ரஜினிகாந்த் முதலில் அரசியலுக்கு வருவதாகவே இல்லை என்று தெரிகிறது. அவர் நேரடியாக ஆட்சிக்கு வருவதற்கு மட்டுமே விரும்புகிறார். 

கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளாகவே ரஜினிகாந்த்தின் அரசியல் நுழைவு, சாத்தியங்கள் குறித்து எழுதியும் பேசியும் வருவோருக்கு இந்தத் தலைப்பு சற்றே அலுப்பாகக்கூட இருக்கும். நானும் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவருக்கு அரசியல் சரிபட்டு வராது எனப் பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். கருத்துக் கேட்கும் தமிழ், ஆங்கில ஊடக நண்பர்களிடம் கருத்துகளைப் பகிர்ந்துள்ளேன்.
ஆனால், இந்த நேரத்தில் மீண்டும் ரஜினிகாந்த் அரசியல் குறித்து எழுத முக்கியக் காரணம் இருக்கிறது. அது என்னவென்றால் சாதாரணமாக அரசியலில் ஈடுபாடு காட்டாத மக்கள் தொகுதிகளும் மாணவர்களும், மத்திய தர வர்க்கத்தினரும் அரசியலில் ஈடுபடும் நேரம் இது. சரியாகச் சொன்னால் பெண்கள் கோலங்களில் குடியுரிமை சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிராக அரசியல் முழக்கத்தை எழுதும் நேரம் இது. ஆனால் ரஜினிகாந்த் மெளனமாக இருக்கிறார்.

ஆனால், என்னுடைய பிரச்சினை ரஜினிகாந்த் குடியுரிமை சட்டச் சீர்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு குறித்தெல்லாம் கருத்து கூறவில்லை என்பது மட்டுமல்ல. இந்தச் சந்தர்ப்பத்தில் பொதுவாக ஒருவரது அரசியல் நுழைவு என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். அவரது மெளனம், இரண்டுங்கெட்டான், அரைவேக்காடு ட்வீட் என்பதையெல்லாம் கடந்து ஒருவர் அரசியலில் ஈடுபட முனைவதன் பொருள் என்ன என்பதை நாம் பரசீலிக்க வேண்டும்.

அரசியலுக்கு வருகிறாரா? ஆட்சிக்கு வருகிறாரா?
ரஜினிகாந்த் முதலில் அரசியலுக்கு வருவதாகவே இல்லை என்று தெரிகிறது. அவர் நேரடியாக ஆட்சிக்கு வருவதற்கு மட்டுமே விரும்புகிறார். ஏனெனில் அவர் கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூறினார்; “போர்! போர்!” என்று முழக்கமிட்டார். அன்றைய தினம் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்துக்கு சென்று ஆசி வாங்கினார். அங்கே ஒரு துறவி, “இவர் ஆன்மிக அரசியல் என்று கூறியுள்ளார்; ஸோ கால்ட் செக்யூலரிஸம் இல்லை” என்று புளகித்து கூறும் யூடியூப் காட்சியை நாமெல்லாம் கண்டு மகிழ்ந்தோம்.
அதன் பிறகு அவர் இரண்டாண்டுகளில் கட்சியும் தொடங்கவில்லை. எந்த ஓர் அரசியல் பிரச்சினைக்காகவும் ரசிகர்களையோ, தன் ஆதரவாளர்களைத் திரட்டி குரல் கொடுப்பதோ, போராடுவதோ இல்லை. அதனால் தமிழகத் தேர்தல் அறிவிக்கப்பட்டால், அல்லது தற்போதைய அரசின் ஆட்சிக்காலம் முடிந்து தேர்தல் வந்தேயாக வேண்டும் என்ற நேரத்தில், ஆட்சிக்கு வரத்தான் கட்சி தொடங்குவாரே தவிர அரசியலுக்காக அல்ல என்று தெளிவாகத் தெரிகிறது. சுதந்திர இந்திய வரலாற்றில், தமிழக வரலாற்றில் இதற்கு எந்த முன்னுதாரணமும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ரஜனியைப் பொறுத்தவரை ஆட்சிக்கு வரத்தான் அரசியல் கட்சியே தவிர அதற்கு வேறு எந்த விதத்திலும் சமூக மாற்றத்திற்குப் பணி செய்யும் நோக்கமோ, கோட்பாடா, கொள்கையோ இல்லை என்பது தெளிவாகிறது.

பிற கட்சிகளின் வரலாறு என்ன?
இந்தியாவின் முதல் கட்சியான காங்கிரஸ் கட்சியை எடுத்துக்கொள்வோம். அது இந்திய மக்களின் கோரிக்கைகளை பிரிட்டிஷ் அரசிடம் எடுத்துச் சொல்ல தோன்றியது. இந்தியர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் பங்கு வேண்டும், சுயாட்சி உரிமை வேண்டும் என்றெல்லாம் கோரியது. ஆனாலும்கூட பிரிட்டிஷ் அரசு இரட்டையாட்சி முறையை 1920ஆம் ஆண்டு அறிவித்தபோது காங்கிரஸ் பங்கேற்க மறுத்தது. சில காங்கிரஸ்காரர்கள் சுயராஜ்ய கட்சி என்று தொடங்கி பங்கேற்றார்கள். பிறகு 1937இல்தான் பங்கேற்றார்கள். விரைவில் ராஜினாமா செய்தார்கள். சுதந்திரம் பெற்ற பிறகோ காந்தி காங்கிரஸையே கலைத்துவிடலாம் என யோசித்தார்.
பெரியாருக்கு இயக்கம் நடத்துவதுதான் பிடிக்குமே தவிர ஆட்சிக்கு வருவதே பிடிக்காது. காங்கிரஸ் அவரை ஆட்சிப்பொறுப்பேற்க அழைத்தபோதும் அவர் வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையை ஏற்பீர்களா என்று கேட்டு மறுத்தார். வாழ்நாள் முழுவதும் பதவிக்கு வருவதை நோக்கமாகக் கொள்வதை அருவருத்தார்.

திராவிட முன்னேற்றக் கழகம் 1949ஆம் ஆண்டு பிறந்து. ஓரிரு ஆண்டுகளிலேயே கணிசமான வளர்ச்சி கண்டது. ஆனாலும் திராவிட நாடு கொள்கையை, சமூக நீதி கொள்கையை பிரச்சாரம் செய்வதே தலையாய பணியெனக் கொண்டு 1952ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பங்கேற்கவில்லை. பின்னர் 1956ஆம் ஆண்டு தேர்தலில் பங்கேற்கலாமா எனக் கட்சி மாநாட்டில் கருத்துக்கணிப்பு நடத்திய பிறகே தேர்தலில் பங்கேற்றது.

பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவைகூட முதலில் சமூக இயக்கங்களாக இருந்து பின்னரே தேர்தலில் பங்கேற்க முடிவு செய்தன. இவ்வகையான வெகுஜன இயக்கங்கள் எல்லாமே தொடர்ந்து களத்தில் பணி செய்துகொண்டு, மக்களின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கும்.

கம்யூனிஸ்டு கட்சிகளைப் பொறுத்தவரை தேர்தல் என்பது இரண்டாம்பட்சம்தான். அவர்கள் தொழிற்சங்கங்கள், மாதர் சங்கம், மாணவர் அணி, கலை இலக்கிய அணிகள் என்று தொடர்ந்து சமூகப் பணியாற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்களிடம் உள்ள தொண்டர் பலத்துக்காகவே பெரிய கட்சிகளும் அவர்கள் கூட்டணியை விரும்பும். தேர்தலுக்கு அப்பால் அவர்களது அரசியல் முக்கியத்துவம் தனித்துவமிக்கது. தோழர் நல்லகண்ணு, டி.ராஜா, பி.ஆர்.நடராஜன், கனகராஜ் என எண்ணற்ற தோழர்களின் அர்ப்பணிப்பும், அயராத பணியும் ஆட்சியை எதிர்பார்த்ததல்ல.
ஏன் விஜய்காந்த் கூட ஒரு வருடம் வேலை செய்து கட்சி அமைப்புகளை, அணிகளை உருவாக்கிவிட்டு கட்சி தொடங்கினார். தேர்தல் வரட்டும் தொடங்குகிறேன் என்று கூறவில்லை. அந்தக் கட்சியால் பிற கட்சிகளைப் போல களச்செயல்பாட்டில் ஈடுபட முடியவில்லை; கூட்டணி பேரங்களில் சுகம் கண்டு சீரழிந்து போயிற்று.

அரசியலற்ற, ஆட்சி மோகத்தின் ஆபாசம்.
மாணவர்கள் கல்வியின் மூலம் சில ஆற்றல்களைப் பெறுகிறார்களா என்று உறுதிசெய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் தேர்வுகள் என்பவை பரவலாக வைக்கப்படுகின்றன. உலகின் சிறந்த கல்வியாளர்கள், மாதிரி பள்ளிகள் நடத்துபவர்கள் எல்லாம் தேர்வுகள் முக்கியமல்ல, கல்வியே முக்கியம் என்பார்கள். உயர் கல்வியில் கற்றலும், ஆய்வுமே முக்கியம். தேர்வுகளின் முக்கியத்துவம் குறைந்துகொண்டே வரும். நாமக்கல் கோழிப்பண்ணை பள்ளிகள் என்று அழைக்கப்படும் நிறுவனங்களின் குறைபாடே அவை தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதையே கல்வியின் லட்சியமாக மாற்றுகின்றன என்பதுதான். இதையெல்லாம் தவிர்க்கத்தான் ஆண்டு முழுவதும் கல்வி கற்கும் முறைகளை மதிப்பிடும் வழிவகைகள் உருவாக்கப்படுகின்றன. கல்வி முக்கியமில்லை, தேர்வில் வெல்வதுதான் முக்கியம் என்று நினைப்பது எவ்வளவு கேவலமோ அப்படிப்பட்டதுதான் அரசியல் முக்கியமல்ல, ஆட்சிக்கு வருவதுதான் முக்கியம் என நினைப்பதும்.

இன்னும் ஓர் உதாரணம் மனத்தில் தைக்கும்படி இருக்கும். காதலர்கள் ஒருநாள் கரம் பற்றுவார்கள், திருமணம் செய்துகொள்வார்கள், அதன் பின் தாம்பத்ய உறவில் ஈடுபடுவார்கள். காதல், திருமணம் என்பதெல்லாம் முக்கியமில்லை, நேரடியாக தாம்பத்ய உறவுக்குச் செல்வோம் என்பது எவ்வளவு ஆபாசமாக இருக்கிறது, உறவைக் கொச்சைப்படுத்துகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். உன்னதமான உறவில் தாம்பத்யம் மட்டுமல்ல, ஏன் திருமணமே நிகழாவிட்டாலும், காதலித்ததே பெரிய இன்பம் என்றுதானே கருதுவார்கள்? அப்படித்தான் உண்மையில் மக்கள் பணி செய்ய நினைப்பவர்களும் முதலில் இயக்கத்தைத் தோற்றுவிப்பார்கள். மக்களிடையே பணி செய்வார்கள், கருத்துகளைப் பிரச்சாரம் செய்வார்கள். அதில் மக்களின் ஆதரவைப் பெற்ற நிலையில், மக்களிடமிருந்து தன்னலமற்ற கட்சி பணியாளர்கள், லட்சியவாதிகள், திறனாளர்கள் உருவான பிறகு, அவசியம் என்றால் ஆட்சி செய்ய முனைவார்கள். எதுவுமே வேண்டாம், தேர்தல் வந்தால் போதும். 234 தொகுதிகளிலும் ஆட்களைப் போட்டு நேராக ஆட்சியில் அமர்வேன் என்று சொல்லும் மனிதரை எப்படி இந்த சமூகம் சகித்துக் கொள்கிறது என்றே வியப்பாக இருக்கிறது.

ஆட்சிக்கு வராமல் எதுவுமே செய்ய முடியாதா?
ரஜினிகாந்த்தால் ஆட்சிக்கு வராமல் எதுவுமே செய்ய முடியாதா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். அவர் எதை நம்புகிறார்? ஆன்மிக விழிப்புணர்வு தேவை என நம்புகிறார் என்றே வைத்துக்கொள்வோம். அதையே அவர் பிரச்சாரம் செய்யலாமே… விவேகானந்தர் செய்தாரே… இளைஞர்களை அணிதிரட்டி எளிய மக்களுக்கான இலவச, மலிவு விலை மருத்துவச் சாலைகள் அமைக்கலாம். மாலை நேர வகுப்புகள் நடத்தி, ஏழை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு வகை செய்யலாம். தீண்டாமை தவறு; இறைவன் படைப்பில் அனைவரும் சமம் என்று கிராமம், கிராமமாகச் சென்று பிரச்சாரம் செய்யலாம். பணத்துக்காக எதையும் செய்யலாம் என நினைக்கும் விழுமியங்களின் வீழ்ச்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்யலாம். ஆனால் மசாலா படத்தில் நடித்து நூறு கோடி சம்பளம் வாங்கிக்கொண்டு, எளிய வாழ்க்கை, ஆன்மிகம் என்று பிரச்சாரம் செய்தால் நாலு பேர் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். அதற்கு உண்மையாகவே ஆசை துறந்து வீதியில் இறங்க வேண்டும்.. பிரச்சினைதான். பாவம்.

போராட்டங்கள், கலவரங்கள் கூடாது என்கிறார். அவர் அறவழி, அகிம்சை போராட்டத்தை முன்னால் நின்று நடத்திக் காண்பிக்கலாமே. அவர் நண்பர் ப.சிதம்பரம், கமல்ஹாசன் எல்லோரும் குடியுரிமை சீர்திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு எல்லாம் மிகத் தவறான இந்தியாவின் அடிப்படைகளையே தகர்க்கும் மோசமான நடவடிக்கைகள்; சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் என்று சொல்கிறார்கள். ரஜினிகாந்த் கொஞ்சம் முயற்சி செய்து அந்தச் சட்டங்களையெல்லாம் படித்துப் பார்த்துவிட்டு, அறவழியில் அவற்றை எதிர்த்துப் போராடுவது எப்படி என்று காண்பிக்கலாமே. சரி, ஒருவேளை அந்தச் சட்டங்கள், நடவடிக்கைகள் சரியானவை என்று நினைக்கிறார் என்றால் தைரியமாக அவற்றை ஆதரித்து அறிக்கை விடலாமே. அமைதியான ஓர் ஆதரவுப் பேரணி நடத்தலாமே.

எதுவுமே செய்யாமல் அமைதியான முறையில் கோலம் போட்டு எதிர்ப்பை காட்டுபவர்களைக் கைது செய்யும் அரசை வேடிக்கை பார்ப்பவர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு நான் ஆட்சி செய்கிறேன் என்று நாளை ஓட்டுக் கேட்டு வருவார்? எத்தகைய அபத்தம் இது? இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே அரசியலை ஒருவர் இவ்வளவு கேவலப்படுத்தியிருப்பாரா என்பது ஐயம்தான்.

Whatsapp Article done by Rajan kurai

Related Images: