இயக்குநராகவும் நடிகராகவும் மிகப்பெரிய இடைவெளி தரப்பட்டிருந்த சேரனின் ஒரு தரமான ரீ எண்ட்ரிதான் இந்த ‘ராஜாவுக்கு செக்’.டூயட் பாட விரும்பாமல் தனது வயதுக்கு ஏற்ற பாத்திரம் ஒன்றில் நடித்த வகையில் நல்லபடியாச்ன ஒரு கவனத்தை ஈர்க்கிறார் அவர்.

குற்றப்புலனாய்வு காவல் அதிகாரியாகப் பணியாற்றும் சேரன், ஒரு வழக்கில் அதிரடி நடவடிக்கை எடுத்ததால்,அவரால் பாதிக்கப்பட்ட கிரிமினல்களால் சொந்த மகளுக்கே சிக்கல் ஏற்படுகிறது. காதல் என்ற பெயரில் ஒரு கிரிமினல் அவரது மகளைக் கடத்திக்கொண்டு டார்ச்சர் செய்ய, அதனால் ஒரே இரவுக்குள் பலமுனைத் தாக்குதல்களை எதிர்கொள்கிறார். அவற்றைச் சமாளித்து மீண்டாரா? என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கும் படம் ராஜாவுக்கு செக்.

படத்தில் தனிக்காட்டுராஜாவாகப் புகுந்து விளையாடியிருக்கிறார் சேரன். குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்குரிய அலட்சிய மிடுக்கையும் பாசமிகு மகள் மீதான தந்தையின் அன்புப் பெருக்கையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.மது,புகைக் காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன.அவசியம் ஏற்படாமல் சேரன் பாத்திரம் செயின் ஸ்மோக்கராக, நான்ஸ்டாப் குடிகாரராக காட்டப்பட்டிருப்பதைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்து தன்னந்தனியனாக அவர் காட்டும் உணர்ச்சிகளில் நம்மையும் கலங்க வைக்கிறார்.பொருத்தமாகக் காட்சிகளைக் கோர்த்திருக்கும் படத்தொகுப்பாளரும் பாராட்டுக்குரியவர்.

படத்தில் நாயகி என்றால் சேரனின் மகளாக நடித்திருக்கும் நந்தனா வர்மாதான். சேரனுக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். காட்சிமொழியில் அவர் உரையாடுவது அழகு. சேரனின் மனைவியாக சில காட்சிகளில் வருகிற சரயூமோகன் பொருத்தமாக நடித்திருக்கிறார், இவர்களது விவாகரத்துக்கான காரணம் குழப்பமாக இருக்கிறது.

சிருஷ்டிடாங்கேவுக்கு நல்ல வேடம். சரியாக நடித்து வரவேற்புப் பெறுகிறார். இவரை 4 பேர் கற்பழித்தார்கள் ஓ.கே. அதற்காக குப்பைத்தொட்டியில் அவர்கள் ஒவ்வொருவராக பயன்படுத்தப்பட்ட காண்டம்களைப் போடுவதை அவ்வளவு விலாவாரியாகக் காட்டத்தான் வேண்டுமா? வில்லன் இர்ஃபானுக்கு முக்கிய வேடம். இளமை மற்றும் பணத்திமிரில் அவர் செய்யும் வேலைகள் பார்க்கிறவர்களைக் கோபப்பட வைக்கிறார்.எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பது கதையைப்போலவே ஒரு சொல்லவொண்ணா சோகம். வினோத் எஜமான்யாவின் இசையில் ஒரே பாடல்தான் இருக்கிறது. பின்னணி இசை ம்ம்ம்…என்னத்தைச்சொல்ல?

எழுதி இயக்கியிருப்பவர் சாய் ராஜ்குமார்.எடுத்த கதையிலிருந்து கொஞ்சமும் தடம் மாறாமல் தடுமாறாமல் சிறப்பாக இயக்கியிருக்கிறார். பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் பார்த்தே தீரவேண்டிய படம்.

Related Images: