ஐஷ்வர்யா
க.பாலாஜி
“மாட்டுத்தோல், ஆட்டுத்தோல் உறிப்பவர்களிடமிருந்து அதை வாங்கிப் பதம் செய்தால்தான் மிருதங்கம் தயாரிக்க முடியும். தோலைப் பற்றி பேசாமல் மிருதங்கம் குறித்துப் பேச முடியாது.”
இசையின்மீது கட்டமைக்கப்பட்ட சாதியச்சமூக அரசியல் இங்கு பன்னெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. தமிழர் இசைக்கருவியான பறை, இன்று வரை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் இசைக்கருவியாகவும், இறப்புக்கான இசைக்கருவியாகவும் மட்டுமே பார்க்கப்பட்டுவருகிறது. மிருதங்கம் செய்பவர்கள் பற்றி பாடகர் டி.எம்.கிருஷ்ணா எழுதியிருக்கும் ‘செபாஸ்டியன் அண்டு சன்ஸ்’ புத்தகம், இது தொடர்பான விவாதத்தை அழுத்தமாக மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறது.
கர்நாடக இசைக் கச்சேரிகளில் இசைக்கப்படும் மிருதங்கத்தின் உருவாக்கம் மற்றும் வரலாறு, அதற்காகப் பதனிடப்படும் மாட்டுத்தோல், ஆட்டுத்தோல், அவற்றை உருவாக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், அவற்றை வாசிப்பவர்கள் எனத் தோல் இசைக் கருவிகளைச் சுற்றி பன்னெடுங்காலமாக நிகழும் அரசியல் குறித்து கிருஷ்ணாவின் இந்தப் புத்தகம் பதிவு செய்திருக்கிறது. பிப்ரவரி 2-ம் தேதியன்று, சென்னை கலாஷேத்ராவில் இந்தப் புத்தகம் வெளியிடப்பட இருந்த நிலையில், புத்தக வெளியீட்டுக்கான அரங்க அனுமதியைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக கலாஷேத்ரா நிர்வாகம் திடீரென அறிக்கை வெளியிட்டிருந்தது.
கலாஷேத்ரா அறிக்கை
“கலாஷேத்ரா அமைப்பு, மத்திய அரசின் கலசாரத்துறையின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். சமூகத்தின் அமைதியைக் குலைக்கும் விதத்தில் இருக்கும் எந்த நிகழ்ச்சியும் எங்கள் நிறுவனத்தில் நடத்த அனுமதிக்கப்படாது. கிருஷ்ணாவின் புத்தகத்தைப் பற்றிய மதிப்புரை, செய்தித்தாள் ஒன்றில் இடம்பெற்றிருந்தது. அதில், புத்தகம் பேசும் அரசியல் மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து எழுதியிருந்தார்கள். எங்கள் ஆடிட்டோரியத்தை நிகழ்ச்சி நடத்த அனுமதித்த சமயம் இதுபோன்று சர்ச்சைகள் இருப்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. அதனால் நிகழ்ச்சி நடத்துவதற்கான அனுமதியை நாங்கள் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம். அரங்கத்துக்காகப் பெற்ற வாடகைத் தொகை திரும்பக் கொடுக்கப்படும்” என்று கலாஷேத்ராவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபற்றி பேசிய டி.எம். கிருஷ்ணா, “கலாஷேத்ரா இயக்குநர், பப்ளிஷருக்கும் எனக்கும் ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதன் வழியாகவே அவர்கள் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார்கள் என்பதை அறிந்துகொண்டேன். மிருதங்கம் செய்பவர்களது வரலாறு, அவர்கள் இதற்காகச் செலவிடும் உழைப்பு, சிந்தனை ஆகியவற்றுக்கு நாம் எந்தவித அங்கீகாரமும் கொடுத்ததில்லை. எனது முதல் புத்தகத்தில், கர்நாடக சங்கீதம் குறித்த வரலாற்றையும் அதில் இருக்கும் அரசியலையும் பதிவு செய்திருந்தேன். ஆனால், சங்கீத இசைக்கருவிகளை உருவாக்குபவர்கள் குறித்து எதுவுமே அதில் பதிவுசெய்யவில்லை. இது, எனக்கு ஒருவித குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகப் பல கள ஆய்வுகளை மேற்கொண்டு எழுதப்பட்டது இந்தப் புத்தகம்.
மிருதங்கத்தைத் தயாரிப்பவர்கள், அவர்களது வரலாறு, அவர்கள் அந்த இசைக்கருவிகளை உருவாக்குவதற்காகச் செலவு செய்யும் உழைப்பு குறித்து, நமது சமூகம் எந்தவித அங்கீகாரமும் கொடுத்ததில்லை. மிருதங்கம் உருவாக்குபவர்கள், சமுதாயத்திலும் தனது தொழிலிலும் சந்திக்கும் கஷ்டங்கள் குறித்தும் நாம் கண்டுகொள்வதில்லை. இவை அத்தனையையும் இந்தப் புத்தகம் பதிவு செய்கிறது. மாட்டுத்தோல், ஆட்டுத்தோல் உறிப்பவர்களிடமிருந்து அதை வாங்கிப் பதம் செய்தால்தான் மிருதங்கம் தயாரிக்க முடியும். தோலைப்பற்றி பேசாமல், மிருதங்கம் குறித்துப் பேச முடியாது. அவர்கள் பட்ட கஷ்டங்களைப் பதிவுசெய்யாமல், உண்மை வரலாற்றை எப்படி எழுதுவது? இது, ஒரு சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால், அதுதானே நிஜம். அந்த நிஜம் குறித்துக் கேள்வி எழுப்புவதும் சிந்திப்பதும், அதற்கு ஏற்றாற்போல தன்னை மாற்றிக்கொள்வதும் தானே ஜனநாயகம்? உண்மையில், மிருதங்கப் படைப்பாளர்கள் குறித்த இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை கலாஷேத்ராதான் இழந்துவிட்டது” என்றார்.
என்ன விமர்சனம் வேண்டுமானாலும் வையுங்கள்; கேள்விகளை எழுப்பினால் போதும்!' -டி.எம்.கிருஷ்ணா
Also Read
என்ன விமர்சனம் வேண்டுமானாலும் வையுங்கள்; கேள்விகளை எழுப்பினால் போதும்!’ -டி.எம்.கிருஷ்ணா
இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் கல்லூரியில், குறிப்பிட்ட அதே நாளில் நடந்தது. மிருதங்கக் கருவியை உருவாக்கும் கலைஞர்கள் மேடையேற்றப்பட்டு, அவர்கள் மூலம் புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்தை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் மற்றும் ராஜாஜி-காந்தி ஆகியோரின் பேரனும் ஆய்வாளருமான ராஜ்மோகன் காந்தி இருவரும் வெளியிட்டனர். ராஜ்மோகன் காந்தி பேசுகையில், ”கலாஷேத்ரா நிறுவனம் நிகழ்ச்சியை ரத்து செய்திருக்காவிட்டால் அரங்கம் இப்படி நிரம்பி வழிந்திருக்காது. கிருஷ்ணா, நீங்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் அனுப்புங்கள்!” என்று சொல்லவும், அரங்கம் முழுவதும் சிரிப்பலை.
“மிருதங்கத்துக்கே இந்த நிலை எனும்போது, தோல்கருவிகளுக்கெல்லாம் முன்னோடியான பறையின் நிலை என்ன? உண்மையில், மிருதங்கமும் பறைதான். மிருதங்கப்பறை.”
மிருதங்கத்துக்கே இந்த நிலை எனும்போது…
புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய திருமாவளவன், “புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை கலாஷேத்ரா ரத்துசெய்ததும், நான் வெளியிடுகிறேன் என்கிற காரணத்தால்தான் ரத்து செய்தார்களோ என நினைத்தேன். ஆனால், புத்தகத்தில் இருக்கும் கருத்துகள்தான் காரணம். மிருதங்கக் கலைஞரான பாலக்காடு மணி ஐயருக்கும் மிருதங்கத் தயாரிப்புக் கலைஞரான பர்லாந்து (எ) பெர்னாண்டஸுக்கும் அவர்கள் சார்ந்த சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உறவுமுறை இருந்திருக்கிறது. பர்லாந்து, தலித் கிறிஸ்தவர். ‘தான் வார்பிடித்து உருவாக்கும் மிருதங்கம், அவர்களின் வீட்டு பூஜையறை வரை செல்கிறது. ஆனால், சாதியின் காரணமாகத் தன்னால் அவர்களது வீட்டு வாசற்படி ஏறமுடியவில்லை’ என்பதை மிருதங்கப் படைப்பாளர் சொன்னதாக கிருஷ்ணாவின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியால்தான் புத்தகத்தை வெளியிட மறுத்திருக்கிறார்கள்.
நாலு வர்ணம்தான் இன்றும் இந்த நாட்டை ஆட்சிசெய்துகொண்டிருக்கிறது என்பதற்கு அவர்கள் ரத்துசெய்ததுதான் சாட்சி. மிருதங்கத்துக்கே இந்த நிலை எனும்போது, தோல்கருவிகளுக்கெல்லாம் முன்னோடியான பறையின் நிலை என்ன? உண்மையில், மிருதங்கமும் பறைதான். மிருதங்கப்பறை. உழைக்கும் மக்களின் கருவிகளான தோல் இசைக்கருவிகளை என்றைக்குமே இந்தச் சமூகம் உதாசீனப்படுத்திவந்துள்ளது. ‘நாலு வர்ணத்தையும் நானே படைத்தேன்’ என்றார் கிருஷ்ண பரமாத்மா, சமத்துவமும் ஜனநாயகமும் பேசுகிறார் இந்தக் கிருஷ்ணா. கிருஷ்ணர் என்றாலே கலகம்தான். இந்தக் கலகம் கேள்விகளை எழுப்பட்டும். அவர்களைச் சிந்திக்க வைக்கட்டும். அதுவே இந்தப் புத்தகத்தின் வெற்றி” என்றார்.