தமிழ் சினிமாவின் மொத்த முத்த மன்னன் கமல் மீண்டும் ஒரு முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். கமல் தன்னிடம் அனுமதி பெறாமல் திடீரென்\று முத்தமிட்டதாக ‘புன்னகை மன்னன்’ரேகா பகீர் புகார் தெரிவித்துள்ளார்.
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன், ரேகா நடித்த திரைப்படம் புன்னகை மன்னன். 1986-ம் ஆண்டு வெளியான அந்த திரைப்படத்தின் முத்தக்காட்சி குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. 2019-ம் ஆண்டு நடிகை ரேகா கொடுத்த நேர்காணலில் புன்னகை மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சி குறித்து பேசினார். அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் புன்னகை மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சி குறித்து அப்போது தனக்கு எதுவுமே தெரியாது என்றும், தன்னிடம் எதுவுமே கூறாமல் அந்தக்காட்சி படமாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அந்த நேர்காணல் வீடியோ தற்போது வைரலாகியுள்ள நிலையில் அது குறித்து ரேகா விளக்கம் அளித்துள்ளார். புன்னகை மன்னன் படப்பிடிப்பு தளத்தில் என்ன நடந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதில், இது குறித்து நான் 100 முறை சொல்லிவிட்டேன். அந்த முத்தக்காட்சி என்னிடம் சொல்லாமலே எடுக்கப்பட்ட காட்சி. மக்கள் திரும்ப திரும்ப இதையே கேட்கிறார்கள். இதற்கு பதிலளித்தே நான் சோர்வாகிவிட்டேன். அந்த முத்தம் ஆபாசமாக இருக்காது. காட்சிக்கு அது தேவையான ஒன்றாக இருக்கும். ஆனால் அந்தக்காட்சி எடுக்கப்பட்டபோது நான் சிறுமி. அதைப்பற்றி எல்லாம் எனக்கு தெரியாது.
காட்சி படமாக்கப்படும்போது நான் சொன்னது நினைவிருக்கிறதா? என்று கமலிடம் கே.பாலச்சந்தர் கேட்டார். அப்போது நான் கண்களை மூடிக்கொண்டு இருந்தேன். காட்சியின்படி 1,2 என்று கமல் எண்ணுவார். அப்போது திடீரென்று அவர் என்னை முத்தமிட்டார். அந்தக்காட்சியை தியேட்டரில் பார்க்கும்போது தான் அது எவ்வளவுபெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என தெரிந்துகொண்டேன்.
இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும் அது தொடர்பான கேள்வி என்னை துரத்திக்கொண்டே இருக்கிறது. எனக்கு தெரியாமலே அந்தக்காட்சி எடுக்கப்பட்டது என்பதை மக்கள் நம்ப மறுக்கிறார்கள். இது தொடர்பாக யாரும் மன்னிப்பு கேட்க வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்தக்காட்சிக்கு அனுமதி கேட்டிருந்தால் நான் ஒப்புக் கொண்டிருக்கமாட்டேன். அது அவசரமாக எடுக்கப்பட்ட காட்சி. அது முடிந்துவிட்டது. அதை திரும்பிப் பார்க்க நான் விரும்பவில்லை. ஆனால் அந்தக் காட்சிக்கு பின் இனிமேல் கவனமாக இருக்க வேண்டுமென்று கற்றுக்கொண்டேன் என தெரிவித்தார்.
தற்போது வீடியோ வைரலாகி வரும் நிலையில் இயக்குநர் கே.பாலச்சந்தரும், கமல்ஹாசனும் செய்தது தவறு என பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். படக்காட்சிக்கு தேவை என்றாலும் காட்சியில் தொடர்புடைய நாயகியிடம் அனுமதி பெறாமல் அவருக்கு முத்தமிடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். எனவே மக்கள் நீதி மய்யம் லெட்டர் பேடில் விரைவில் ஒரு மன்னிப்புக் கடிதத்தை எதிர்பார்க்கலாம்.