சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்ட திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் உடல்நிலை பற்றி திமுகவின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் விசாரித்து வருகின்றனர். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

98 வயதான பேராசிரியர் அன்பழகனுக்கு வயது மூப்பு காரணமாக நெஞ்சு சளி ஏற்பட்டு நேற்று இரவு முதல் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக இரவு 8. 30 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் ஐசியு பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நேற்று இரவு வந்து பார்த்துவிட்டு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், இன்று காலை 8.40 மணியளவில் மீண்டும் அப்பல்லோவுக்கு வந்தார். அவரிடம் மருத்துவர்கள் பேராசிரியரின் உடல் நிலையை விளக்கியிருக்கிறார்கள்.“சுவாசிக்க ரொம்ப கஷ்டப்படுகிறார். செயற்கை சுவாசம் ஏற்படுத்தும் வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது”என்றும் ஸ்டாலினிடம் மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இதைக் கேட்ட ஸ்டாலின் தன்னோடு வந்த திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரனை அழைத்து, ‘நீங்க இங்கயே இருங்க. அவ்வப்போது எனக்கு தகவல் சொல்லுங்க’என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். பேராசிரியர் அன்பழகனின் குடும்பத்தினரோடும், மருத்துவர்களோடும் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்திவருவதாகத் தெரிகிறது.