தான் ஒரு நாவலை மய்யமாகக் கொண்டு இயக்கிய ‘அசுரன்’படம் மாபெரும் வெற்றிபெற்றதால் மீண்டும் தமிழின் முக்கியமான நாவல் ஒன்றையே தனது அடுத்த படத்தின் கதைக்களனாகக் கொண்டு இயக்கவிருக்கிறார் வெற்றிமாறன்.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் தனது அடுத்த கதைக்கு தேர்ந்தெடுத்திருக்கும் நாயகன் சூர்யா. சூர்யாவுக்கு இது நாற்பதாவது படம்.பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற நாவலை மையமாகக் கொண்டு அசுரன் திரைப்படம் உருவானது.

இந்நிலையில், நேற்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை அறிவித்தார்.’வாடிவாசல்’ என்ற நாவல் சி.சு.செல்லப்பா எழுதியதாகும். மதுரையைச் சேர்ந்த சி.சு.செல்லப்பா பல்வேறு நாளிதழ்களில் பணிபுரிந்திருக்கிறார். அதோடு, ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன மாவட்டமான மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தழுவி எழுதிய ‘வாடிவாசல்’ என்ற குறுநாவல் 1959 இல் வெளியானது.
பிச்சி மற்றும் மருதன் என்ற இருவர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வதைப் பற்றிய கதையாகும். பிச்சியின் தகப்பனான அம்புலி சிறந்த மாடுபிடி வீரராக இருப்பார். யாராலும் அடக்கமுடியாத காளி என்ற ஜமீன் வீட்டு காளையைப் பிடிக்கப்போய் இறந்துவிடுவார் அம்புலி. அம்புலி இறக்கும் முன் காளியை எப்படியாவது அடக்கி விடவேண்டும் என்று சொல்கிறார். அப்பாவின் கோரிக்கையை பிச்சி நிறைவேற்றினாரா இல்லையா என்பது தான் மீதிக் கதை.இந்தக் கதையைக் கொண்டு தான் வாடிவாசல் திரைப்படம் உருவாக இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையை, ஜல்லிக்கட்டைப் பற்றி பல்வேறு திரைப்படங்கள் வந்திருந்தாலும், இக்களத்தை வெற்றிமாறன் தேர்ந்தெடுத்திருப்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வெற்றிமாறன் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தமிழ் நாவலை வைத்துப் படம் இயக்குவதால் இன்னும் பல இயக்குநர்களின் கவனம் நல்ல தமிழ் நாவல்களின் பக்கம் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.