர்ப்பின் காரணமாக தற்போது தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டம் தொடங்கப்படுவது குறித்து கூறினார்.

அப்போது, மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்புக்காக தனிப்பட்ட தரவுகள் கேட்கும்போது, ‘பில்லா ரங்கா, குங் ஃபூ குட்டா’ போன்ற நகைச்சுவையான தரவுகளைக் கூறி ஒத்துழையாமையை செய்யுங்கள் எனப் பேசினார். இது தேசிய ஊடகங்களால் திரிக்கப்பட்டு சர்ச்சையாக்கப்பட்டது. சுப்ரமணியம் சாமி உள்ளிட்ட பாஜகவினர் அருந்ததி ராயை துரோகி என அழைத்ததோடு, அவரை கைது செய்ய வேண்டும் எனவும் பேசினர்.

இந்நிலையில் ஊடகங்களின் பாஜக ஜால்ராவை கண்டித்து அருந்ததி ராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் தமிழாக்கம்:

“இது டிசம்பர் 25, 2019 அன்று டெல்லி பல்கலைக்கழகத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டைப் பற்றி பேசியபோது நான் கூறியதைப் பற்றியது (இது தேசிய குடிமக்கள் பதிவிற்கான தரவுத் தளம் என்று அதிகாரப்பூர்வமாக இப்போது நாடு அறிந்திருக்கிறது).

டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் டிசம்பர் 22 அன்று பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து அப்பட்டமாக பொய் சொன்னதோடு, தடுப்பு மையங்கள் இல்லை எனவும் நம்மிடம் சொன்னார்.

அந்த பொய்களுக்கு எதிர்வினையாற்றும் வகையில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்காக நம்முடைய தனிப்பட்ட தரவை சேகரிக்க வரும்போது நாம் கூட்டாக அபத்தமான தகவல்களை தர வேண்டும் என்று நான் சொன்னேன். நான் முன்வைத்தது என்னவென்றால் புன்னகையுடன் கூடிய பொது ஒத்துழையாமை.

நான் பேசியதன் முழு உரையும் அப்போது அங்கிருந்த, அனைத்து முக்கிய தொலைக்காட்சி சேனல்களிலும், உள்ளன. நிச்சயமாக அவர்கள் எதையும் ஒளிபரப்பவில்லை. அதைப் பற்றி கருத்து தெரிவிப்பதன் மூலமும் அதை தவறாக சித்தரிப்பதன் மூலமும், அதைப் பற்றி பொய் சொல்வதன் மூலமும் அவர்கள் தங்களையும் பிறரையும் உற்சாகப்படுத்தினர்.

இது என்னை கைது செய்ய வேண்டும் என கோருவதிலும் தொலைக்காட்சி குழுவினர் எனது வீட்டை முற்றுகையிடுவதிலும் கொண்டு போய் சேர்த்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக எனது பேச்சு யூ – டியூப்பில் உள்ளது.

எனது கேள்வி இதுதான்: இந்த நாட்டின் பிரதமர் நம்மிடம் பொய் சொல்வது என்பது சரி… ஆனால், மக்களை சிரிக்க சொல்வது ஒரு கிரிமினல் குற்றம் ; பாதுகாப்பு அச்சுறுத்தல்… அப்படித்தானே?

அற்புதமான நேரங்கள். அற்புதமான வெகுஜன ஊடகங்கள்.

உங்கள் கவனத்திற்கு நன்றி.”


அருந்ததி ராய்
டிசம்பர் 27, 2019

YouTube player

Related Images: