இயக்குநர் பாரதிராஜா, தமிழ்த் தேசியம் தொடர்பாகத் தன்னுடைய கருத்துகளைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறார். தமிழர் அல்லாத எவரும் தமிழகத்தை ஆளக்கூடாது எனத் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று தனியார் செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பாரதிராஜாவிடம், ‘ரஜினி தமிழகத்தை ஆளக்கூடாது என்று சொல்லும் நீங்கள், ரஜினியின் பிறந்த நாள் கூட்டங்களில் கலந்துகொண்டு, அவரைப் புகழ்ந்து பேசுவது ஏன்?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “ரஜினி என்னுடைய நண்பர். எளிமையான மனிதர். ஆனால், அவர் தமிழ்நாட்டை ஆள நினைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மற்ற மாநிலங்களில், அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே முதல்வராக ஆட்சி செய்ய முடியும். அதுதான் விதி. எனவே, எங்கள் மண்ணின் மைந்தன் எங்களுக்கு ஏன் முதல்வராகக் கூடாது?
வெள்ளைக்காரன் தமிழ்நாட்டை ஆள்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ, அதேபோல்தான் ரஜினி ஆள நினைப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தவறான ஒரு முன்னுதாரணத்தை வைத்துக்கொண்டு, ‘முன்பு இவங்க முதல்வராக இல்லையா, அவங்க இல்லையா?’ என்று கேட்கக்கூடாது. தமிழன் தெரியாமல் தூங்கித் தொலைத்துவிட்டான். இப்போது கொஞ்சம் விழித்துப் பார்க்கிறான்.
‘நான் தமிழன்’ என ரஜினி தொடர்ச்சியாகச் சொன்னாலும், அவர் வாழ வந்தவர். தமிழர் இல்லை” எனப் பதில் அளித்துள்ளார் பாரதிராஜா.
இதனால் பாரதிராஜாவைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.